உழவனின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

பிராணிகளை நம்பி விவசாயம் செய்த வரை நாம் வளமாகத்தான் இருந்தோம். பழங்காலத் தமிழ் கிராமங்களில் ஒரு மனிதனின் கால்நடைச் செல்வத்தைப் பொறுத்தே அவனது செல்வநிலை கணக்கிடப்பட்டது. மக்கள்தொகை வளர்ந்த போது கால்நடைகளும் அதிகரித்து இருந்தால் இத்தகைய அவலம் நேர்ந்திருக்காது.

ஆனால், ஆடு, மாடு, கோழி வளர்ப்பைத் தவிர்த்து எந்திரங்களை ஈடுபடுத்தியதால் ஏற்பட்ட பிரச்சினை தான் இன்று விஸ்வரூபமெடுத்து விவசாயத்தையே வீழ்த்திவிட்டது. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஈடுசெய்யும் அளவிற்கு கால்நடை வளர்ப்பும், பராமரிப்பும் மேம்பட்டிருந்தால் அது உணவுச் சமநிலைக்கு வழிவகுத்திருக்கும். கால்நடைகளின் கழிவு உரமாகும். பால் ஊட்டமாகும். இயற்கையே இறைவனாக எண்ணிய நம் முன்னோர் காட்டிய வழியை நாம் மறந்ததால் தான், இத்தகைய பிரச்சினைக்கு ஆளாகியுள்ளோம்.

ஆகவே, அரசாங்கம் விவசாயிகளையும், கால்நடைப் பண்ணையாளர்களையும் காப்பாற்றினால் மட்டுமே நம் வருங்கால சந்ததியினர் பட்டினியில் இருந்து காக்கப்படுவர்.

நம் நாட்டு உணவுக் கிடங்குகளில் உள்ள நெல்லைப் பாதுகாத்து மக்களுக்கு வழங்கினாலே, நம் அரிசித் தேவை பூர்த்தியாகிவிடும். ஆகவே நெல், கரும்பு போன்ற நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து சத்தான, பூச்சிகள் அண்டாத சிறுதானியங்களும், நீர்வளம் அதிகம் தேவைப்படாத, கால்நடை தீவனங்களான சோயா, மக்காச்சோளம் போன்றவைகளும் பெருமளவில் பயிரிடப்பட வேண்டும்.

இந்த மாற்றுச் சிந்தனை மக்கள் மனதில் வந்தால், மாற்றுப்பயிர்களை விளைவிக்க விவசாயிகள் முயன்றால் உழவும், உழவு சார்ந்த பிற தொழில்களும் கண்டிப்பாக வளம் பெறும்.

அதேசமயம் விளைவிக்கப்பட்ட பொருட் களுக்கு சரியான விலை கிடைத்தால் மட்டுமே விவசாயியின் வாழ்வு வளமாகும். உழவர்கள் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்யும் “உழவர் சந்தை” திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும். இது நடந்தால் மட்டுமே இடைத்தரகர்களால் இழக்கும் பணம் விவசாயிக்கும், நுகர்வோருக்கும் பயன்படும். “மாத்தி யோசி” என்பது இன்று உலகின் தாரக மந்திரமாகியுள்ளது. ஆகவே விவசாயத்திலும் மாற்றி யோசிக்க வேண்டியது அவசியம். பெருகிவரும் மக்கள் செல்வத்திற்கு ஈடாக கால்நடைச் செல்வங்களைப் பெருக்குவோம். மாற்றுப் பயிர்களை நாடுவோம். மரபு வழியில் உழவு செய்வோம். நேரடி விற்பனைக்கு வழிவகுப்போம்.

உழவனின் சிரிப்பில்

இறைவனைக் காண்போம்”

உழவர் தின நல்வாழ்த்துக்கள்.

– கோமதி வெங்கட், திருவரங்கம்.

daily thanthi

Leave a Reply