உலக கோடீஸ்வரர் பட்டியலில் ஒரே ஒரு தமிழர்

உலக அளவில் இருக்கும் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. 2017-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில்  முதல் 250 இடத்தில் இந்தியாவில் இருந்து பத்து பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் 102-வது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டாலர். 
 சிவ நாடாரின் சொந்த ஊர் திருச்செந்தூரிலிருந்து சுமார் பத்து கி.மீட்டர் தொலைவில் உள்ள மூலைப்பொழி. 1945-ல் இந்த ஊரில்தான் பிறந்தார் சிவ நாடார். அப்பா சுப்பிரமணிய நாடார் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி. அம்மா, வாமசுந்தரி தேவி. இவர், தினத்தந்தி நாளிதழைத் தொடங்கிய சி.பா.ஆதித்தனாரின் உடன்பிறந்த சகோதரி.
சிவ நாடார் தனது  பள்ளிப்படிப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர் படிப்பை மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார். இதன்பிறகு கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு, டாக்டர் பட்டமும் பெற்றார்.
1967-ல் புனேவில் இருந்த வால்சந்த் குரூப் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு  ஓராண்டு காலம் வேலை பார்த்தவர், டி.சி.எம். டேட்டா புராடக்ட்ஸ் நிறுவனத்தில் நிர்வாகப் பயிற்சியாளராக வேலைக்குச் சேர்ந்து டெல்லிக்கு போனார். சிவ நாடார் ஒரு பிஸினஸ்மேனாக உருவெடுத்தது இந்தக் காலகட்டத்தில்தான்.
தவிர, வால்சந்த் குரூப் நிறுவனத்திலிருந்து டி.சி.எம். நிறுவனத்திற்கு அவர் வேலை மாறியதால்தான் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை பற்றி அவரால் தெளிவாக அறிய முடிந்தது. பிற்காலத்தில் மிகப் பெரிய ஐ.டி. நிறுவனம் தொடங்கி நடத்தவும் இந்த முடிவுதான் அடிப்படையாக இருந்தது.
டி.சி.எம். நிறுவனத்தில் மிகக் கடுமையாக வேலை பார்த்ததன் விளைவு, அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்திய அளவில் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாக மாறினார். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சொந்தமாக பிஸினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் டி.சி.எம். நிறுவனத்தை விட்டு விலகினார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஐந்து பேரை தன்னுடன் இணைத்துக் கொண்டார்.
1975-ல் அவர் சொந்தமாக பிஸினஸ் தொடங்கும்போது அவருடைய முதல் சாய்ஸாக இருந்தது எலெக்ட்ரானிக்ஸ் துறைதான். டெலிடிஜிட்டல் கால்குலேட்டர்களை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்க முடிவு செய்தார். மைக்ரோகாம்ப் என்று பெயர் சூட்டப்பட்ட இந்நிறுவனம் நல்ல லாபத்தைத் தரவே, கம்ப்யூட்டர் விற்பனையில் இறங்கினார் சிவ நாடார். 1976-ல் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (ஹெச்.சி.எல்.) நிறுவனத்தைத் தொடங்கினார். இருபது லட்ச ரூபாய் பணத்தில் இந்நிறுவனத்தை தொடங்கினார்.
அந்த நேரத்தில் சிவ நாடாருக்கு சாதகமாக ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. 1977-ல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்துவிட்டு, ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. ஜனதா அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக இருந்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை நாற்பது சதவிகிதமாக குறைத்துக் கொள்ள வேண்டும்; இல்லா விட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இம்முடிவை ஏற்றுக் கொள்ள விரும்பாத கோகோ கோலா நிறுவனமும், ஐ.பி.எம். நிறுவனமும் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. அன்றைய தேதியில் இந்தியாவில் கம்ப்யூட்டரை விற்பனை செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ஐ.பி.எம்.தான். ஐ.பி.எம்.-ன் இந்த முடிவு ஹெச்.சி.எல். நிறுவனம் கம்ப்யூட்டரை தயாரித்து, விற்பனை செய்வதற்கு சாதகமாக இருந்தது.
கம்ப்யூட்டருக்கான தேவை இந்தியாவைவிட சிங்கப்பூரில் அதிகமாக இருப்பதைக் கண்ட சிவ நாடார், சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, கம்ப்யூட்டருக்குத் தேவையான ஹார்டுவேர்களை விற்க ஆரம்பித்தார். இந்நிறுவனம் தொடங்கிய ஒரே ஆண்டில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையானது.
1983-ல் ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு கம்ப்யூட்டர் தொடர்பான உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வகையில் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்து விற்கத் தொடங்கினார். ‘பிசிபீ’ (சுறுசுறுப்பான தேனி) என்று தனது கம்ப்யூட்டருக்குப் பெயர் வைத்தார். கம்ப்யூட்டர் விற்பனை இந்தியாவில் சூடு பிடிக்கவே, 1987-ல் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் விற்பனை நூறு கோடி ரூபாயைத் தொட்டது.
1991-ல் நரசிம்மராவ் பிரதமரானபிறகு தாராளமயமாக்கல் கொள்கை வரவே, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து செயல்படத் தொடங்கும் வாய்ப்பு ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு கிடைத்தது. அமெரிக்காவின் ஹெச்.பி. நிறுவனத்துடன் இணைந்து புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் இறங்கியது. 
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சியால் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டதோடு, நாற்பது துணை நிறுவனங்கள் கொண்ட அமைப்பாகவும் மாறியது. இந்த நாற்பது நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, ஐந்து முக்கிய நிறுவனங்களாக மாற்றினார் சிவ நாடார்.
2004-ல் ஐந்து நிறுவனங்களாக இருந்த நிறுவனத்தை ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், ஹெச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் என இரு பெரும் நிறுவனங்களாக மாற்றினார். இன்றைக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது.
 
– ஏ.கே.கார்த்திகா

Leave a Reply