உணவு முழுக்க விசம்

மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும் விளைநிலங்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன?தமிழக அரசு நடத்தியிருக்கும் மண்வள ஆய்வு ஒன்றில், நச்சுத்தன்மை கொண்டதாக விளைநிலங்கள் மாறியிருப்பது தெரிய வந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உணவுப் பொருள் உற்பத்திக்கே தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஏற்கெனவே, வளைகுடா நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நம்முடைய உணவுப் பொருட்கள் தரமற்றவை என்ற சர்ச்சையில் இருக்கிறது. சமீபத்தில், ‘தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை அதிகம்’ என்று தமிழக விளைபொருட்களை வாங்க மறுத்ததுடன், தமிழக அரசுக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறது கேரள அரசு. ரசாயன உணவுகளாலேயே பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் ஆளாகி வரும் நிலையில், விளைநிலமே நஞ்சாகி இருப்பது என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என இதய சிகிச்சை மருத்துவரான முகுந்தனிடம் கேட்டோம்.

‘‘காய்கறிகளில் கலக்கிற பூச்சிக் கொல்லிகளும், ரசாயனங்களும் Micronutrients என்கிற நுண்சத்துகளை முழுமையாக அழித்துவிட்டன. குறிப்பாக மாலிப்டினம் (Molybdenum), செலினியம் போன்ற தாதுக்களே கிடைப்பதில்லை. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நீரிழிவு, ஆயுட்காலம் குறைவு, புற்றுநோய், இதயநோய் என்று பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இப்போது நிலமே நஞ்சாகிவிட்டதால் அந்தப் பாதிப்பு இன்னும் அதிகம் ஆகலாம்.

காய்கறிகளைத் தண்ணீரில் கழுவுவதன் மூலம் அதிலிருக்கும் நச்சுத்தன்மையை கொஞ்சம் குறைக்க முடியும். ஆனால், மண்ணிலேயே நஞ்சு கலந்திருந்தால் அது தாவரத்தின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஊடுருவும். அதன் பிறகு, அந்த விளைபொருளைக் கழுவினாலும் பயன் இல்லை. வேக வைத்தாலும் பயன் இல்லை. அதிலும் பூமிக்கடியில் விளையும் காய்கறிகள் இன்னும் நச்சுத்தன்மை மிக்கவையாகவே இருக்கும்.

மேகி பிரச்னையில் நாம் கவனிக்காத இன்னொரு கோணம் இருக்கிறது. மேகியுடன் கொடுக்கப்பட்ட மசாலாவை வெங்காயத்திலிருந்துதான் நெஸ்லே நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேகியில் காரீயம் அதிகமாக இருந்ததற்கு வெங்காயமும் முக்கிய காரணம் என்று இப்போது கூறியிருக்கிறார்கள். வெங்காயம் மட்டுமல்ல… பூமிக்கு அடியில் விளையும் பல காய்கறிகளிலும் காரீயம், ஆர்சனிக், ஸிங்க் எனப்படுகிற துத்தநாகம் போன்ற நச்சுகள் ஏற்கெனவே அதிகமாக இருக்கின்றன. இந்த நச்சு களின் அளவு இன்னும் அதிகமாகலாம்.

மண்ணிலிருக்கும் விஷத்தன்மை விளைபொருட்களோடு மட்டும் போய்விடாது. நாம் பயன்படுத்துகிற தண்ணீரையும் பாதிக்கும். பெங்களூரு விமான நிலையம் அருகில் புதிதாக குடியிருப்புப் பகுதிகள் உருவாகி வருகின்றன. இங்கு தண்ணீருக்காக போர் போடும்போது 500 அடி ஆழம் வரைகூட ஆர்சனிக், காரீயம் போன்ற நச்சுகள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த தண்ணீரை சுத்திகரிக்கவும் முடியவில்லை. இதுபோல சீர்கெட்ட பூமியில் மேயும் கால்நடைகளின் பால், இறைச்சியின் வழியாகவும் நமக்குப் பிரச்னைகள் வரலாம்’’ என்று எச்சரிக்கிறார் முகுந்தன்.

இயற்கை வேளாண் விவசாயியான சச்சிதானந்தம் உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என விளக்குகிறார். ‘‘இன்று 4 வயது குழந்தைகூட கண்ணாடி அணிந்திருக்கிறது, மலட்டுத்தன்மை கொண்ட விதைகளையும் பழங்களையும் சாப்பிட்டு பலரும் மலட்டுத்தன்மை கொண்டவர்களாகி விட்டார்கள். ரசாயன உரங்களால் இப்போது உச்சகட்ட அபாயத்தில் இருக்கிறோம். இந்த நேரத்திலாவது நாம் விழித்துக்கொண்டு இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். இயற்கை விவசாயம் என்பது புதிய விஷயம் இல்லை. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நாம் செய்து வந்த முறைதான் இயற்கை விவசாயம். இடையில் வந்த ரசாயன உரங்களை விட்டுவிட்டு பாரம்பரிய விவசாய முறைக்கே சென்றால்தான் மக்களையும் மண்ணையும் காப்பாற்ற முடியும்.

இந்த நேரத்தில் நாம் இன்னொரு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் வெளிநாட்டு நிறுவனங்களாலேயே தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இயற்கை விவசாயத்துக்கு எல்லோரும் மாறினால் இந்தியாவினால் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் இழக்க வேண்டியிருக்கும் என்பதால், மக்களைக் குழப்பும் வேலையை வெளிநாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

‘இயற்கை விவசாயத்தில் விளைச்சல் இருக்காது… லாபம் பெற 3 ஆண்டுகளாவது ஆகும்’ என்பவை எல்லாமே பொய் பிரசாரங்கள்தான். ரசாயன உரங்களுக்கு 100 ரூபாய் செலவு செய்து 150 ரூபாய் சம்பாதிப்பதைவிட, இயற்கையான தொழில்நுட்பங்களின் மூலம் 30 ரூபாய் கூட செலவில்லாமல் நியாயமான லாபத்தைப் பெற முடியும்’’ என்கிறார் சச்சிதானந்தம்.

இயற்கை வேளாண் விவசாயத்துக்காக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? தமிழக வேளாண் இயக்குநர் முனைவர் மு.ராஜேந்திரனிடம் கேட்டோம்…

‘‘1960களில் ஏற்பட்ட உணவுப்பொருள் பற்றாக்குறையை சமாளிக்கவே ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. பற்றாக்குறை நீங்கிய பிறகு நாம் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்க வேண்டும். ஆனால், மாறாமல் விட்டுவிட்டோம். இத்தனை ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வந்த ரசாயனங்களின் பாதிப்பு மண்ணில் இருக்கலாம் என்ற சந்தேகத்தால்தான் மண்வளப் பரிசோதனையை தமிழக அரசு மேற்கொண்டது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு, தமிழகத்தில்தான் 80 லட்சம் விவசாய நிலங்களின் மண் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட விவசாயி களுக்கு விளைநிலத்தில் இருக்கும் பிரச்னைகளைப் பற்றி கூறியிருக்கிறோம். தேவைப்படுகிற ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வருகிறோம்.

இயற்கை விவசாயம் நல்லது என்பதற்காக உடனடியாக நம்மால் மாறிவிட முடியாது படிப் படியாகத்தான் மாற் றங்களை மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் மீண்டும் நாம் உணவுப்பொருள் பற்றாக் குறையை சந்திக்க வேண்டியிருக்கும். முதலில் செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். நாங்கள் செயற்கை உரங்களை ஊக்குவிப்பது இல்லை. இயற்கை விவசாயத்துக்கு உதவி செய்யும் மண்புழு, தேனீ, வண்ணத்துப்பூச்சி, ஆந்தை, பாம்பு போன்ற உயிரினங்களை தோட்டங்களில் மீண்டும் உருவாக்குவதற்காக சில திட்டங்களை விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கிறோம்.

விவசாய நிலத்தை ஒட்டி பூந்தோட்டம் அமைக்கவும் உதவி கள் செய்து வருகிறோம். ஒரு வயலில் நன்மை செய்யும் உயிரினம் ஒன்று இருந்தாலே தீமை செய்யும் இரண்டு பூச்சியை அழித்துவிடும். ஆனால், அறியாமையினால் பூச்சியைப் பார்த்தாலே மருந்து அடிக்கக் கூடாது என்பதையும், முதல் 40 நாட்களுக்கு பயிர்களுக்கு எந்த மருந்தையும் அடிக்க வேண்டாம் என்றும் சொல்லி வருகிறோம். 2 ஆயிரத்து 500 சோலார் வாட்டர் அமைப்புகளையும், 77 ஆயிரம் பண்ணைக் குட்டைகளையும் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். மண்புழு உரத்துக்கான விவசாயக் கடனும் அரசு கொடுத்து வருகிறது.

முன்னோடி விவசாயிகளின் ஆலோசனைகளின்படி மாற்றங்களுக்கான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கேரள அரசு குற்றம் சாட்டியிருக்கிற அளவு தமிழக விளை பொருட்களில் நச்சுத்தன்மை இல்லை என்பதுதான் உண்மை!’’

அரசு செய்ய வேண்டியது என்ன?

நோய்களிலிருந்து மீளவும், எதிர்காலத் தலைமுறையையாவது ஆரோக்கியமானதாக உருவாக்கவும் சில கடமைகளை நாம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உரங்கள் தயாரிப்புக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மானியமாக இந்திய அரசு வழங்கி வருகிறது. அதில் சிறு பகுதியையாவது இயற்கை உரங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக செலவிட வேண்டும். இயற்கை இடுபொருட்களை ஏற்கெனவே தயாரித்து வரும் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.

இயற்கை விவசாயம் நடப்பதற்கு பசுக்கள் அவசியம் தேவை. நம்முடைய காய்கறிகளைப் புறக்கணிக்கும் கேரளாவுக்கு லாரி லாரியாக பசுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். பால் வற்றிப்போன மாட்டைக் கொன்றுவிட வேண்டும் என்ற தவறான மனநிலையிலேயே மக்களும் இருக்கிறார்கள். இந்த மாடுகளைப் பாதுகாத்தால் இயற்கை விவசாயத்துக்குப் பெரும் உதவி செய்யும்.

ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி கள் உண்டாக்கும் அபாயங்கள் பற்றியும் இயற்கை வேளாண் விவசாயத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிசா, சிக்கிம் போன்ற பல மாநிலங்கள் இயற்கை வேளாண் கொள்கையை செயல்படுத்தி வருகின்றன. தமிழகமும் இதேபோல முழுமையான இயற்கை வேளாண் மாநிலமாக மாற வேண்டும்!
நன்றி:தினகரன்.

Leave a Reply