உடலில்

அதிசயத்தை உங்கள் உடலுக்குள்ளே வைத்துக்கொண்டு, வெளியே அதிசயத்தைத் தேடாதீர்கள்!!!

ஒரு நகரத்திலிருந்து ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து நகரங்களையும், அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த நாடுகளையும் அடைவதற்கு அமைக்கப்பட்ட ரோடுகளை நாம் Highway அல்லது தமிழில் நெடுஞ்சாலை என்று அழைப்போம். இந்த நெடுஞ்சாலைகள் மனிதன் படைத்த மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று என்று கூட சொல்வார்கள்! அது சரி தானே? ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா? உங்களால் கற்பனையே பண்ண முடியாத, பிரம்மாண்டமான, மாபெரும் நெடுஞ்சாலை ஒன்று இருக்கிறது. அட, அப்படி ஒரு பெரும் நெடுஞ்சாலை எங்கே இருக்கிறது என்று யோசிக்கின்றீர்களா? அது வேறு எங்கும் இல்லை, உங்கள் உடலுக்குள்ளே இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பவில்லை என்றால் இன்னும் சற்று நேரத்தில் வாயைப் பிளந்து வியப்படையத் தயாராக இருங்கள்!

உங்களில் ஒவ்வொருவரிலும் அடங்கி இருக்கும் அந்தப் பிரம்மாண்டமான நெடுஞ்சாலை எது தெரியுமா? உங்கள் உடல் பூராகவும் படர்ந்து பரவியிருக்கும் இரத்த நாளங்களின் வலையமைப்புத் தான் அந்த நெடுஞ்சாலை ஆகும். இந்த வலையமைப்பின் ஊடாக நமது இதயம் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிந்து நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும், ஏன் ஒவ்வொரு உயிரணுவுக்கும் (Cell) இரத்தத்தை அனுப்புகின்றது. அட இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இதோ சொல்கிறேன்…!

ஒரு மனிதனின் உடம்பில் இருக்கும் அனைத்து இரத்த நாளங்களையும் எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்தால், அப்படி இணைக்கப்பட்ட அந்த நாளத்தின் நீளம் சுமார் 100,000 km கும் அதிகமாக இருக்கும்! நண்பர்களே, இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! 100,000 km நீளம் என்றால் எவ்வளவு என்று புரிகிறதா? சரி, இந்த நீளத்தைக் கற்பனை பண்ண முடியவில்லை என்றால் இதைப் பாருங்கள். பூமியின் சுற்றளவு சுமார் 40,074 km ஆகும். அப்படியென்றால் இப்படி இணைக்கப்பட்ட இரத்த நாளங்களுடன் நமது பூமியை 2.5 முறை சுற்றலாம் என்றால் அதன் நீளம் உங்களுக்கு இப்பொழுது புரியும்! நம்பவே முடியவில்லை அல்லவா?

பொதுவாக ஒரு சராசரி மனிதனின் உடலில் சுமார் 4-6 லிட்டர் இரத்தம் இருக்கும். இதில் உள்ள விசேஷம் என்ன தெரியுமா? நமது இதயம் இரத்தத்தை மிகவும் வேகமாக, குறிப்பாக 1.1 m/s அல்லது 4 km/h வேகத்தில் நமது உடலூடாக அனுப்புகிறது. இப்படி அனுப்பப்படும் இரத்தம் ஒரு முறை நமது உடலூடாகச் சுற்றி வர வெறும் ஒரு நிமிடம் தான் எடுக்கும். இதுவே உடலுக்கு வேலைக் கொடுக்கும் போது, இன்னும் வேகமாகச் சுற்றி வரும்.

எனவே இப்படி ஒரு மாபெரும் அதிசயத்தை உங்கள் உடலுக்குள்ளே வைத்துக்கொண்டு, ஏன் வெளியே அதிசயங்களைத் தேடுகின்றீர்கள்? என்ன, நான் சொல்வது சரி தானே? இதைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!

அது வரை தொடர்ந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும்,
உங்கள் SciNirosh (Niroshan Thillainathan)

Leave a Reply