இருவாட்சி

​நீலோற்பல மேரி, புதுச்சேரி கேள்வி // உங்கள் வன வாழ்வில் உங்களைக் கவர்ந்த பறவை ஒன்றைப் பற்றிச் சொல்லுங்களேன்?
‘பறவை’ என்று நீங்கள் குறிப்பிட்டது வானத்தில் பறக்கும் பறவையைத்தானே? சொல்கிறேன்.
ஒரு முறை டாப்ஸ்லிப் வனப்பகுதியில் பணியாளர்களுடன் ட்ரெக்கிங் சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஹெலிகாப்டர் ஒன்று தாழப் பறப்பதுபோல ‘ஹூய்ங்ங்ங்ங்’ என்ற இரைச்சல் கேட்டது.  உடன் வந்த அனுபவஸ்தரான பணியாளர் விளக்கினார்: “ஐயா! இது இருவாட்சி பறக்கறப்போ எழுப்புற றெக்கைச் சத்தமுங்கோ.”
’இருவாட்சி’ என்ற பெயரை மட்டுமே தெரிந்துகொண்டு, கவிதாயினிகள் சிலர் தங்களது ’என்டர்’  கவிதைகளில் அடித்துவிடுவதைப் படித்திருக்கிறேன். சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய நூலகத்திலும் விவரமாகப் படித்திருக்கிறேன். ஆனால் அன்றுதான் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. 

இது ஒரு எக்ஸாடிக் பறவை. அதாவது வெளிநாட்டைச் சேர்ந்தது. இந்தியாவிலும் ஆங்காங்கே வசிக்கிறது. குறிப்பாக டாப்ஸ்லிப்பில். பெரிய சைஸ்; வண்ணமயமான சிறகுகள்; அலகு மட்டும்  ஒன்றரை அடிக்கும்  மேல் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
சரி… அது ஏன் என்னைக் கவர்ந்தது என்று சொல்வதற்கு முன்னர் இன்னொரு சின்ன சம்பவத்தையும் சொல்கிறேன்.
ட்ரெக்கிங்போது இருவாட்சியின் சத்தம் பற்றிச் சொன்ன அதே பணியாளர், “அய்யா! இங்க பாருங்க. இந்த மரத்தில இருவாட்சி கூடு இருக்கும்” என்றார். மரமோ மிக உயரம். கூடு எதுவும் புலப்படும் உயரம் இல்லை அது. “எப்படிய்யா சொல்ற?”
“கீழ பாருங்க அய்யா. நெம்ப அத்தி நாத்துங்க மொளச்சிருகுது. அத்தனையும் அது போட்ட எச்சத்தில் இருந்து மொளச்சுதுங்க. அதுவும் பெண் இருவாட்சி போட்டதுங்க. அத வெச்சி இந்த மரத்துலதான் அதோட கூடு இருக்குதுன்னு சொல்லிப்போடலாம்.”
’இருவாட்சி அத்திப் பழம் மட்டும்தான் சாப்பிடுமா? அப்படிச் சாப்பிட்டாலும் கூட்டுக்கு வந்துதான் ஆய் போகுமா? அதுவும் பெண் பறவை மட்டும்தான் ஆய்போகும்போது அத்திப்பழ விதைகளை வெளியேற்றுமா?’ எனக்குள் சுவாரசியமான கேள்விகள்.
இதற்கான விடைகளைப் பணியாளர்களிடமும், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திலும் சேகரித்தேன். சொல்கிறேன். படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்!
இவைகள் எப்போதும் ஜோடியாகவே இருக்கும்; பறக்கும். ’காதலாகிக் கசிந்துருகி’ப் பெண் வயிற்றில் முட்டை உண்டானவுடன்தான் கூடு கட்ட சரியான மரத்தை அடர் வனத்துக்குள் ஆணும், பெண்ணும் தேடியலையும். (விடுமுறை நாட்களில் வீடு தேடி அலையும் மனித ஜோடிகளைப் பார்க்கும்போது எனக்கு இது ஞாபகம் வரும்.)
இயற்கையாகவே பொந்து இருக்கும் மரங்கள்தான் இருவாட்சி ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ஃபின் சாய்ஸ். அப்படிப்பட்ட பொந்தை முதலில் இரண்டும் சேர்ந்து சுத்தம் செய்யும். பிறகு பெண் பறவை ஒரு காரியம் பண்ணும் பாருங்கள். அப்பப்பா…
தன்னுடைய உடம்பில் இருக்கும் சிறகுகளை தனக்கு எட்டியவரை தன்னுடைய அலகால் இயன்றவரை பிடுங்கி ஒரு மென்மையான மெத்தையை அந்தப் பொந்தில் உருவாக்கும். இப்போது அந்தப் பெண் பறவை, ‘என்புதோல் போர்த்த’ உருவமாய்ப் பொலிவான இறக்கையெல்லாம் இழந்து, பறக்கும் திறனும் அற்று, வயிற்றில் முட்டைகளுடன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும்.
இந்தப் பறவைகளையும், அது போடும் முட்டைகளையும் மரத்தில் ஏறிப் பாம்புகள் தின்னாமல் இருக்க ஆண் பறவை ஒரு செயலைச் செய்யும். அது ஆச்சர்யத்தின் உச்சிக்கே உங்களை அழைத்துச் செல்லும். அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
(என்னுடைய ’எவனவன்’ திரைப்பட விமர்சனத்தால் கடுப்பேறியிருக்கும் ஆன்டிகள், தங்கள் சாபத்தை வாபஸ் வாங்கி, லைக் போட்டு ஆதரிக்க வேணுமாய் இரு வீட்டார் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் – அதாவது – ஆண் மற்றும் பெண் இருவாட்சிகள் சார்பாக. அப்போதுதான் அடுத்த இருவாட்சிப் பதிவு. சொல்லிப்புட்டேன்!)

************

Leave a Reply