இயற்கை சார்ந்த வேளாண்மை வரலாறு.

உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது

உணவின் ஆறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் எவையென நாம் முன்பே பார்த்தோம்.அவை 1.சர்க்கரைகள் ( Carbohydrates ) 2.புரதங்கள் ( Proteins ) 3.கொழுப்புகள் ( Fats ) 4.உயிர்ச்சத்துக்கள் ( Vitamins ) 5.தாதுக்கள் ( Minerals ) 6.நீர் என்பவாகும்.

இவற்றில் சர்க்கரை என்பதனை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் ( Photosynthesis ) மூலம் பெறுகின்றன.இதில் தாவரங்களின் இலைகள், சூரிய ஒளி மற்றும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிகழ்த்துகின்றன.இதில் ஆக்ஸிஜன் கழிவாக வெளியேற்றப்படுகின்றது.மேலும் இந்நிகழ்வில் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு, இயற்கை வடிவிலான ( Organic ) கார்பனாக மாற்றப்படுகின்றது.இது முதல்நிலை உற்பத்தி ( Primary Production ) எனப்படுகின்றது.

அடுத்ததாக தாவரங்கள் வேர்களின் மூலம் மண்ணிலிருந்து நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்களை உறுஞ்சுகின்றன.

பிறகு தாவர செல்களில் நடைபெறும் பல்வேறு வேதிவினைகள் மூலமாக உணவின் பிற ஊட்டச்சத்துக்களான புரதங்களும்,கொழுப்புகளும்,உயிர்ச்சத்துக்களும் பெறப்படுகின்றன.

இவ்வாறான வழிகள் மூலம்,மேற்சொன்ன ஆறு ஊட்டச்சத்துக்களும் தாவரங்களில் காணப்படுகின்றன. இவ்வாறாக தாவரங்கள் உணவை தாமே உற்பத்தி ( Autotroph ) செய்பவராக அமைகின்றன.

இதனால் தாவரங்கள், உணவு சங்கிலியில் முதல்நிலை உற்பத்தியாளர்கள் ( Primary Producers ) என்ற முதல் நிலையில் அமைகின்றன.

இனி இந்த அடிப்படையில், நம் முன்னோர்களான தொல் தமிழர்கள், இயற்கை சார்ந்த வேளாண்மையை எவ்வாறு மேற்கொண்டனர் என பார்க்கலாம்.

Leave a Reply