இயற்கை சாராத வேளாண்மை

20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, வெடிமருந்து தயாரிக்க பயன்படும் நைட்ரஜன் வேதிப்பொருட்கள், விவசாயத்தில் உரங்களாக புகுத்தப்படுகின்றன.இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் பெறலாம் என கூறப்பட்டது.

பிறகு பூச்சி கொல்லிகள் பயன்பாடும் அதிகரிக்கின்றது.நவீன விவசாயம் என்ற பெயரில் எந்திரங்கள் புகுத்தப்படுகின்றன.

இவ்வாறு தமிழர்களின் வேளாண்மைத் தொழில் பல வேண்டாத மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது.அதன் உச்சகட்டமாக இன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் வரை வந்து நிற்கின்றது.

சரி, இத்தகைய இயற்கை சாராத வேளாண்மையால் ஏற்படும் விளைவுகள் என்ன ?

இயற்கை சார்ந்த விவசாய முறையில் நுண்ணுயிர்கள் பயிர்களுக்கு தேவையான ஊட்டசத்துக்களை அளிக்கும்.எந்தவித இரசாயனங்களும் பயன்படுத்தபடுவதில்லை.

ஆனால் இயற்கைக்கு எதிரான விவசாயத்தில் உரங்கள்,பூச்சிகொல்லிகள் என பல்வேறு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் மண்ணில் வாழும் பல நுண்ணுயிர்கள் சிறிது சிறிதாக அழிந்துவிடும்.பிறகு விளைச்சல் குறைந்து விடும்.பிறகு மண் மலட்டுத் தன்மையுடையதாக மாறிவிடும்.எந்த செடியுமே அதில் முளைக்காது.மேலும் இவை பல்வேறு சுற்றுச்சூழல் கேடுகளையும் உண்டாக்குகின்றன.

இவ்வாறு இரசாயனங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன ?.

நம் உடலில் தினமும் கோடிக்கணக்கான மெட்டபாலிச வேதி வினைகள் நடக்கின்றன.இந்த வினைகளை இத்தகைய உணவுகள் நேரடியாக பாதிக்கின்றன.இதனால் நாம் பல்வேறு கொடிய நோய்களுக்கு அடுத்தடுத்து ஆளாகி வருகின்றோம்.மேலும் நம் உடலின் மெட்டபாலிச விகிதமும் குறைந்து கொண்டே வருகின்றது.

மெட்டபாலிச விகிதத்தின் முக்கியத்துவம் என்னவென்று பார்ப்போம்.உங்கள் உடலின் மெட்டபாலிச விகிதம் அதிகமென்றால், நீங்கள் உண்ணும் உணவு நன்கு செரித்து முழுவதும் ஆற்றலாக மாறிவிடும்.

ஆனால் உங்கள் உடலின் மெட்டபாலிச விகிதம் குறைவு என்றால், நீங்கள் உண்ணும் உணவு நன்கு செரிக்காது;செரித்த பகுதியும் முழுவதும் ஆற்றலாக மாற்றமடைவதில்லை.இதனால் நீங்கள் சிறிதளவே உண்டு வந்தாலும், உடல் பருமன் அதிகரிக்கும்.

இன்றைய விவசாயம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் :
இரசாயன உரம் பயன்படுத்தும் விவசாயத்தில் செலவு அதிகரித்து கொண்டே செல்கின்றது.இதனால் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கின்றது.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில்,எட்டே முக்கால் லட்சம் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று வேறு தொழிலுக்கு சென்றுள்ளனர்.இந்த நிலைமை இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேலும் மின் பற்றாக்குறை , நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைவது, பருவ மழை தவறுதல்,நீர் நிலைகள் அழிக்கப்படுவது,அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்சனை என நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.அதுவும் தமிழ்நாடு நீராதாரம் மிகவும் குறைவாக உள்ள மாநிலம் என்பது குறிப்படத்தக்கது.

இதனை எல்லாம் இணைத்து பார்க்கும்போது,இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில், மிகப்பெரிய உணவுப்பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

சரி இதற்கு என்னதான் தீர்வு ?

நாம் இனி இயற்கை சார்ந்த முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளையே சிறிது சிறிதாக உண்ண ஆரம்பிக்க வேண்டும்.ஆனால் நகர்மயமாக்கல் பெருகி வரும் இந்த நாளில், இத்தகைய உணவுப்பொருட்கள் எல்லோருக்கும் கிடைப்பது மிகக்கடினம்.

எனவே பெரும்பாலான மக்கள் சிறிது சிறிதாக கிராமங்களுக்கு திரும்பி, இயற்கை சார்ந்த விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.இதன் மூலம் அனைவரும் இயற்கை சார்ந்த உணவுகளை உண்ண வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் இதல்லாம் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என்கிறீர்களா ?.பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கும்போது, அதற்கான தீர்வுகளும் கடினமாகவே இருக்கும்.வேறு வழியில்லை.குறைந்த பட்சம் இதை பற்றி சிந்தித்தாவது பார்க்கலாமே.

இயற்கை சார்ந்த விவசாயம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில்,இந்தியாவில் எந்த அளவு ஏற்பட்டுள்ளது ?

இயற்கை சார்ந்த வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் அவர்களின் முயற்சியால், தமிழ்நாட்டில் இதைப்பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது.இவரின் வழிகாட்டுதலால் தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேர் இன்று இயற்கை சார்ந்த விவசாயம் செய்து வருகின்றனர்.திரு.நம்மாழ்வார் அவர்கள் இத்துறையில் அரை நூற்றாண்டு ஆராய்ச்சி அனுபவமுடையவர்.கால் நூற்றாண்டுக்கு மேலாக இதனை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர்.இவரை தமிழ்நாட்டு மக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

வட இந்தியாவில் வந்தனா சிவா போன்றவர்கள் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள்.இவர் தலைமையிலான குழுவே, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் வேப்ப மரத்திற்கான காப்புரிமை முயற்சியை தடுத்து நிறுத்தியது.இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இயற்கை சார்ந்த விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகின்றது.

கிராமம் சார்ந்த வாழ்வியலின் நன்மைகள் :

கிராமத்தில் வாழும்போதுதான் இயற்கை சார்ந்த தூக்க முறை,குளியல் முறைகள்,உணவு முறைகள் ஆகியவற்றை கடைபிடிக்க முடியும்.சுவாசிக்க சுத்தமான காற்று,குடிநீர்,நஞ்சில்லாத உணவு ஆகியன கிடைக்கும்.சாலை விபத்துக்கள்,மன அழுத்தம்,கொலை,கொள்ளை குறைந்த சூழ்நிலை அமையும்.

குழந்தைகள் விளையாட தாராளமான, பாதுகாப்பான இடம் கிடைக்கும்.முதியவர்களுக்கும் அமைதியான சூழல் அமையும்.மகிழ்ச்சி நிறைந்த கிராம விழாக்களில் பங்கு கொள்ள முடியும்.நமது சிறு வயது நண்பர்கள், பிடித்த உறவினர்களுடன் அடிக்கடி பழக முடியும்.

இதன் மூலம் இன்று குணப்படுத்த முடியாதவை என்று கூறப்படும் பல்வேறு கொடிய நோய்கள்,கிராமத்து இயற்கை சூழ்நிலையில் குணம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மேலும் கிராம வாழ்வியல் மூலமே நம் பாரம்பரிய விளையாட்டுகளை,கலைகளை மீட்டெடுக்க முடியும்.நாம் முன்பு கண்டு ரசித்த வண்ணத்து பூச்சி,தட்டான்,பொன்வண்டு,குழி வண்டு,பச்சைக்கிளி,சிட்டுக்குருவி ஆகியவற்றை நம் அடுத்த தலைமுறையும் கண்டு ரசிக்க வழி ஏற்படும்.சிந்திப்போமா ?.

Leave a Reply