இன்றைய 60+கள் அன்று

​படித்ததில் பிடித்தது…

இன்றைய 60+கள் அன்று::::::***** கண்ணம்மாக்களின் காலத்தில் கணேசன்கள் என்ன செய்தார்கள் என்று யோசித்துப் பார்த்தேன்..

அப்பாவிடம், அண்ணாவிடம் ஷேவிங் கற்று காயப்பட்டு டெட்டால் தடவினார்கள்.

முதுகு காட்டி போர்டில் எழுதின காட்டன் புடவை டீச்சர்களை பயந்தபடி சைட்டடித்தார்கள்.

கடந்த வருட நோட்டுகளில் மீந்த பக்கங்களைச் சேர்த்துத் தைத்த ரஃப் நோட்டுகளில் ‘என் ஆளு’ எனப்பட்டவர்களை வரைய முயன்றார்கள். நோட்டுகளில் “ஆளின்”பேரும் எழுதி,நண்பனால், கிளாஸ் வாத்தியார்ட்ட,போட்டுகொடுக்கப்பட்டு, வகுப்பில் தலைகுனிந்தும் நின்றார்கள்.கொஞ்சம் கவிதையும்.

ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி ரகசிய இடத்தில் முதல் தம் பழகி இருமி இருமி இருமினார்கள்.

சின்ன சைக்கிள்களில் காயப்பட்டுப் பழகி.. அதில் சிலர் சொந்தமாகவும் வாங்கி கெத்து காட்டினார்கள்.

தெய்வக் குத்தமாகிவிடு மென்பதால் கண்டிப்பாக asdfgf ;lkjhj என்று டைப்பிங் பழகினார்கள்.அங்கு ‘அவள்’ அமர்ந்த நாற்காலியில் அமர்வதையே பாக்யமாகக் கருதினார்கள்.

தாவணிப் பெண்களை போதுமான இடைவெளி விட்டு ஃபாலோ செய்து அதிகபட்சமாக பெயர் கேட்டு, மர ஸ்கேலில் காம்பஸால் செதுக்கி வைத்தார்கள்.

காரணம், நோக்கம் எதுவும் புரியாமல் தார் டின்னோடு அலைந்து திரிந்து இந்தியை ஒழிக்கப் பாடுபட்டார்கள்.

ABBA கேட்டார்கள். . 

சிலர் ஜானகிராமனும், ஜெயகாந்தனும் சிலர் ஜேம்ஸ் ஹார்ட்லி சேசும் படித்தார்கள்.

ஒரு முழம் அகலத்தில் பெல்பாட்டம் தைத்து நடு வயிற்றில் அகலமாக பெல்ட் பொட்டு ‘என்னடி மீனாட்சி?’ கமல் போல ஸ்டைல் செய்தார்கள்.

ஸ்டெப் கட்டிங் செய்து பாதி காதுகளை மறைத்து அப்பாக்களிடம் திட்டு வாங்கி பர்மா பஜாரில் ஃபாரின் டி ஷர்ட் வாங்கியணிந்தார்கள்.

அவரவர் இஷ்ட தெய்வம் போல கதாநாயகிகளைக் கத்தரித்து கப் போர்டு கதவுகளுக்குப் பின்னால் ஒட்டி வைத்து குட் நைட், குட் மார்னிங் சொன்னார்கள். அவர்களோடு டூயட் பாடிய எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் படங்களைப் பார்த்துவிட்டு தியேட்டர் வாசலில் பாட்டுப் புத்தகமும் வாங்கிச் சேகரித்தார்கள்.

அந்த கணேசன்கள் இப்போது வாக்கிங் போய்த் திரும்பும்போது மருமகள் மறக்காம வாங்கச் சொன்னதை மறந்துவிடுகிறார்கள். 

பேரன், பேத்திகளை டியூஷனிலிருந்து அழைத்து வருகிறார்கள். 

செய்தித்தாளை திரும்பத் திரும்பப் படித்துக் கிழிக்கிறார்கள்.

இஷ்டப்பட்டு வழங்கப்படும் தயவு நேரத்தில் முரசு டிவியில் ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’ பார்த்தபடி பையனிடம், ‘இன்னிக்காவது கண் டாக்டர் அபபாயிண்ட்மென்ட் வாங்கிடுப்பா’ என்கிறார்கள்.

உறங்கும் முன்பாக முழங்கால்களில் சிவப்பு நிறத்தில் எண்ணெய் தடவி, உள்ளங்கை முழுக்க மாத்திரை விழுங்கிவிட்டுப் படுத்து.. 

தன் வாழ்வில் இன்னும் ஒரே ஒரு நிகழ்வுக்காக மட்டும் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply