இந்த நிலை மாறிவிடும்

ரு முறை ஒரு இளைஞன் மன இறுக்கத்தால் தவித்து வந்தான். காரணம் புரியாத சோகம் அவனை ஆட்டுவித்து வந்தது. எனவே அந்த ஊரில் உள்ள பிரபல மனநல மருத்துவரிடம் சென்றான். “ஐயா காரணம் என்ன என்று தெரியவில்லை. மனம் ஒரு இனம் புரியாத சோகத்தில் இருக்கிறது. மன இறுக்கத்தால் சரியாக உறங்கக் கூட முடியாது தவிக்கிறேன். நீங்கள் தான் தகுந்த ட்ரீட்மென்ட் தரவேண்டும்!” என்றான்.

அவனை பரிசோதித்த மருத்துவர்…. “உங்கள் உடலில் எந்த கோளாறும் இல்லை. மனம் தான் சோகத்தின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன இறுக்கம் அகன்றுவிடும். நம் நகரத்தின் மையத்தில் உள்ள மைதானத்தில் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றின் சர்க்கஸ் நடந்துவருகிறது. அதற்கு செல்லுங்கள். அந்த சர்கஸ்ஸில் கோமாளி ஒருவனின் வேடிக்கைகள் இடம்பெறுகின்றன. அவன் செயல்கள் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருக்கும். அதை பாருங்கள். வாய்விட்டு சிரிப்பீர்கள். உங்கள் மனம் லேசாகிவிடும். உங்கள் மன இறுக்கம் போயே போய்விடும்” என்றார் மருத்துவர்.

அதற்கு பதிலளித்த அந்த இளைஞன் : “சார்… அது முடியாத ஒன்று. காரணம் அந்த கோமாளி வேறு யாருமல்ல நான் தான்!” என்றானாம்.

சார்லி சாப்ளின் வாழ்வில் நடைபெற்ற உண்மையான நிகழ்ச்சி இது.

நம்ம சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்க்கை நிஜத்தில் துன்பமயமானது. 1945 ல் அவர் ஒரு தீவிரவாதி என்று அவர் மீது குற்றச்சாட்டுக்களை  கூறி வழக்குகளை பதிவு செய்தது அமெரிக்க அரசு. பல ஆண்டு போராட்டங்களுக்கிடையே தன் தரப்பு நியாயங்களை விளக்க வழி தெரியாமல் இறுதியில் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்தார் சார்லி சாப்ளின்.

காலச்சக்கரம் சுழன்றது. 1972 ல் அதே அமெரிக்கா “உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்” விருதை பெற அவரை தன் நாட்டுக்கு அழைத்தது. பரிசினை ஏற்றுக்கொண்டால்லும் அமெரிக்காவில் தங்க விருப்பம் இன்றி மீண்டும் சுவிட்சர்லாந்துக்கே திரும்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சூழ்ந்து நின்று, ‘‘வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?’’ எனக் கேட்டார்கள்.

சாப்ளின் சிரித்தார்… ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும்! இதோ இந்தக் கணம் கூட!’’ என்றார்.

தனிப்பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள், ஏற்றத் தாழ்வுகள், குடும்பப் பிரச்னை – இவை எல்லாருக்கும் பொதுவான ஒன்று. மிகப் பெரும் சாதனையாளர்கள் கூட இவற்றில் சிக்காமல் தப்பியதில்லை. அப்படி எவரையும் இதுவரை நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை.

1972 best comedian award charlie chaplin க்கான பட முடிவு

என்ன மேற்படி கஷ்டங்களை அவர்கள் அணுகும் விதத்தில் தான் அவர்கள் நம்மிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். (குறள் 621)

என்ற திருக்குறளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு ஏழ்மையான குடும்ப பின்னணியில் பிறந்தாலும் சோகமயமான வாழ்க்கையை வாழ்க்கையுடன் வளர்ந்து வந்தாலும் ‘நகைச்சுவை’ எனும் ஆயுதத்தை கொண்டு லட்சக்கணக்கானோரின்  சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். குடும்ப பின்னனி சரியாக அமையாவிட்டாலும் கூட வானத்தை வசப்படுத்தலாம் என்பதை உலகிற்கு உணர்த்தி வாழ்ந்து காட்டியவர். அவரை போன்றே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் நாம் சந்திக்கும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் – மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் – எந்த சாதனையும் சாத்தியமே என்பதுதான் சார்லி சாப்ளின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் ரகசியம்.

Leave a Reply