இதயத்தைப் பாதிக்குது இன்ஸ்டன்ட் உணவு!

உடனடி உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா? உங்கள் இதயம், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகள் பழுதடைந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ள, இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக நினைக்க வேண்டாம்!

பிரியாணியிலிருந்து பீட்ஸா வரை
சாம்பாரிலிருந்து சட்னி வரை
இட்லியிலிருந்து இடியாப்பம் வரை

எதை வேண்டுமானாலும் நொடியில் வீட்டிலேயே ருசிக்கலாம் இன்று. மளிகை சாமான்களால் நிரம்பியிருந்த பல வீட்டு சமையலறைகளிலும், இன்று இன்ஸ்டன்ட் உணவு மயம்! பாக்கெட்டை வாங்கினோமா, பிரித்து சூடாக்கினோமா… உடனே சாப்பிடலாம். ‘சமைக்க வேண்டாம்… அப்படியே சாப்பிடலாம்’ என வசீகரிக்கிற இந்த உடனடி உணவுகளுக்குள் ஒளிந்திருக்கும் கேடுகள் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதுபற்றி விளக்கமாகப் பேசுகிறார் பொது மருத்துவர் பத்ரகிரி. ‘‘ரெடிமேட் உணவுகள்ல மறைஞ்சிருக்கிற முதல் ஆபத்து கொழுப்பு. ‘டிரான்ஸ்ஃபேட்’னு சொல்லக் கூடிய இது, உணவுப்பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும். இது ரத்தத்துல உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, அதன் விளைவா இதய நோய்களுக்கு அஸ்திவாரம் போடும். குழந்தைப்பருவ பருமன், ஹைப்பர் டென்ஷன், மாரடைப்புனு பலதுக்கும் காரணமானது இது.

அடுத்த அரக்கன் சோடியம்னு சொல்லப்படற உப்பு. சோடியம் சத்து நம்ம எல்லார் உடம்புக்கும் அவசியம். உடம்புல உள்ள நீர்ச்சத்தை சரிவிகிதத்துல வைக்கவும், தசைகள் சுருங்கி விரியவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் சோடியம் தேவை. ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 மில்லி கிராம் அளவு சோடியம் போதுமானது. அந்த அளவைத் தாண்டும்போது ரத்த அழுத்தம் எகிறும். உடனடி உணவுகள்ல உப்பு அதிகமா சேர்க்கப்பட்டிருக்கும். ஆரோக்கியமா இருக்கிறவங்களுக்கே இது ஆபத்தானது. ஏற்கனவே இதயக் கோளாறு இருக்கிறவங்க இந்த உணவுகளை சாப்பிடறப்ப, பிரச்னை இன்னும் தீவிரமாகும்.

மூணாவது ‘ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’. இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படற பிரதான பொருள் இது. உணவுக்கு ஒருவித கவர்ச்சியான பிரவுன் நிறத்தையும் கொடுக்கக்கூடியது. பர்கர் பன், குளிர்பானங்கள், கெட்ச்சப்னு பல உணவுகள்ல சேர்க்கப்படற இது, அதிகம் சாப்பிடத் தூண்டி, இதய நோய்களையும் நீரிழிவையும் வரவழைக்கக்கூடியது.

இந்த உணவுகள் கெடாமல் இருக்கவும், பாக்டீரியா வளராமல் இருக்கவும் இரண்டு விதமான ப்ரிசர்வேட்டிவ் உபயோகிக்கிறாங்க. இயற்கையான ப்ரிசர்வேட்டிவை ‘கிளாஸ் 1’ என்றும், கெமிக்கல் சேர்த்ததை ‘கிளாஸ் 2’ என்றும் சொல்றோம். உப்பு, சர்க்கரை, வினிகர் மாதிரியான இயற்கையான ப்ரிசர்வேட்டிவ்களால பெரிய பாதிப்பு கிடையாது. கெமிக்கல் ப்ரிசர்வேட்டிவ்கள்தான் ஆபத்தானவை. அதுல முதலிடம், சோடியம் பென்ஸோயட்டுக்கு. ஊறுகாய், ஜூஸ் வகையறாக்கள்ல சேர்க்கப்படற இது, அலர்ஜியை உருவாக்கி, மூளையையும் பாதிக்கலாம்.

அடுத்து நைட்ரேட், நைட்ரைட்ஸ். உடனடியா சாப்பிடக் கூடிய அசைவ உணவுகள்ல இது சேர்க்கப்படுது. தொடர்ந்து சாப்பிடறப்ப, வயிறு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயை வரவழைக்கக்கூடிய அளவுக்கு இது மோசமானது. எல்லாத்தையும் விட, ரெடிமேட் உணவுகள்ல கலோரி எக்கச்சக்கம். அடிக்கடி சாப்பிடறவங்களுக்கு உடல் பருமன் தவிர்க்க முடியாதது’’ என்கிறார் டாக்டர் பத்ரகிரி. இதுபோன்ற உடனடி உணவுகளை வாங்குகிற பழக்கமுள்ள பலரும் தயாரிப்பு, பேக்கிங் மற்றும் காலாவதி தேதிகளை மட்டுமே பார்த்து வாங்குவதையும், அவற்றில் சேர்க்கப்படுகிற மூலப் பொருள்களைக் கவனிப்பதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.

‘‘ரெடி டூ ஈட் உணவுகள்ல ஒரு கெமிக்கலுக்கு மேல சேர்க்கக்கூடாதுனு சட்டமே இருக்கு. ஆனா, அதை யாரும் பொருட்படுத்தறதில்லை. பேக்கிங் சரியில்லாட்டா, பாக்டீரியா தொற்று அதிகமாகி, மொத்த ஆரோக்கியமும் கெட்டுப் போகும். குறைந்தபட்சம் அசைவ அயிட்டங்களையாவது தவிர்க்கலாம். ஏற்கனவே அசைவ உணவுகள்ல உள்ள கொழுப்பு, அதைக் கெடாம வச்சிருக்கறதுக்காக சேர்க்கிற இன்னொரு கொழுப்புன்னு ரெண்டுமே கெடுதல். ஒருவேளை இன்ஸ்டன்ட் உணவுகளை எடுத்துக்கிட்டா, மீதி ரெண்டு வேளைகளும் நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கணும். நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதய நோய், உடல் பருமன் உள்ளவங்க இதைத் தொட்டுக்கூட பார்க்க வேண்டாம்’’ என்று எச்சரிக்கிறார்.

எக்ஸ்பிரஸ் வாழ்க்கையில் இதைத் தவிர்க்க முடியவில்லை என்கிறவர்களுக்கு என்னதான் வழி? சமையலை சுலபமாக்கும் டிப்ஸ் சொல்கிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

1 கப் பருப்புக் கலவைக்கு, அரை கப் அரிசி, காய்ந்த மிளகாய், தேவைக்கேத்த உப்பு சேர்த்து, அப்படியே மிஷின்ல கொடுத்து நைஸ் ரவையா அரைச்சு, சலிக்காம ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம். தேவைப்படறப்ப, கொஞ்சம் எடுத்து, தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வச்சு, அடை செய்யலாம். ரவா இட்லி, ரவா தோசை மிக்ஸ்களையும் இந்த மாதிரி செய்து வச்சுக்கலாம்.

கடைகள்ல கிடைக்கிற இஞ்சி-பூண்டு விழுதுல வினிகர் சேர்ப்பாங்க. சம அளவு இஞ்சி, பூண்டு சேர்த்து நாமே அரைச்சு, ஃப்ரிட்ஜ்ல வச்சுக்கிட்டா ஒன்றரை மாசம் வரைக்கும் உபயோகிக்கலாம்.

வெங்காய விழுதையும், இஞ்சி-பூண்டு விழுதையும் எண்ணெய் விட்டு நல்லா வதக்கி, ஃப்ரிட்ஜ்ல வச்சுக்கலாம். தேவைப்படறப்ப கடாய்ல கொஞ்சம் எண்ணெய் விட்டு, இந்த விழுது சேர்த்து, தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு போட்டு, வேக வச்ச சன்னா சேர்த்தா, இன்ஸ்டன்ட் சன்னா மசாலா ரெடி.

சப்பாத்தி மாவைப் பிசைஞ்சு, கிளிங் ஃபிலிம்ல சுத்தி ஃப்ரிட்ஜ்ல வச்சா, நாலஞ்சு நாளைக்கு அப்படியே இருக்கும். அதையே சப்பாத்தியா இட்டு, அரை வேக்காடு வேக வச்சு, ஒவ்வொரு சப்பாத்திக்கு இடைலயும் பட்டர் பேப்பர் வச்சும் பத்திரப்படுத்தலாம். தேவைப்படறப்ப எடுத்து வாட்டி சாப்பிடலாம்.

பழைய புளி, புதுப்புளி சம அளவு எடுத்து 1 டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து, பிரஷர் குக்கர்ல வச்சு எடுத்து, அரைச்சு, ஆற வச்சு ஃப்ரிட்ஜ்ல வச்சுக்கிட்டா, புளி பேஸ்ட் ரெடி. புளி கரைக்கிற டென்ஷன் இல்லாம, இதை அப்படியே உபயோகிக்கலாம்.

 

Leave a Reply