ஆடிப்பட்டம் தேடி விதை

‘ஆடி’ என்றால் அம்மன் கோயில், தள்ளுபடி துணிகள், அம்மியை நகர்த்தும் அதிரடிக் காற்று இப்படி பல விசேஷங்கள் காத்திருக்கும். இவை அனைத்திற்கும் மேலாக,

பூத்துக்குலுங்கும் மலர்களையும், காய்த்துத் தொங்கும் கனிகளையும் தன்னுள் பொதித்து வைத்தபடி, மண்ணில் விதைக்கப்படக் காத்திருக்கும் விதைக் கூட்டங்கள்! ஆம்! இந்த ‘ஆடிப்பட்டம்’ என்ன சொல்கிறதென்று இங்கே கொஞ்சம் பார்க்கலாம்!

ஆடியில் என்ன சிறப்பு?!

பொதுவாக, “ஆடிப்பட்டம் தேடி விதை!” என்று சொல்வதுண்டு. ஒரு விதை சரியான நேரத்தில் சீதோஷ்ண நிலையில் விதைக்கப்படும் போதுதான் அது முழு வளர்ச்சியடைந்து பலன் தரும். ஆடி மாதம் ஆன்மீகம் முக்கியத்துவம் பெறுவதற்கும், ஆடி மாதத்தில் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் விதை விதைக்கப்படுவதற்கும் ஒரு காரணம் உண்டு.

ஆடிமாதத்தில் பூமி சூரியனுகு மிக அருகில் இருக்கும். இது ஏனென்றால், பூமியின் வடக்கு முகமானது சூரியனிடமிருந்து விலகிய நிலையில் திரும்பி இருப்பதுதான் காரணம்.

பூமிக்கு நெருக்கமாக வரும் சூரியன் இருக்கும் கோணமானது, சூரிய கதிர்களை விரவியபடி பாய்ச்சுகிறது. ஆனால், இந்தக் காலகட்டத்தில், பூமியின் மீது செயல்படும் சூரிய ஈர்ப்பு உச்ச நிலையில் செயல்படுகிறது. மார்கழி மற்றும் ஆடி மாதங்களில் நிகழும் இந்த விளைவானது, மனித உடலியலில் உயிர் சக்தியை கீழ் நோக்கி இழுக்கும் விதமாக செயல்படுகிறது. மனிதவியல் மண்டலத்தில் இவ்விரு மாதங்கள் சமநிலையையும் உறுதியையும் கொண்டுவருவதற்கான காலமாக உள்ளது. எனவே ஆடி மாதத்தில் திருமணமோ கருவுறுதலோ நிகழக்கூடாது எனச் சொல்லப்படுகிறது. விதைகளுக்கும் இது பொருந்தும்.

ஆடி 18ஆம் நாளும் அதற்குப் பின்னர் வரும் நாட்களும் விதைகள் விதைப்பதற்கு தகுந்த காலமாக உள்ளன. எனவே இதனை “ஆடிப்பட்டம்” என்றனர்.

“விதைகள்” ஒரு துளி மரங்கள்!

ஒரு காகம் தன் எச்சத்தின் மூலம் எத்தனை விதைகளை விதைத்திருக்குமென்று கணக்கிட்டுப் பார்த்தால், அது ஒரு மனிதன் சாப்பிட்டுவிட்டு வீணாகத் தூக்கி எறிந்த விதைகளை விட அதிகமாகவே இருக்கும்.

பறவைகள் தன் எச்சத்தின் மூலம் ஒரு புறம் விதைக்க, விலங்குகள் இடம்பெயர்தல் மூலம் தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளை நிலங்களில் தூவுகின்றன. காற்றும் நீரும் விதைகளைக் கொண்டு சென்று, உலகின் பல்வேறு இடங்களில் சேர்க்கின்றன். வண்டுகளும் தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் மகரந்தச் சேர்க்கைக்கு வித்திடுகின்றன

. இப்படி, இயற்கையில் அனைத்து ஜீவராசிகளும் மரங்களையும் தாவரங்களையும் பெருகச் செய்வதில் தங்களுக்கான பங்கை ஆற்றி வருகின்றன. மனிதர்களாகிய நாம் நம் பங்கிற்கு என்ன செய்கிறோம்?!

காய்களையும் பழங்களையும் சாப்பிடுகிறோம்; மரங்களை வெட்டுகிறோம்; பெருகி வரும் மக்கள் தொகையால், பல அரிய தாவர மற்றும் விலங்கினங்களை அழிக்கிறோம். மரத்திலிருந்து விழும் ஒவ்வொரு விதையும் அந்த மரத்தின் ஒரு துளியாகவே உள்ளது. அந்த ஒரு துளிக்குள் ஒரு முழு மரமும் இருப்பதுதான் இயற்கையின் விந்தை.

நீ! ஒரு எலுமிச்சம் பழத்திலுள்ள விதைகளிலிருந்து சுமார் 12 எலுமிச்சை செடிகளை உருவாக்க முடியும். நாவல் பழத்தின் ஒரு விதையிலிருந்து மட்டும் 8 நாவல் மரங்கள் வளரும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! விதைகளுக்குள் விருட்சங்கள் ஒளிந்து கிடக்கின்றன. விதைகளின் தன்மை… எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். அதில் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் தாக்குப்பிடிக்கும். வேப்ப விதைகளை மூன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் நடப்பட வேண்டும். நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும் கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் தாக்குப் பிடிக்கும். எனவே இதுபோன்ற பழவிதைகள் உங்கள் கையில் கிடைக்கும்போது, குறிப்பிட்ட நாட்களுக்குள் நாற்றுப் பண்ணைகளில் சேர்த்திடுங்கள். வசதி வாய்ப்புகள் இருப்பின், நீங்களே நட்டு வளருங்கள்.

உலக வெப்பமயமாதல் என ஒருபுறம் மிகப் பெரிய அச்சுறுத்தல்; தண்ணீர்ப் பற்றாக்குறை என இன்னொரு புறம் அபயக்குரல்; இப்படி நம் செவிகளை வந்தடையும் எச்சரிக்கை மணிகளை இப்போதாவது நாம் காதுகொடுத்தே ஆகவேண்டும். அதற்கு, மரம் நடுவதும் மரக்கன்றுகளை உருவாக்குவதுமே சிறந்த தீர்வாக இருக்கும்.

ஈஷா பசுமைக் கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விதைகளைக் கொண்டு சேர்ப்பதற்கும், குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். இதுவரை வீணே வீழ்ந்திருந்த நாம் இனி இந்த ஆடிப்பட்டத்தில் விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களாவோம்! Rajarshi MITRA @ flickr

Read more at : ‘ஆடிப்பட்டம்’ காத்திருக்கும் விதைக்கூட்டம்! http://tamilblog.ishafoundation.org/aadipattam-kaathirukkum-vithaikkootam/

Leave a Reply