ஆகஸ்ட் 10 ஆம் தேதி சூப்பர் நிலா

வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி பௌர்ணமி நாள். வழக்கம் போல வருகிற பௌர்ணமிதான். ஆனால் ஒரு வித்தியாசம். அன்று இரவு முழு நிலவானது வழக்கத்தை விட சற்றே பெரியதாகத் தெரியும்.ஒப்பு நோக்குகையில் சந்திரன் நமக்கு சற்றே பக்கத்தில் இருக்கும் என்பதே அதற்குக் காரணம்.

அன்றைய தினம் நிலவு வழக்கத்தை விட சுமார் 14 சதவிகித அளவுக்குப் பெரிதாக இருக்கும். நிலவின் பிரகாசம் வழக்கத்தைவிட 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அன்றைய முழு நிலவை சூப்பர் நிலா என்று வருணிக்கலாம்.

பூமியை சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை மிகச் சரியான வட்டமாக இருப்பது கிடையாது . அதுங்கிய வட்டமாக உள்ளது. ஆகவே சந்திரன் சில சமயங்களில் பூமிக்கு அருகில் இருக்கிறது.வேறு சில சமயங்களில் பூமியிலிருந்து தள்ளி இருகிறது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் 3,56,922 கிலோ மீட்டராக இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் ஜூலை 28 ஆம் தேதியன்று பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் இருந்த தூரம் 4,06,547 கிலோ மீட்டர்.
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 28 நாட்கள் ஆகின்றன. ஆகவே அது பூமிக்கு சற்றே அருகில் இருப்பதும் தள்ளி இருப்பதும் ஒவ்வொரு மாதமும் நிகழ்வதாகும்.

ஆனால் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் குறைவாக இருந்து அன்றைய தினம் பௌர்ணமியாகவும் இருந்தால் அன்று இரவு தெரிகின்ற முழு நிலவை சூப்பர் நிலா (Super Moon) என்று வருணிக்கிறார்கள்.

எனினும் சூப்பர் நிலா தெரிகிற நாளில் நீங்கள் சந்திரனைக் கவனித்தால் உங்களால் எளிதில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

அறிவியல்புரம்
– என்.ராமதுரை

Leave a Reply