அவருக்கு நான் மனிதன் என்றே பெயர் சூட்டியிருக்கிறேன்

ஆர்.வி.சரவணன் குடந்தை

இன்று ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டு விட்டு நானும் என் மனைவியும் வெளி வருகையில், கோவிலின் எதிரே ஒருவர் இளநீர் விற்று கொண்டிருந்தார்.

அவரிடம் இளநீர் கேட்ட போது 20 ரூபாய் என்றவுடன் “சரி நிறைய தண்ணீர் இருக்கிறதா வெட்டி கொடுங்க” என்றேன்.

அவர் வெட்டி கொடுத்ததை சாப்பிட ஆரம்பித்த உடனே தீர்ந்து விட்டது. நான் உடனே “என்னங்க நிறைய தண்ணீர் இருக்கிறதா வேணும்னு கேட்டேனே” என்றேன். அவர்அடுத்து செய்த செயலும் சொன்ன வார்த்தையும் தான் அவரை பற்றி இங்கே எழுத வைத்து விட்டது. அப்படி என்ன செய்தார்?

என்னிடம் வாங்கிய 40 ரூபாயில் 10 ரூபாயை திருப்பி கொடுத்து “இன்னிக்கு எல்லா இளநியிலும் தண்ணி கொஞ்சம் கம்மி தான்” என்றார்.

“அதுக்கு நீங்க என்ன செய்ய முடியும” என்றேன்.

“நீங்க எதிர்பார்த்ததை என்னால் தர முடியல இல்லியா அதான் கொடுக்கிறேன்” என்றார்.

வாங்க மறுத்த நான் “நீங்க சொன்னதே என்னை திருப்திக்குள்ளாக்கி விட்டது” என்றேன்.

எனக்குள் காசு கொடுத்து வாங்கிய பின் பொருளில் ஏதேனும் பிரச்னை என்றால் மாற்றி கொடுக்க மறுக்கும் பெரிய வியாபாரங்களின் முன், வெயிலில் நின்ற படி வியாபாரம் செய்யும் இவர் பெரிய மனிதராகவே தெரிந்தார்.

“உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா. உங்களை பத்தி பேஸ் புக்ல எழுதப்போறேன” என்றேன்.

அவருக்கு அது புரியவில்லை. “எந்த பேப்பர்” என்றார் .

இன்டர்நெட் என்று சொல்லிய படி படம் எடுத்து கொண்டு கிளம்பினோம்.

அவர் “சார் என் பேரு வேணாங்களா?” என்றார்.

“சொல்லுங்க” என்றவுடன் “சங்கர் சார” என்றார்.

இருந்தாலும் அவருக்கு நான் மனிதன் என்றே பெயர் சூட்டியிருக்கிறேன்.

Leave a Reply