அறுவடைக்குப் பிந்தைய பொறியியல்

லூதியானா நகரில் செயல்படும் “அறுவடைக்குப் பிந்தைய பொறியியல் தொழில்நுட்ப நடுவண் நிறுவனம்’ (CIPHET) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் அறுவடைக்குப் பிறகு வீணாகும் தானியம், பருப்பு, காய், கனி ஆகியவற்றின் மதிப்பு ரூ.92,651 கோடி…காய், கனிகள் கெடுவதால் ஏற்படும் இழப்பு மட்டுமே ரூ.40,811 கோடி. அடுத்ததாக அரிசி, கோதுமை. சேமிப்பு வசதி இல்லாததால் ரூ.20,698 கோடி இழப்பு ஏற்படுகிறது. பருப்பு வகையில் ரூ.3,877 கோடி இழப்பு ஏற்படுகிறது. நாம் அரிசி, பருப்பு, கோதுமை, காய்கறி விலை உயர்கிறது என்று அலுத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், எங்கோ ஓரிடத்தில் யாருக்கும் பயன்படாமல் இந்த உணவுப் பொருள்களும் காய், கனிகளும் வீணாகிக்கொண்டிருக்கின்றன. வீணாகிப்போவது ஒருபுறம் இருக்க, விவசாயிகளுக்கு மிகப்பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன…நம்மிடம் இப்போது இருக்கும் குளிர்பதன வசதிக் கிடங்குகள் பலவும், உணவுப் பதப்படுத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை…பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல, தனியார் சிலரும் இதுபோல குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் அமைத்திருக்கிறார்கள். அவற்றை இடைத்தரகர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். பெரு நிறுவனங்களும் இடைத்தரகர்களும் அறுவடைக் காலங்களில் மிகக் குறைந்த விலையில் பொருள்களை வாங்கி, பல ஆயிரம் டன் அளவுக்கு சேமிக்க முடிகிறது. அதனால், அவர்கள்தான் விவசாய விளைபொருள்களின் விலையைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்…இதனால் விவசாயிகள் அடையும் லாபம் எதுவும் இல்லை. சொல்லப் போனால் நஷ்டப்படுவது விவசாயிகள்தான். மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தோட்டக்கலை இயக்ககம், தோட்டக்கலை வாரியம், தேசிய கூட்டுறவு மேலாண்மைக் கழகம், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணையம் போன்ற பல்வேறு அமைப்புகள், விளைபொருள் வீணாவதைத் தடுக்கும் தொழில்நுட்பம், குளிர்பதனக் கிடங்கு அமைத்தல் ஆகியவற்றை ஊக்கப்படுத்த மானியம் தருகின்றன. அதிகபட்சமாக மானியத்தின் அளவு 75% வரை தரப்படுகிறது. இவை தவிர இத்தகைய குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உணவுப் பதப்படுத்தல், குளிர்பதன கிடங்குகளுக்கான வங்கிக் கடன் பெறுவதை முன்னுரிமை தருவதற்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. வேளாண் பொருள்களை பாதுகாக்கும் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகளுக்கு வருமான வரித்துறை சில செலவினங்களை வரிக்கு அப்பாற்பட்டதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த பயன் முழுவதும் பெரு நிறுவனங்களின் துணை நிறுவனங்களுக்குப் போய்சேருகின்றன. அல்லது பெருமுதலாளிகள் பயன் அடைகிறார்கள்…தக்காளி விலை மலிந்து போனது என்று பல லாரி தக்காளியை சாலையில் கொட்டி தங்களது கோபத்தையும் இயலாமையையும் காட்டுகிறார்கள் விவசாயிகள். ஆனால், தக்காளி உற்பத்தியாளர் சங்கம் அமைத்து அவரவர் பகுதியில், வங்கிக் கடன் உதவியில் குளிர்பதனக் கிடங்கை அமைத்து, தக்காளியின் விலையை தீர்மானிக்க அவர்கள் முற்படுவதில்லை. கொப்பரைக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்பதால் 25 கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது கோபத்தை வெளிப்படுத்தின அரசியல் சார்புள்ள சில விவசாய சங்கங்கள். இந்த கொப்பரைகளை பாதுகாத்து வைத்து, சந்தை விலையைத் தீர்மானிக்க அவர்கள் முற்படுவதில்லை. இதற்குக் காரணம் நமது விவசாயிகளுக்கு சரியான ஆக்கப்பூர்வசிந்தனை உள்ள தலைமை இல்லாததுதான்….ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் தொழிற்சங்கம் இருக்கிறது. விவசாய அணி இருக்கிறது. அரசியல் கட்சியின் விவசாய அணியினர் கட்சித் தலைமையின் உதவியுடன் வேளாண் விளைபொருள்களை வீணாகாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை உருவாக்க முடியும். அப்படிச் செய்தால் அதன்மூலம் அந்தக் கட்சியின் விவசாயிகள் பலன் அடைவார்கள். தக்காளி, காய், கனி, கொப்பரை உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படும். இடைத்தரகர்கள் லாபம் அடையாமல் விவசாயிகள் லாபம் அடைவார்கள்…ஆனால் அவர்கள் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் ஆர்வம் காட்டுவதில்லை.. அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகளின் வேளாண் உற்பத்தியைவிட, ஊடகச் செய்திதான் முக்கியம்.

Please share …….

Leave a Reply