அரிசிக் கஞ்சிகள்

கொதிகஞ்சி
உலையில் அன்னம் முக்கால் பாகம் வெந்ததும், கஞ்சியுடன் ஒரு கரண்டி எடுத்து, ஆறியதும், அதில் வெண்ணை, நெய் கலந்து சாப்பிட, குடல் வரட்சை, நீர் சுருக்கு, சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் வலி நீங்கும்.
வடிகஞ்சி
சாதத்தை வடித்தெடுத்த கஞ்சி ஆறியதும் இதனுடன் மோர் சேர்த்து குடிக்கலாம். உடலின் மேல் தேய்த்துக் குளிக்க தோல் வரட்சி நீங்கும். தோல் மென்மையுறும். ஆனால் ப்ரஷர் குக்கரை அதிகமாக சமைக்க உபயோகிப்பதால் வடிக்கஞ்சி கிடைப்பது கடினம்.
புழுங்கலரிசி கஞ்சி
தமிழகத்தில் நோயாளிகளுக்கு கொடுப்பது புழுங்கலரிசி கஞ்சிதான். நோய் வாய்படும் போது தான் இதை குடிக்க வேண்டும். என்றில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே புழுங்கலரிசி கஞ்சியை சாப்பிடலாம்.
புழுங்கலரிசியை ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உடைக்காமல், பெரிய துணுக்குகளாக உடைத்துக் கொள்ளவும். இளந்தீயிலிட்டு பொறுமையாக, புழுங்கலரிசி ரவையை தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். இந்த கஞ்சியில் பால், சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இல்லை, மோர், உப்பு சேர்த்து பருகலாம்.
நோயாளிகளுக்கு மற்றும் சுரம் உள்ளவர்களுக்கு, புழுங்கலரிசி கஞ்சி கொடுப்பது, அநேகமாக எல்லா வீடுகளிலும் சகஜம்.
புழுங்கலரிசியுடன் கோதுமை, பச்சைப்பயிறு சேர்த்து வறுத்து, குருணையாக்கி 60 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கால் லிட்டராக குறையும் வரை காய்ச்சி கஞ்சியாக்கவும். புஷ்டியை தரும் கஞ்சி இது. தவிர சளியால் அவதிப்படுபவர்களுக்கு திப்பிலி, வயிற்றுக் கொதிப்பிருப்பவர்க்கு. சீரகம், மல்லிவிதையும், மலச்சிக்கலுக்கு திரா¬க்ஷ, ரோஜா மொட்டும் சேர்த்து புழுங்கலரிசி கஞ்சியை தயாரித்துக் கொள்ளலாம்.
பேதி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாறு, மாதுளம் பிஞ்சு, வில்வப்பிஞ்சையும் சேர்த்து கஞ்சி தயாரித்து கொடுக்கலாம்.
புனர்பாகம் – இரு முறை வடித்த கஞ்சி
ஏற்கனவே சமைத்து வைத்த அன்னத்தை கஞ்சியை மறுபடியும் நீர் சேர்த்து வடிக்க வேண்டும். இதன் வடிநீரை எடுத்து ஒரு தேக்கரண்டி பழச்சாறு சேர்த்து கொடுக்க வேண்டும். இதை புனர்பாகம் புன: மறுபடியும், பாகம் – சமைத்தல் என்பார்கள். எளிதில் ஜூரணாகும். சுரம், தட்டம்மை, நீர்ச்சுருக்கு, கடுமையான அக்னி மந்த நிலை இவற்றுக்கு ஏற்றது. குடிப்பதற்கு சுவையான, உடலுக்கு ஊட்டம் தரும்.

Leave a Reply