அமெரிக்காவில் ஹிந்தி

அமெரிக்காவில் சில ஹிந்தி பேசும் நபர்கள், சக இந்தியர்களைக்கண்டால் உடனே ஹிந்தியில் உரையாடுவர். நமக்கு ஹிந்தி தெரியுமா/ தெரியாதா என்கிற ஐயமெல்லாம் அவர்களுக்கு வருவதேயில்லை. இந்தியர்கள் எல்லோருக்கும் ஹிந்தி தெரியும் என்கிற மடத்தனமான யூகமா அல்லது இந்தியர்கள் எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்கிற முரட்டுத்தனமான கொள்கையா என்பதை உடனே புரிந்துகொள்வது சிரமம். நாம் ‘English Please!’ என்று கேட்க வேண்டும். அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்திலிருந்து அவர்களுடைய மனநிலை நமக்கு ஒருவாறு விளங்கலாம். சிலர், ‘சாரி!’ என்று வருத்தம் தெரிவித்து உடனே ஆங்கிலத்துக்கு மாறுவார்கள். சிலர் நமக்கு இலவச பாடமெடுக்கத் தொடங்குவர். ‘ஹிந்தி படியுங்கள். அதுவே நம் நாட்டின் மொழி!’ என்று தொடங்கும் அந்தப்பேச்சு, மெல்ல விவாதமாக மாறி இறுதியில், ‘மதராசிகளை மாற்றவே முடியாது!’ என்கிற விரக்திப்புலம்பலில் வந்து நிற்கும்.

நம் கூட்டத்திலும் சில அறிவுஜீவிகள் உண்டு. அதாவது, தமக்கு ஹிந்தி தெரியும் என்பதில் பெருமையும், ஹிந்திக்காரர்களிடம் ஹிந்தியில் பேசி பெயரெடுப்பதில் ஆர்வமும் கொண்ட அதிமேதாவிகள். பல மொழியினர், கூடி நின்று, ஆங்கிலத்தில் கலந்துரையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு ஹிந்தி நபர் இடையில்வந்து பேச்சை ஹிந்திக்கு மாற்றியவுடன், இவர்கள் துள்ளிக்கொண்டு சரளமான ஹிந்தியில் பதில் தருவார்கள். முகம் பெருமிதத்தில் ஜொலிக்கும். உடனிருக்கும் ஹிந்தி அறியாத மற்ற நண்பர்களைப்பற்றிய எண்ணமே இல்லாமல் இங்கிதமின்றி அவர்கள் பேச்சு ஹிந்தியிலேயே தொடரும். மற்றவர்கள் பேந்தப்பேந்த முழித்துவிட்டு மெல்ல விலகிச் செல்வர்.

‘ஹிந்தியை திணிக்காதே!’ என்று ஹிந்திக்காரர்களிடம் கூட வாதிட்டு ஒரு நாள் ஜெயித்துவிடலாம். இந்தியநாட்டில் எல்லா மொழிக்களுக்கும் உண்டான சம உரிமையை விளக்கி புரியவைத்துவிடலாம். ஆனால், நம்மூர் ஆசாமிகள் சிலருக்கு இவை எதையுமே புரியவைப்பது கடினம். மிகக்கடினம். மொழி குறித்து முகநூலில் நடக்கும் விவாதங்களின் கீழே இவர்களால் எழுதப்படும் பின்னூட்டங்களைப் படிக்கக் படிக்க சிரிப்பதா அல்லது அவர்களது அறியாமையை எண்ணி பரிதாபப்படுவதா என்றே புரியவில்லை.

  • Eeranila Dakshinamurthy

Leave a Reply