அடேய்… நோபலுக்கான விதி தெரியுமா?தெரியாதா?

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த தீர்மானத்துடன் சேர்த்து, தமிழகத்தில் எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பின்ஸ் நாட்டின் ரமோன் மக்சைசாய் விருதும், உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்தல் என்பது உள்ளிடட் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் அடிப்படையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கிடைக்குமா என்று அதன் விதிமுறைகளை புரட்டியதில், நமக்கு சோகமான பதிலே கிடைத்துள்ளது.

அதாவது, 1974ம் ஆண்டுக்குப் பிறகு, மறைந்த ஒருவரின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. ஒரு வேளை, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படுவதற்கு முன்பே, அவர் இறந்துவிட்டால் மட்டுமே, அந்த பரிசு அவரது பெயரில் வழங்கப்படும். அதுவும் நோபல் வரலாற்றில் ஒரே ஒரு முறை நடந்துள்ளது.

ஆனால், எந்த வகையிலும், உயிரிழந்த ஒருவரது பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படாது என்பதே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இதே விதி தான் காந்திக்கும் நோபல் பரிசு கிடைக்காமல் போகக் காரணமாக இருந்தது.

அதாவது, அகிம்சையை வலியுறுத்திய மகாத்மா காந்திக்கு 1937 மற்றும் 1939ம் ஆண்டுகளிலும், 1947ம் ஆண்டிலும் நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இதில் 1947ல் இந்த நோபல் பரிசு காந்திக்கு வழங்கவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக 1948ல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
dinamani

Leave a Reply