​வயோதிகம் நமக்கும் வரும்

நாட்டில் ஆயிரம் பிரச்னைகள், நாள்தோறும் புதிது புதிதாய் தோன்றி நம்மை எப்போதுமே ஒருவித கவலையுடனும், பதற்றத்துடனும் வைத்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், சமீபத்தில் நம் அண்டை வீடுகளில், பகுதிகளில் அதிகமாய் நம் கவனத்துக்கு வரும், ஒரு வேதனை தரும், கவலைப்பட வைக்கும் செய்தி, வீட்டு முதியவர்களின் நிலைப்பாடு.
தர்மம் வாங்க வந்த முதியவர் ஒருவர், நல்ல தமிழ் அறிவும், கவிதை படிக்கக்கூடிய திறனும், மிக நாகரிகமாகவும் இருக்க அவரை விசாரித்தேன். இளம் வயதில் பத்திரிகைகளில் எழுதியும், இலக்கிய கூட்டங்களில் பேசியும் பல பரிசுகள் வாங்கி இருப்பதாய் கூறியபோது, தானாகவே ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டது.
மிக வயதான பாட்டி ஒருவர், சிறிது சிறிதாக கண் பார்வையும் போய்விட, தனியாக தன் குடிசையில் அக்கம்பக்கத்து வீட்டினரின் உதவியுடன் காலம்தள்ளி வர, அவர் பெற்ற ஐந்து பிள்ளைகளும் கைகழுவி விட, இப்போது நிலைமை மிக மோசமாகி விட்டது. 
தன் கழிவுகளை சுத்தப்படுத்திக் கொள்ள முடியாமல், அதுவும் தன் உணவுடன் சேர்வது கூட தெரியாத நிலையில் இருக்கிறார். அக்கம்பக்கத்தினரும் உணவு, உடை, மருந்து தரலாம். ஆனால், அவரின் கழிவுகளை சுத்தம் செய்ய எங்களால் முடியாது என்று அப்படியே போட்டுவிட, கொஞ்சம் யோசித்து பாருங்கள், அவரின் நிலைமையை.

..

நம் சமூகத்தில் வயதானவர்களுக்கு மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டே வந்து, இப்போது முற்றிலும் இல்லையோ என்று நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், பாதிக்கு பாதி பேர், தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது ஆய்வின் முடிவு.
முழுதும் புறக்கணிக்கப்படுவது மட்டுமல்லாமல், தன் குடும்பத்தாருடன் இருந்து கொண்டே அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்திக்கும் பெரியவர்கள் அதிகரித்து விட்டனர். இதற்கு அரசாங்கம், சட்டங்கள் நிறைய செய்து கொண்டு தான் இருக்கின்றன. 
சட்டமும், உதவி மையங்களும்…

முதியவர்களை புறக்கணிப்பதையும், அவமதிப்பதையும் தடுக்க, 2007ல் சட்டமும், உதவி மையங்களும் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதை பற்றிய விழிப்புணர்வு நம் முதியவர்களுக்கு இன்னமும் ஏற்படவில்லை என்பதே சோகம்.
குடும்பத்தில் சொந்தங்களைத் தாண்டி, வெளியில், பொது இடங்களில் முதியவர்களை நடத்தும் விதமும் கவலை தரக்கூடியதாய் தான் இருக்கிறது. முதியவர்களால் பயன் இல்லை, வேலை செய்ய முடியாது.
பணம் ஈட்டித் தர முடியாது, குடும்பத்திற்கு பாரமாய் தொந்தரவாய் இருக்கின்றனர் என, பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், நாம் 

எல்லாருமே ஒன்றை மறந்து விட்டோம். இன்னும் கொஞ்ச காலம் கழித்து, நமக்கும் வயதாகும்; முதியவர்கள் என்கிற வரிசையில் நாமும் சேருவோம் என்பதை.
ஒரு சம்பவம் நமக்கு நடந்து, அதன் மூலம் தான் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. எதிரில் இருப்பவர்களுக்கு நடக்கும்போது, அதிலிருந்து நமக்கு தேவையான நீதியை தெரிந்து கொள்வதும் சிறந்தது தான். அப்படித்தான் இப்போது நடக்கும் இந்த முதியவர்களின் நிலைப்பாட்டை, நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாய் வயோதிக வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் நாயகியர், கண்டிப்பாய் இதை தங்களுடைய எதிர்காலத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள தயங்கக் கூடாது. எப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும், யாரை துணையாக சேர்த்துக் கொள்ள வேண்டும், எத்தனை பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். 
அவர்களை எப்படி, என்ன படிக்க வைக்க வேண்டும், சொத்து யார் பெயரில் வாங்க வேண்டும், விற்ற பணத்தை யார் பெயரில் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு, ஒவ்வொன்றாய் வெற்றிகரமாய் நடத்திக் காட்டும் நாயகியர், இதையும் இனி கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

..

மிக வயதான பிறகு, நம் நிலையென்ன, என்ன செய்யப் போகிறோம் என்பதையெல்லாம் நடுத்தர வயதை தாண்டும் போதே, யோசித்து, தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களோ, சொந்த பந்தங்களோ நம்மை சுயநலம் நிறைந்த ஜீவன் என்று ஏசினாலும், கவலைப்படாமல் மிகத் தெளிவாய் இருக்க வேண்டும் என்று இன்றே தீர்மானித்துக் கொள்ளுங்கள். மிக முக்கிய பிரச்னையான பொருளாதாரத்தில் நன்றாக உள்ள முதியவர்கள் கூட, தங்களுக்கு பாதுகாப்பில்லையென புலம்புகின்றனர்.
அதை நிரூபிக்கும்படியாக கொலைகளும், கொள்ளைகளும் சென்னையில் தனியாக வாழும் முதியவர்களுக்கு நடக்கின்றன. இருக்கிற சொத்துகளின் மீது வைக்கும் அக்கறையில் கொஞ்சமாவது, தம் வீட்டு பெரியவர்களின் நலனிலும் வைக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும். 
நட்சத்திர வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள் பெருகிவிட்ட நகரங்களில், அதற்கு வழியில்லாத முதியவர்கள் தனித்தும், தெருவிலும் உணவோ, உடையோ இல்லாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். 
கிராமங்களில் உள்ள முதியவர்கள், இந்த அளவிற்கு பிரச்னைகளுக்குள் மாட்டிக் கொள்ளாமல், உடல் உழைப்பைக் கொண்டு மரியாதையுடனும், கொஞ்சம் வசதியுடனும் வாழ்கின்றனர். உற்றார், உறவினர்கள் ஏதும் பழி சொல்லிவிடுவரோ என்ற அச்சத்தில் மகன்களோ, மகள்களோ அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.
விழிப்புணர்வு அவசியம்

நகரத்தில் தான் யார் பற்றியும் அக்கறையின்மையும், என்ன சொன்னாலும் நமக்கு கவலையில்லை என்கிற மனோபாவமும் தானே அதிகம் இருக்கிறது.

சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை பாதுகாக்கத் தவறினால், அப்படி எழுதி வாங்கியதே சட்டப்படி செல்லாது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். 
நாடு என்பதும், அது இயற்றும் சட்டம் என்பதும், நாட்டு மக்களின் நல்லதுக்கும், அவர்களின் நிம்மதியான, செழிப்பான வாழ்க்கைக்கும் தான். ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதில் தான் இதன் வெற்றி உள்ளது. அதை செய்வதில் நாம் முன் நிற்போம். இனி, எங்கு முதியவர்கள் கஷ்டப்பட்டாலும் இந்த சட்டம் பற்றியும், இதை அணுகும் முறை பற்றியும் எடுத்து சொல்வோம்.
வருங்காலத்தில் நமக்கு இப்படி ஒரு நிலை ஏற்படா வண்ணம் இப்போதில் இருந்தே நம்மை பாதுகாத்துக் கொள்வோம். நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் எடுத்து சொல்வோம்.

Leave a Reply