​திணறியது தமிழகம்! உரிமைக்காக குரலுயர்த்திய விவசாயிகள்

​திணறியது தமிழகம்! உரிமைக்காக குரலுயர்த்திய விவசாயிகள்

சென்னை : காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை  தமிழகம் முழுவதும் விவசாய அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நட்த்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் விவசாயிகள் சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விவசாயிகள் சாலையில் மரங்களை வெட்டிபோட்டு மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் திருத்துறைப்பூண்டியில் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை, எழும்பூர் ரயில்நிலையத்தில் திரண்ட விவசாய சங்கத்தினர் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உட்பட அரசியல் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழக, கேரள எல்லை பகுதியான குமுளியில் தமிழக விவசாய சங்களின் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் செங்கூட்டுவன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில பல இடங்களில், விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவிக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நீராதாரங்களை மீண்டும் தமிழகத்திற்கு மீட்டுக்க் கொடுக்க வேண்டும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

படம்: சொ.பாலசுப்ரமணியன்

தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு கருதி கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து தமிழத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக எல்லையில் கர்நாடக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பேருந்து நிலையங்களில் காத்திருக்கின்றனர். தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு தினமும் சுமார் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கப்படவில்லை.

இதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து கர்நாடகம் செல்லக்கூடிய 52 பேருந்துகளும் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலுாருக்கு வரும் பேருந்துகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்

விகடன்

Leave a Reply