கோல்டன் ஹவர் திட்டம்

பொதுவாக விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களின் உயிரைக் காக்க, விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து மருத்துவமனைக்குச் சென்றடையும் நேரத்தை ‘கோல்டன் ஹவர்’ என்று அழைக்கிறார்கள். மருத்துவமனைகளில் யாராவது உயிரிழக்கும்போது, ‘அரைமணி நேரத்துக்கு முன்பே கொண்டு வந்திருந்தால் பிழைத்திருப்பார்’ என மருத்துவர்கள் கூறும்போதுதான் ‘கோல்டன் ஹவரின்’ அருமையும், அதன் அவசியமும் புரியும். விபத்தில் சிக்கி உடனடியாக இறப்பவர்களைவிட, முதலுதவி கிடைக்காமல் இறப்பவர்களே அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருந்தாலும் திடீரென்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கும் உடனடி சிகிச்சை வழங்கி காப்பாற்றுவதற்காக ‘கோல்டன் ஹவர்’ என்ற திட்டத்தைச் சோதனை அடிப்படையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை, கோவை கே.எம்.சி.எச். ஆகிய இடங்களில் மட்டும் தமிழக அரசு கொண்டு வந்தது.

ஓர் இடத்தில் ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு வரும்போது அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனை, சிறிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி சிகிச்சை அளித்தவுடன், ஒரு மணி நேரத்தில் நவீன வசதிகள் கொண்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து அடுத்த சில மணி நேரங்களில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கீழ் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுவதே திட்டத்தின் நோக்கம். சோதனை அடிப்படையில் இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும், முழு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை.

கடந்த இரண்டாண்டுகளாக முடிவு ஏதும் எடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட கோவையைச் சேர்ந்த தாமஸ் அலெக்ஸாண்டர், “கடந்த 2012 முதல் 2014 ஜுன் வரை, பரீட்சார்த்த நடைமுறையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட நான்கு மையங்களிலும், 2,400 பேரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இதைப் பார்த்து தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகள் இத்திட்டத்தை முழுமையாகக் கொண்டு வருவதற்கு இறுதிக்கட்ட நடவடிக்கை வரை எடுத்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில் சோதனை நடைமுறைக்குப் பின்னர் நிறுத்தி வைப்பட்டது. அரசு அடுத்தகட்ட முடிவை விரைந்து எடுக்க வேண்டும்” என்கிறார்.இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர், “இத்திட்டம் பரீட்சார்த்த நடைமுறைக்குப் பின்னர் நிறுத்தப்பட்டுள்ளதற்கு நிதிச் சிக்கலும் ஒரு காரணம்” என்கிறார்.

சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நீட்டித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாதியில் நிற்கும் இந்த உயிரைக் காக்கும் ‘கோல்டன் ஹவர்’ திட்டத்தையும் தொடர்ந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படுமே!

 

Leave a Reply