Trifles

​நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சேர்ந்து ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவ்வழியேச் சென்ற ஒருவர் அங்கு நடந்த பணிகளை ஆர்வத்தோடு பார்த்தார்.

மரவேலைகள் செய்துகொண்டிருந்த ஒருவரிடம் சென்று, “ஐயா, தாங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

பார்த்தால் தெரியவில்லை மரங்களை இழைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று ஆர்வமற்ற ஒரு பதில் வந்தது.

அடுத்து சிற்பம் ஒன்றை வடித்துக் கொண்டிருந்த சிற்பியிடம் சென்று, “ஐயா, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “பார்த்தால் தெரியவில்லையா? கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்!” என்று சலிப்புடன் பதில் சொன்னார் அந்தச் சிற்பி.

அடுத்து, மதில் சுவருக்காக கல்லை கஷ்டப்பட்டு பிளந்து கொண்டிருந்த ஒருவரிடம் சென்று, “ஐயா, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அவர் தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, “நான் சிவாலயம் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்!” என்றார்.

மூன்று பேர் செய்வதும் ஒரே பணி தான். சொல்லப்போனால் கடைசியாக கல் உடைத்துக்கொண்டிருந்தவர்களை விட, மற்றவர்கள் அதிக ஊதியம் பெறுகிறவர்கள். 

ஆனால், தாங்கள் மகத்தானதொரு பணியை செய்வதாக அவர்கள் கருதவில்லை. ஆனால் மூன்றாமவர் கல் உடைத்தாலும் தான் சிவாலயத்தின் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்கிற உணர்வு அவர் மனதை ஆட்கொண்டிருந்தமையால் அவரால் அப்படி ஒரு அழகிய பதிலை சொல்ல முடிந்தது.

தொழிலுக்கான கூலியை பெறுவதோடு சிவாலயம் கட்டிய புண்ணியமும் அவருக்கு கிடைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், தன்னைப்பற்றியும், அத்தொழிலைப்பற்றியும் ஒருவர் கொண்டிருக்கும் கண்ணோட்டம் உயர்வானதாக, பரந்ததாக இருந்தால், செய்யும் தொழில் உயர்வடையும். அவர்களும் உயர்வடைவார்கள்.

நாம் மிக சாதாரணமாக கருதும் தொழில்களைச் செய்பவர்கள் கூட பல நேரங்களில், அத்தொழிலைச் செய்யும்போது அதில் காட்டும் ஈடுபாடு நம்மைப் பிரமிக்கவைக்கும்.

நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் அது எந்தப் பணியாக இருந்தாலும் சரி நம்மை பற்றிய கருத்தை இந்த உலகத்திற்கு பறைசாற்றும் ஒரு அற்புதமான கருவியாகும்.

தரை துடைப்பது முதல் கழிவறையை சுத்தம் செய்வது வரை எந்த பணி செய்தாலும் அதை ஒரு ஈடுப்பாட்டோடு அற்பணிப்பு உணர்வோடு செய்து வரவேண்டும்.

இத்தாலியை சேர்ந்த பிரபல சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ. இவர் ஒரு முறை ஒரு சிற்பத்தை மிக கவனமாக செதுக்கிக்கொண்டிருந்தார். MINUTE DETAIL எனப்படும் ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திற்கும் மிக அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார்.

அதை கவனித்து வந்த அவர் நண்பர் ஒருவர், “இதற்கு ஏன் இவ்வளவு நேரத்தை செலவழிக்கிறீர்கள்? நீங்கள் செய்த மாற்றங்கள் யாருக்கும் புலப்படப்போவதில்லையே…” என்றார்.

அதற்கு பதலளித்த மைக்கேல் ஏஞ்சலோ, “சிறு சிறு மாற்றங்களும் முயற்சிகளும் ஒரு பொருளின் நேர்த்திக்கு வழிவகுக்கும். அதே சமயம், நேர்த்திக்கு அது ஒன்று மட்டுமே போதுமானது அல்ல!” என்றார்.   “Trifles make perfection and perfection is no trifle.”

ஒரு பணியை நீங்கள் எவ்வளவு சீக்கிரம் செய்தீர்கள் என்பதை உலகம் மறந்துவிடும். ஆனால் நீங்கள் எவ்வளவு நேர்த்தியாக செய்தீர்கள் என்பது காலம் கடந்து நிற்கும்.

ஏனோ தானோவென்று தங்கள் கடமையை செய்பவர்களால் வாழ்வில் வெற்றி பெறவே முடியாது. எனவே எந்த பணியை செய்தாலும் அதை அற்பணிப்பு உணர்வுடனும், நேர்த்தியுடனும் செய்வோம்.

கடமையை செய்தால் வெற்றி…. கடமைக்கு செய்தால் தோல்வி……!

Leave a Reply