Life is beautiful

நண்பர் ஒருவரின் அனுபவம்
ஆட்டோ வருமாண்ணே

 

“போலாம் சார். இந்த பன்னை மட்டும் சாப்பிட்டு வந்தர்றேன்.”

 

பொறுமையா சாப்புடுங்க. ஒன்னும் அவசரமில்ல.

 

சாப்பிட்டு முடித்து கடைக்காரரிடம் 5 ரூபாய் கொடுத்து விட்டு, பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தையாய் பணத்தை எடுத்து ஒருமுறை எண்ணியிருக்கிறார். சோகமான முகத்துடன் “போலாம் சார், எங்க போகணும்”.

 

நண்பர் ஏரியாவை சொன்னதும், ஆட்டோவில் ஏறி அமர்ந்திருக்கிறார்.

 

ஆட்டோ முன்புறம் மீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற வாசகமும், பின்னால் சாய்பாபா படம் ஒன்றும் இருந்திருக்கிறது.

 

ஆட்டோவின் ஓட்டுநர் தலைக்கு மேலே அவரது குடும்ப படத்தை மாட்டி வைத்திருந்தார். அவர்,மனைவி, இரண்டு மகள்கள்.

 

ஆட்டோவை ஸ்டார்ட்ட் செய்த ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு போன் வந்திருக்கிறது.

 

“இல்லம்மா இன்னும் 1750 இருக்கு. கட்டிறலாம். என்னை நம்பு. அவள கெளம்ப சொல்லு. ”

 

போனை வைத்துவிட்டு திரும்பவும் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்.

 

அவரது விசும்பல் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறது.

 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கால்.

 

” கட்டிடுறேன் சார். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்குல்ல. அங்க வந்துடுவேன்”

 

போனைவைத்து விட்டு மெதுவாக அழ ஆரம்பித்திருக்கிறார். நண்பருக்கு என்ன செய்வதென்று தெரியாமல், சார் ஏன் அழறீங்க என கேட்க, உடைந்து போய் அழ ஆரம்பித்துவிட்டார்.

 

வண்டியை ஓரமாய் நிறுத்த சொல்லிவிட்டு என்னவென்று கேட்டிருக்கிறார்.

 

சார் செய்யாறு பக்கம் சொந்த ஊரு. முப்பது வருசம் முன்னாடி மெட்ராசு வந்தேன். நானே ஆட்டோ ஓட்டி ,சொந்தமா ஆட்டோ வாங்கி, என் புள்ளைங்களை படிக்க வெச்சேன். வாடகை வீடுதான். டிவி, வாஷிங்மெசின்,ப்ரிட்ஜ்ன்னு எல்லாம் வாங்குனேன். செம்பரம்பாக்கம் ஏரி உடைஞ்சதுல வீடு மொத்தமா போயிடுச்சு. முப்பது வருச உழைப்பும் ஒரே நாள்ல காலி ஆயிடுச்சு. பெரிய பொண்ணு படிச்சு முடிச்சு ஒரு ஐடி கம்பெனி்ல கேம்பஸ் செலக்ட் ஆயிட்டா. ஜனவரில வேலைக்கு போய்டுவா. சின்ன பொண்ணு காலேஜ்ல படிக்கிறா, வெள்ளம் வந்ததுல இருந்து மூணு செமஸ்டரா பீஸ் கட்ட முடியலை. என் நிலைமைய பார்த்து அந்த காலேஜ் பிரின்சிபால் அவங்க சொந்த பணத்துல இரண்டு செமஸ்டர் பீஸ் கட்டிட்டாங்க. ஒரே ஒரு செமஸ்டர் பீஸ் 4750 கட்டணும். அஞ்சு நாள் வீட்டுக்கு போகமா சாப்பிடாம ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன். இன்னும் 1750₹ வேணும். இந்த ஒரு செமஸ்டர் கட்டிட்டா என் பெரிய பொண்ணே அப்புறமா படிக்க வெச்சிருவா. நானும் நாயா அலையிறேன் சார். இன்னக்கி 12 மணிக்குள்ள்ள பீசை கட்டணும் . இன்னும் ரெண்டு மணி நேரம்தான் இருக்கு. என்ன செய்றதுன்னு தெரியலை. வெள்ளத்துல எல்லாம் அடிச்சிட்டு போனப்போ கூட தோத்துடுவேன்னு நெனக்கலை. இப்போ என் புள்ள படிக்கலன்னா உண்மையாவே தோத்துருவேனோன்னு பயமாயிருக்கு.

என் புள்ள சர்டிபிகேட் பாருங்கன்னு ஆட்டோவிலிருந்த ஃபைல் ஒன்றிலிருந்து எடுத்துக் காட்டியிருக்கிறார். கட்டவேண்டிய செமஸ்டர் படிவமும் அதில் இருந்திருக்கிறது.

 

என்ன செய்வதென்றே தெரியாமல் நண்பர் திருதிருவென முழித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

 

நண்பருக்கு ஒரு போன் வரவும், டைம் ஆயிடுச்சுன்னு நெனச்சு, “வாங்க சார் போலாம்”ன்னு திரும்பவும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்திருக்கிறார்.

 

நண்பரின் அலுவலகத்துக்கு வந்து சேர்வதற்குள் அடுத்தடுத்து மூன்று போன் கால்கள். அவர் எதையும் அட்டெண்ட் செய்யவில்லையாம்.

 

வந்து இறங்கியதும் ஆட்டாவில் மீட்டர் 134₹ காட்டியிருக்கிறது. நண்பர் 500₹ கொடுத்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் மீதியை சரியாக கொடுத்திருக்கிறார்.

 

பரவால்ல சார். வெச்சுக்குங்கன்னு நண்பர் சொல்லியிருக்கிறார்.

 

“இல்லை சார். மீட்டரைத் தவிர கூடுதலாக வாங்குறதில்லை. முப்பது வருச பழக்கம். ”

 

நண்பர் ஒரு நிமிடம் யோசித்து, ATM போய் 2000₹ எடுத்து ஆட்டோ ஓட்டுநரின் பாக்கெட்டில் வைத்திருக்கிறார்.

 

போய் பொண்ணுக்கு பீசை கட்டுங்கன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காமல் வந்திருக்கிறார்.

 

பின்னாலேயே அழுது கொண்டே ஓடிவந்த டிரைவர், “சார் இதை வேணாம்ன்னு சொல்ற நெலைமையில நான் இப்போ இல்லை”. ஒரு பேப்பரில் நம்பரை எழுதி, “இது என்னோட நம்பர். எப்போ ஆட்டோ வேணும்னாலும் கூப்பிடுங்க. நான் ஆட்டோ ஓட்டி கழிச்சுக்குறேன்”னு சொல்லியிருக்கிறார்.

நண்பர் அந்த பேப்பரை வாங்கிக் கொண்டு அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார். அவர் ஆட்டோ மறைந்ததும் பேப்பரை தூக்கி எறிந்துவிட்டாராம்.

 

#Lifeisbeautiful
நமது குழுவில் இணைய இந்த link ஐ click செய்து apply membership மற்றும் apply to join this group என click செய்யவும்.
https://groups.google.com/d/forum/ilayathalaimurai
பல நல்ல பயனுள்ள தகவல்களை உங்களுக்கு பரிமாறுவோம்.. 
நன்றி,

இளையதலைமுறை

Leave a Reply