9:41

9.41
அப்பாக்கு க்ரிட்டிக்கல்.
காரணம் அப்பாவோட வாட்ச் தொலஞ்சுபோச்சு.
எனக்கு தெரிஞ்சு அப்பாக்கு கடவுள் நம்பிக்கை இல்ல.

ஆனா அதையும் தாண்டி ஒரு ஷக்தி இருக்குன்னு சொல்லிட்டே இருப்பாரு.

ஒரு மேஜிக் நடக்கும்னு சொல்லுவாரு.
அப்பாவும் அம்மாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. ரொம்ப நாள் நண்பர்களா இருந்து அப்பறம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்.
அம்மா அப்பாக்கு வாங்கி குடுத்த முதல் கிஃப்ட் வாட்ச். அப்பாவோட குழந்தை, ராசி, உயிர், செல்ல பிராணி எல்லாமே அந்த வாட்ச்தான்.
அந்த வாட்ச்லஎன்ன சிறப்புன்னா சரியா 9.41-க்கு ஒரு அலாரம் அடிக்கும். இளையராஜாவோட ‘How to name it’ ஆல்பம்-ல இருந்து ‘Do anything’ இசை-ல முதல் ஒரு நிமிஷம் அதுல அலாரம் டோன்-னா வெச்சிருப்பாரு.
(கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்)


(முடிந்தால் இந்த இசையை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)
அப்பா காலேஜ் வாசல்ல உள்ள ஒரு கடை-ல தம் அடிச்சிட்டிருந்தப்போ, அம்மா அதே கடைல வந்து ஒரு ரூல்ட் நோட்டு வாங்கினாங்களாம். அப்போ கடைக்காரர்கிட்ட மணி என்ன-ன்னு கேட்டப்போ அவரு சொன்ன நேரம் 9.40.அப்பா அன்னிக்கு என் தாத்தாவோட வாட்ச் கட்டிட்டுப் போயிருந்தாராம். அவரோட வாட்ச்-ல பாத்தப்போ மணி 9.41. அம்மாவோட குரல், அவங்க வெச்சிருந்த சாந்து பொட்டு, மல்லிப்பூ, முக லட்சணம் எல்லாம் பாத்து மயங்குனவர்தான் அன்னைக்கு தூக்கி எரிஞ்ச தம் அடிக்கிற பழக்கம், அதுக்கப்பறம் தம் அடிக்கணும்-னு ஒரு எண்ணம் வரவே இல்ல-ன்னு சொல்லுவாரு.
ரெண்டு பேரும் நண்பர்களா மட்டும்தான் இருக்கணும்-னு சபதம்-லாம் எடுத்திருக்காங்க.
‘அது என்னைக்காவது ஒரு நாள் உடையும். எப்படியும் நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம்-னு என் மனசு சொல்லிட்டேதான் இருந்துச்சு’-ன்னு அப்பா சொல்வாரு.
இதுல ப்யூட்டி என்னன்னா அம்மாவும் இதையே சொன்னாங்க.
அப்பறம் ஏன் ரெண்டு பேரும் அப்படி ஒரு சபதம் எடுத்தீங்க-ன்னு கேட்டா, ‘தெரியாது’-ன்னு சொல்லி அசடு வழியுவாங்க ரெண்டு பேரும்.
எனக்கு தெரிஞ்ச ஒரு அற்புதமான காதல் அப்பா – அம்மாவோடது.
ரெண்டு பேருக்கும் எக்கச்சக்கமா சண்ட வரும். ஆனா 5 நிமிஷம் மேல இருக்காது. ஒரு வேல ரொம்ப நேரம் ஆச்சுன்னா அன்னைக்கு காலைலயோ , ராத்திரியோ 9.41க்கு அந்த இளையராஜா இசை வரப்போ என்ன நடக்கும்னே தெரியாது. அம்மா கிச்சன்ல இருந்தாங்கன்னா ஹால்-க்கு ஓடி வந்திடுவாங்க, அப்பா வீட்டுல எந்த மூலைல இருந்தாலும் ஓடி வந்திருவாரு. ரெண்டு பேரும் ஒருத்தர்க்கு ஒருத்தர் கண்ண பாத்துக்குவாங்க.
‘என்ன டி டிபன் இன்னைக்கு?’-ன்னு அப்பா ஆரம்பிப்பாரு. இல்லன்னா,

‘ஏங்க.. முகம் அலம்பிட்டு வாங்க காபி போடுறேன்’னு அம்மா எதா ஆரம்பிப்பாங்க.
எத்தன எத்தனையோ மேஜிக்கல் கவிதைகள் நடந்திருக்கு 9.41க்கு.
9.41 அப்பாவோட ராசியான நேரம்.
ஒரு விஷயம் மேல கண்மூடித்தனமா நம்பிக்கை வெச்சா என்னவெல்லாம் நடக்கும்ங்கறதுக்கு அப்பாவோட இந்த மூடநம்பிக்கை ஒரு சாட்சி. சொல்லப்போனும்னா கடவுளே அப்படி உருவாக்கப்பட்டதுதான?
அவரு வாழ்க்கைல சொல்லிவெச்சது மாதிரி நிறைய விஷயங்கள் 9.41க்கு நடந்துச்சு.
நான் பொறந்தது 9.41, அப்பாக்கு வேலை கிடைச்சது, அப்பா அம்மாக்கு கல்யாணம் நடந்தது, அப்பா அம்மாவ பாத்தது, எனக்கு கல்யாணம் நடந்தது, என் பொண்ணு த்வானி பொறந்தது, இத்தன வருஷம் ஆன பின்னாடியும் அம்மா-அப்பா அந்த ஒரு நிமிஷம் காதல்-ல விழறது, இன்னும் என்னென்னவோ.
ஒரு மூணு வருஷம் முன்னால த்வானி-ய பாக்குறதுக்கு அம்மா – அப்பா ரெண்டு பேரும் சென்னை வந்திருந்தாங்க. அப்போ த்வானிக்கு 3 வயசு.
த்வானி-க்கு பாட்டி தாத்தா-ன்னா ரொம்ப பிடிக்கும். அப்பாக்கூட சேர்ந்து அவளும் 9.41க்கு ஒரு நிமிஷம் கண்ண மூடி இளையராஜாவோட இசை கேப்பா.
ஒருநாள் காலைல அப்பா ஈசி சேர் போட்டு வராந்தா-ல உக்காந்திருந்தாரு. பேப்பர் படிச்சிட்டு அப்படியே தூங்கிட்டாரு. அம்மாக்கு கொஞ்சம் மூட்டுவலி இருந்ததால அவங்க ஹால்-ல ஒரு கட்டில்-ல படுத்திருந்தாங்க.
நான் அவருக்கு கொஞ்ச தூரம் தள்ளி தரைல உக்காந்து ஃபோன்-ல பேசிட்டிருந்தேன். அப்பா ஒரு மாதிரி அலறியடிச்சு எந்திரிச்சாரு.

மணி 9.43.
எனக்கு தெரிஞ்சு அன்னைக்கு 9.41க்கு அந்த மியூசிக் வரல.
‘என்னப்பா?’-ன்னேன்.
‘அம்மா எங்கப்பா?’-ன்னாரு.
‘உள்ள படுத்துட்டிருக்காங்க ப்பா. என்னாச்சு? ஏதாவது வேணுமா?’ன்னு கேட்டேன்.
அப்பா மூஞ்சுல ஒரு மிகப்பெரிய மாற்றம், ஒரு பயம், ஒரு மாதிரி நிதானம் இல்லாம இருந்தாரு.
‘அப்பா.. என்னாச்சு. ஏன் ஒரு மாதிரி ஆகறிங்க?’-ன்னு கேட்டுட்டே அவரு பக்கத்துல இருந்தப்போ, அவரு உக்காந்திருந்த சேர்-ல இருந்து எழுந்து, தடுமாறி அந்த சேர்-லயே விழுந்திட்டாரு.
பக்கத்துல போயி அவர கைதாங்கலா பிடிச்சு, அவரு கைய என் தோள் மேல போட்டு அவர தூக்குறேன், ‘அம்மா போயிட்டாப்பா’ன்னு அழுவுறாரு.
‘அப்பா.. என்னப்பா ஏதாவது கனவா? அம்மா உள்ள படுத்திருக்காங்க. ரேவதி….. இங்க வா கொஞ்சம்’-ன்னு கத்துனேன்.
என் மனைவி உள்ளிருந்து ஓடி வந்தா.
த்வானி உள்ள இருந்து ஓடி வந்து என் கால கட்டிக்கிட்டு ‘பாட்டி பேசமாட்டிங்கறாங்க மனோ டா’-ன்னு சொல்றா. எனக்கு கையெல்லாம் உதறுது.
நான் அப்பாவ ஒரு நிமிஷம் பாத்தேன். அப்பாவோட முதிர்ந்த கண்கள் அம்மாவ தேடுது. மெதுவா அவர கை பிடிச்சு அம்மாக்கிட்ட கூட்டிட்டு போனேன்.
அம்மாக்கு உயிர் இல்ல.
என்னால நம்ப முடியல. நானும் ரேவதியும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கறோம்.

எப்படி ஒரு மனுஷனால ஒரு உயிர் பிரிஞ்சு போறது வரைக்கும் கணிக்க முடியுது. அதுவும் ஒரு கடிகாரத்தையும், அதுல வர்ற இசையை வெச்சும்.
சில விஷயங்கள் ஆராய தேவை இல்ல. நம்பினா மட்டும் போதும். கடவுள் நம்பிக்கை மாதிரி. இருக்கு – இல்ல மாதிரி விவாதங்கள் தேவை இல்ல.
சிலர் சொல்லுவாங்கல்ல ‘அவரு மரம் செடி கொடிகிட்டலாம் பேசுவாரு’ன்னு.
எல்லாத்துக்குள்ளயுமே ஒரு ஜீவன் இருக்குன்னு நம்புறவங்களுக்கு ஒரு அதிசயம் நடக்குமோ என்னவோ.
சொந்தகாரங்களுக்கெல்லாம் சொல்லி வரசொல்லி அன்னைக்கு சாயுங்காலம் அடக்கமெல்லாம் பண்ணிட்டு வந்த அப்பறம் ரேவதி எல்லாருக்கும் காபி போட்டு கொண்டுவந்தா. யாரும் சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டாங்க. அன்னைக்கு ராத்திரி 9.41-க்கு மறுபடி அந்த ம்யூசிக் வந்துச்சு அப்பா வாட்ச்-ல. அப்பா கதறி அழ ஆரம்பிச்சிட்டாரு. ஒரு குழந்தை மாதிரி.
கொஞ்ச நாள் ரொம்ப வேதனையா போச்சு. அப்பறம் அந்த ம்யூசிக் வரப்போலாம் அப்பாக்கு கண் மட்டும் கலங்கும். அந்த வருஷம் த்வானியோட பர்த்டே வந்துச்சு. அவ பொறந்தது மே 11 – 9.41க்கு. ரொம்ப சந்தோஷமா இருந்தாரு அப்பா. அன்னைக்கு எல்லாருக்கும் அவரு வாழ்க்கைல நடந்த 9.41 மேஜிக்ஸ் பத்தி அழகா விவரிச்சாரு. அன்னைக்குலேர்ந்து அந்த நேரத்துல நடந்த மத்த நல்ல விஷயங்கள நெனச்சு சந்தோஷப்பட்டுக்க ஆரம்பிச்சாரு.
ஒரு ரெண்டு வருஷம் வேகமா ஓடி போச்சு. அதுக்கப்பறம் ஒரு நாள் அவரோட கண்ணாடிய எங்கயோ வெச்சுட்டேன்னு வீடு முழுக்க தேடிட்டிருந்தாரு. ரேவதி வந்து எப்போதும் வைக்குற எடத்துல இருந்து எடுத்துக் குடுத்தா.
இது மாதிரி நெறைய விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சோனதான் அவரு எல்லாத்தையும் மறக்க ஆரம்பிக்குறாருனே தெரிஞ்சிது. யாராவது ஒருத்தர் அவர் செய்யுற வேலையெல்லாம் கவனிச்சுக்கிட்டே இருக்கணும். அவரு எங்க எத வைக்குறாரு. என்ன பண்றார். என்ன தேடுறார்-னு எல்லாத்தையும்.
த்வானி அத அவ்வளோ அழகா பாத்துக்கிட்டா.
சில சொந்தக்காரங்க ஒரு நாள் ஊருல இருந்து போன் பண்ணி திருவிழா-க்கு வர சொல்லியிருந்தாங்க . ஊருக்கு வந்திட்டு போனா ஒரு மாறுதல் தெரியும். பழைbய விஷயங்கள் ஞாபகம் வரும் அப்டி இப்டினு சொன்னாங்க.
எனக்கும் ரேவதிக்குமே அது சரின்னு பட்டுச்சு. ரேவதி , அப்பா, த்வானி எல்லாரையும் ஊருல விட்டுட்டு நான் சென்னை வந்துட்டேன். 3 நாள் கழிச்சு ரேவதி கால் பண்ணினா .

‘ஏங்க.. அப்பாக்கு ரொம்ப முடியல. காலைல மயங்கி விழுந்துட்டாரு.’ன்னு.
நான் உடனே கிளம்பி ஊருக்கு போனேன். பேசிக் ட்ரீட்மென்ட் மட்டும் தஞ்சாவூர்லயே பண்ணிட்டு சென்னைக்கு கூட்டிட்டு வந்தாச்சு. வர்ற வழியிலதான் அவரு கையில கடிகாரம் இல்லாததையே கவனிச்சோம்.
ஊருல இருக்க சொந்தக்காரங்ககிட்ட சொல்லி தேட சொல்லிருந்தோம். சென்னை வந்த 2 மணிநேரத்துல அப்பாக்கு ரொம்ப முடியாம போச்சு. அடையார்ல உள்ள ஒரு ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருந்தோம்.
அவரோட இந்த நிலைமைக்கு ஒரே காரணம்தான்.

அவரோட கடிகாரம். அந்த இசை.
ஹாஸ்பிட்டல்-ல இன்னைக்கு ஒரு நாளைக்கு ICU-ல வெச்சு இம்ப்ரூவ்மென்ட் இருக்கான்னு பாக்கலாம்னு சொன்னாங்க.

என்ன பண்ணுறதுன்னே தெரியல. ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை ஊருக்கு கால் பண்ணி வாட்ச் பத்தின அப்டேட்ஸ் கேட்டுட்டே இருந்தேன்.
நர்ஸ் வந்து யாராச்சு ஒருத்தர் இங்க தங்கலாம். மத்தவங்க கிளம்புங்கன்னு சொல்லிட்டாங்க.
நைட்டு த்வானி-யையும் ரேவதி-யையும் வீட்டுக்கு அனுப்பிடலாம்னு வெளில வந்தேன். என் செல்ல பொண்ணு த்வானி முகம் ரொம்பவே வாடிப் போயிருந்துச்சு.
‘என்ன டா குட்டி?’-ன்னேன்.

‘உன்னால இந்த சாஃப்ட்வேர் வெச்சுலாம் எதும் செய்ய முடியாதா மனோ டா?’ ன்னு கேட்டா த்வானி.
‘ச்ச. எப்படி பெரியவங்க ஒரு பிரச்சனன்னா இவ்ளோ துவண்டு போயிடறோம். ஆனா சின்ன குழந்தைங்க இவ்ளோ தெளிவா யோசிக்கிறாங்களே!!’ன்னு தோனுச்சு
மணி இரவு 9.41.
என் ஆஃபீஸ்ல நந்தா , நரேன்ன்னு ரெண்டு பேர் இருக்காங்க. கூட வேல செய்யுறவங்க. ஆன்ட்ராய்ட் டெவலப்பர்ஸ். கொஞ்சம் மண்ட. அவங்களுக்கு கால் பண்ணி ஏதாவது செய்யமுடியுமான்னு கேட்டுப்பாத்தேன்.
2 நாள் ஆகும்னு சொன்னாங்க.
எனக்கு ஒரு பீட்டா அப்ளிகேஷனாச்சும் வேணும். எப்படியாவது ஒரு நாள்ல முடிச்சு குடுங்கன்னு கேட்டேன்.

சரி சார். ட்ரை பண்ணுறோம்னு சொன்னாங்க.
இந்த இசை வரவெக்கிறது ஒரு அலாரமால கூட செய்ய முடியும்.

ஆனா அப்பாவோட வாட்ச்ல நொடி முள் நகருற சத்தம் ரொம்ப துல்லியமா கேக்கும். அத ஒரு ஆண்ட்ராயிட் அப்ளிக்கேஷன் மூலமா பண்ணலாம்னு நெனச்சேன்.
அப்பாக்கு பல்ஸ் எறங்கிட்டே இருந்துச்சு.

நம்பிக்கையே இல்ல. ஏதோ ஒன்னு ஆகிடுமோன்னு பயம்மா இருந்துச்சு.

அடுத்த நாள் த்வானியும், ரேவதியும் வந்ததும் நான் வீட்டுக்கு கிளம்பினேன்.

அவர்கூட நான் செலவிட்ட நாட்கள். அவரோட அம்மா நானெல்லாம் எப்படிலாம் சந்தோஷமா இருந்தோம்னு மனசு ஏதேதோ அசைபோட்டுக்கிட்டே இருக்கு.
வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு, நந்தாக்கு கால் பண்ணினேன். அப்போ மணி 9.41.

‘ஒரு 11 மணிக்கா apk அனுப்பறேன் டெஸ்ட் பண்ணிப் பாருங்க மனோ’-ன்னு சொன்னாரு.

நான் ஹாஸ்பிட்டல்க்கு வந்ததும் ரேவதி ஃப்ளாஸ்க்-ல இருந்து கொஞ்சம் டீ ஊத்தி குடுத்தா.

நந்தா apk அனுப்பிருந்தாரு.

தற்காலிகமா ஆன்ட்ராய்ட் ஃபோன்-ல போட்டு 11.30-க்கு ஒரு அலாரம் ஷெட்யூல் பண்ணினோம்.

கரக்ட்டா 11.30 மணிக்கு அடிச்சுது.
டாக்டர்கிட்ட போயி பெர்மிஷன் கேட்டோம். ICU உள்ள வெக்கிறதுக்கு முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார். அப்படி இப்படின்னு பேசி சமாளிச்சு ஃபோன ஏர் ப்ளேன் மோட்-ல ICU-ல வெச்சோம்.
அலாரம் மதியம் 1.30க்கு செட் பண்ணி வெச்சிருந்தோம். வெளில வந்து மறுபடி நந்தாக்கு கால் பண்ணி எந்த நேரம் செட் பண்ணினாலும் வேலை செய்யுமானு கேட்டுக்கிட்டேன்.
‘செய்யும்’னு சொன்னாரு.

1.30 மணி நெருங்க நெருங்க பதட்டமா இருந்துச்சு.

மியூசிக் வரல.

த்வானி, நான், ரேவதி எல்லாருமே பயங்கர அப்செட்.

டாக்டர் வந்து பாத்துட்டு போனாரு. டாக்டர் சொன்ன ‘பாக்கலாம்’ங்கற வார்த்தை, ‘முடிஞ்சிது’னு கேட்டுச்சு.
எல்லாரையும் நர்ஸ் வெளில இருக்க சொல்லிட்டாங்க. நைட்டு வரைக்கும் கொஞ்சம் தண்ணி கூட குடிக்கல யாரும்.
ஃபோன் த்வானியோட குட்டி ஹேண்ட்பேக்-ல இருந்துச்சு. த்வானிக்கு கண்ணு சொருக ஆரம்பிச்சிடுச்சு.

அவ ரேவதி மடில படுத்திருக்க, ரேவதி என் தோள்-ல சாய்ஞ்சிட்டிருந்தா.

மூணு பேரும் வெயிட்டிங் ஏரியா-ல உக்காந்திருந்தோம்.

நான் த்வானி தூங்கிட்டாளான்னு எட்டிப் பாத்தேன்.
என் குட்டிப் பொண்ணு கைய சேர்த்துவெச்சு சாமி கும்புட்டுடிருந்தா.

நான் லேசா ரேவதிக்கு சிக்னல் குடுத்து அத கவனிக்க சொன்னேன். ரேவதிக்கு கண்ணுலாம் கலங்கிருச்சு.

என்னதான் இருந்தாலும் சின்ன குழந்தைங்க சின்ன குழந்தைங்கதான்.
திடிர்னு இளையராஜா மியூசிக் கேட்டுச்சு.

மூணு பேரும் அட் எ டைம்-ல பதறி அடிச்சு எழுந்து உக்காருறோம்.

மணி 9.41.
த்வானி ஃபோன கையில எடுத்துக்கிட்டு ICUக்கு ஓடுறா.

நானும் ரேவதியும் அவ பின்னாடியே.

யாரையும் எதும் கேட்டுக்கல.

கதவுல இருந்து எட்டாவது பெட்-ல அப்பாவ வெச்சிருக்காங்க.

எங்கள நர்ஸ் கதவு பக்கத்துலையே நிக்க சொல்லிட்டாங்க.

கொலுசு சத்தம் கேட்காத மாதிரி நடக்க ட்ரை பண்ணுறா த்வானி.

நொடி முள் சத்தமும், இளையராஜா இசையும் மட்டும்தான் கேக்குது.

த்வானி ஃபோன எடுத்துக்கிட்டு அப்பா பக்கத்துல போக போக………………………….

ஹையோ…. சத்தியமா இதெல்லாம் நடக்குதா??
பல்ஸ் மெல்லமா ரைஸ் ஆகுது…

நர்ஸ் டாக்டர கூப்புட ஓடுறாங்க.
டாக்டர் வந்து பாத்துட்டு, ‘சிம்பிள் சார்.எதாச்சு பண்ணி அந்த மியூசிக்க கேட்டுட்டே இருக்க வைங்க.’ன்னு சொல்லிட்டுப் போனாரு.
2 நாள்-ல அப்பாவ வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாச்சு.

எழுந்துக்கலாம் முடியல.
13 நாள் பெட்-ல தான் இருந்தாரு.

இன்னைக்கு காலைல அவரா எழுந்து உக்காந்தாரு. எல்லாரும் அவர சுத்தி நின்னுட்டிருக்கோம்.

வாட்ச் கேட்டாருன்னா என்ன பண்ணுறதுன்னு திருட்டு முழி முழிச்சிட்டிடுக்கோம்.
எதுமே கேக்கல. த்வானிய தூக்கி மடி மேல உக்கார வெச்சுக்கிட்டாரு.

9.41.

மியூசிக் கேட்டுச்சு.

அப்பாவும் த்வானியும் கண் மூடி இளையராஜா இசை கேட்டாங்க.

தியானம் மாதிரி.
இசை, உயிர் மூச்சானத பாக்க முடிஞ்சுது.
– மனோபாரதி

Leave a Reply