31 பட்டம்

ன்னு விடாம எல்லா வித்தைகளையும் செஞ்சு பார்த்துட்டேன் சார்.. நோ யூஸ்….  தொட்டது எல்லாத்துலயும் தோல்வி தான். இனிமே என்னால எந்த நஷ்டத்தையும் தாங்க முடியாது… இனிமே எப்படி போறதுன்னும் தெரியலே..” என்னும் ஒரு முற்றுப்புள்ளி நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் (அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்கள்) பலர் உண்டு. அவர்களெல்லாம் தங்கள் வாழ்க்கையில் உடனடியாக ஒரு மிகப் பெரிய திருப்பத்தை பார்க்கவேண்டும் என்றால் – அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். எதையும் நேர்மறையாக (பாஸிட்டிவ்) சிந்திக்கும் பழக்கத்தை உடனடியாக ஏற்படுத்திக்கொள்வது. அதற்கு பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கை போகும் போக்கை!

“எதையுமே பாஸிட்டிவ்வா பாருங்க” – மேலோட்டமா பார்க்கிறதுக்கு இது சாதரணமான வாக்கியமா தெரியலாம். ஆனா இது எப்பேற்பட்ட ஒரு வைர வரி என்பது அதன் பலனை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

எதையும் நேர்மறையாக பார்க்கும் வழக்கம் வந்துவிட்டால் வாழ்க்கையே அதற்கு பிறகு மிக மிக சுவாரஸ்யமாக மாறிவிடும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மிக பெரிய வாய்ப்புகள் ஒளிந்திருப்பதை கண்டு நீங்கள் “இத்தனை நாள் நாம் வாழ்க்கையை வீணடித்துவிட்டோமே… அடடா நெகடிவ்வான மனிதர்களுடன் சேர்ந்து மிகப் பெரிய சந்தர்ப்பங்களை கோட்டை விட்டுவிட்டோமோ” என்று நினைப்பீர்கள்.

இந்த தளமே எதையும் நேர்மறையாக பார்க்கும் என்னுடைய பழக்கத்தினால் ஏற்பட்ட விளைவு தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவா நாம ‘இத்தோட அவர் கதை முடிஞ்சுது’ அப்படின்னு நினைக்கிற இடத்துல தான் சில பேர் தங்களோட வாழ்க்கையையே ஆரம்பிப்பாங்க.

அப்படி ஒரு சம்பவம் தான் நாம கீழே பார்க்கிறது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

குஜராத் டாக்டர் சாதனை

சிறையில் படித்து 31 பட்டம்

சிறையில் இருந்தபடியே படித்து 31 பட்டங்களை பெற்று டாக்டர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் டாக்டர் பானு படேல். கடந்த 2004ல் அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு (பெரா) சட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு அகமதாபாத் நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2005ல் தீர்ப்பளித்தது.

Doctor

சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பொழுதே போகவில்லை. நாள் முழுவதும் மருத்துவமனை, நோயாளிகள் என்று பரபரப்பாக இருந்தவருக்கு சிறைவாசம் போர் அடித்தது. டாக்டருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள மருந்தகத்தில் இவருக்கு வேலை தரப்பட்டது. கைதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். பின்னர் சிறையில் உள்ள நூலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அப்போது, டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த கைதிகளுக்கு உதவுவதற்காக கடிதங்களை எழுதினார்.

இதை தொடர்ந்து ஆர்வத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் படிப்பை முடித்தவர், உடனடியாக அடுத்த படிப்பில் சேர்ந்தார். இப்படியே, அடுத்தடுத்து, பி.காம், எம்.காம், எம்.எஸ்சி மற்றும் பல்வேறு முதுநிலை பட்டயப் படிப்புகளை முடித்தார். சிறையில் இருந்து 2011ம் டிசம்பரில் விடுதலை ஆனபோது மொத்தம் 31 பட்டம் & பட்டய படிப்புகளை முடித்திருந்தார். சிறையில் இருந்தபடி அதிக பட்டங்களை பெற்றவர் என்பதால் சாதனை புத்தகங்களில் பானு படேலின் பெயர் இடம் பெற்றுள்ளது.

விடுதலைக்கு பிறகு அவர் திறந்தவெளி பல்கலைக்கழக ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இப்போது, குஜராத்தில் உள்ள சிறைகளில் இயங்கும் 26 பல்கலைக்கழக மையங்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அவரை ஆசிரியராக நியமிக்க திறந்தவெளி பல்கலைக்கழகம் உறுதி அளித்துள்ளது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இந்த டாக்டர் மீது வேறு சில குற்றச்சாட்டுக்களும் உண்டு.

அது பற்றி அவர் கூறுகையில் : “என் அன்புக்குரியவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் காப்பாற்றவில்லை என்பது எனக்கு தெரியும். நான் ஒரு டாக்டர். இருப்பினும் சமூகத்துக்கு எதிராக பல தவறான செயல்களில் ஈடுபட்டேன். எனக்கு நிச்சயம் தண்டனை வேண்டியது தான். எனவே அது குறித்து நான் கவலைப்படவில்லை. தனிமையில் ஏழு வருடங்கள் சிறையில் இருந்தது என்னை மாற்றியது. சபர்மதி சிறைச்சாலை என்னை செதுக்கியது. சிறையிலிருந்து விடுதலையானவுடன்   என்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு புதிய மனிதனாக வலம் வர உத்தேசித்தேன். அதற்கு பிறகு தான் எனக்கு படிப்பு மற்றும் பட்டங்கள்   மீது கவனம் திரும்பியது!” என்று கூறுகிறார் இந்த தன்னம்பிக்கை டாக்டர்.

சந்தர்ப்ப சூழ்நிலை & செய்த தவறுகளினால் தண்டனை பெற்று சிறைக்கு செல்பவர்கள் அத்தோடு நொறுங்கிப் போய்விடுகிறார்கள். ‘இனிமே வாழ்க்கையே இல்லை’ என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார்கள். ஆனால் இவரை பாருங்கள்…. தனது அணுகுமுறையால் தனக்கு ஏற்பட்ட சோதனையை கூட சாதனையாக மாற்றிக்கொண்டுவிட்டார்.

பொதுவாகவே இவரைப் போன்ற சமூகத்தில் சற்று அந்தஸ்தில் இருப்பவர்கள் சிறைக்கு சென்றால் எப்படியாவது வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் நிச்சயம் முன்பைப் போல அவர்களால் தலை நிமிர்ந்து அதே கௌரவத்துடன் நடக்க முடியாது.

ஆனால் இவர் நிச்சயம் முன்பை விட தலை நிமிர்ந்தே நடப்பார் என்றே நம்பலாம். பானு படேல் சார், உங்களுக்கு ஒரு சல்யூட்….!

தவறான நபர்களின் சேர்க்கையினால் எதிர்மறை சிந்தனையிலேயே ஊறிக்கொண்டிருப்பவர்களுக்கு எப்பவும் எதையும் பாஸிட்டிவ்வா பார்க்கிறது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதை பழக்கப்படுத்திகொள்வது என்பது மிகவும் கஷ்டம். ஆனால் கஷ்டப்பட்டு அதை பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்! தினம் தினம் சுபதினம் தான்!!

Leave a Reply