துவேஷம்

ரு பெரியவருக்கு அவரது பக்கத்து வீட்டில் இருந்த ஒரு இளைஞன் மேல் ஏதோ ஒரு அதிருப்தி. அது நாளடைவில் வெறுப்பாக மாறியது. வருவோர் போவோரிடமெல்லாம் அந்த இளைஞனை பற்றி குறை கூறி வந்தார். அந்த இளைஞன் என்னவோ தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருந்து வந்தான். ஆனாலும் பெரியவருக்கு அவன் மீது துவேஷம்.

இப்போதெல்லாம் வம்புக்கு இழுப்பவர்களைவிட தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக போய் கொண்டிருப்பவர்கள் மீதும் தான் பலருக்கு துவேஷம் ஏற்படுகிறது. (கலி காலமாச்சே!)

அனைவரிடமும், “அந்த ஆளு  சரியில்லே சார்… அவன் நடவடிக்கை சரியில்லேப்பா…” என்று பெரியவர் புகார்ப் பட்டியல் வாசித்து வந்தார்.

இந்நிலையில் இவரது வீட்டில் ஒரு பொருள் திருட்டு போய்விடுகிறது. அதையும் அந்த இளைஞன் தான் செய்திருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்த அந்த பெரியவர், போலீசாரிடம் புகார் செய்து, அந்த இளைஞனை கைது செய்ய வைத்துவிடுகிறார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, இளைஞன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு விடுகிறான். இத்தனை நாள் மன உளைச்சலில் தவித்த அந்த இளைஞன் பெரியவர் மீது வீண் பழி சுமத்தியமைக்காக வழக்கு தொடுக்கிறான்.

பெரியவர் அந்த இளைஞன் மீது கொண்ட துவேஷம் காரணமாக புகார் கூறியதையும் அவன் மீது வீண் சந்தேகப்பட்டதையும் நீதிபதி புரிந்துகொள்கிறார்.

“அவன் மீது நான் கூறிய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் வெறும் வார்த்தைகளே. அவனை நான் வேறு எதுவும் செய்யவில்லை. போலீசார் தான் அவனை கைது செய்தனர். அது எப்படி தவறாகும்?” என்று பெரியவர் வாதிட்டார்.

“அந்த இளைஞன் மீது இதுவரை நீங்கள் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் சிறு சிறு பேப்பர் துண்டுகளில் எழுதி வீட்டுக்கு போகும் வழியில் ஆகாங்கே போட்டுக்கொண்டே செல்லுங்கள். நாளை காலை மறுபடியும் நீதி மன்றம் வாருங்கள். தீர்ப்பு கூறப்படும்!” என்றார் நீதிபதி.

நீதிபதி கூறியதால் பெரியவரும் அதன்படியே செய்தார்.

மறுநாள் நீதிமன்றம் மீண்டும் கூடியது.

நீதிபதி அந்த பெரியவரை பார்த்து, “நீங்கள் நேற்று வீசிய பேப்பட் துண்டுகள் அனைத்தையும் இப்போது கொண்டு வாருங்கள். பிறகு என் தீர்ப்பை சொல்கிறேன்” என்றார்.

பெரியவர் பதறிப்போய், “ஐயோ… அது எப்படி முடியும்? காற்றில் அவை நாலாபுறமும் பறந்து சென்றிருக்குமே…” என்றார்.

“அதே தான். ஒருவர் மீதும் நாம் சுமத்தும் பழி, களங்கம் உள்ளிட்டவை கூட அவரது பெயரை கெடுப்பது மட்டுமின்றி நாம் அதை மீண்டும் சரி செய்ய வாய்ப்பில்லாதபடி அமைந்துவிடும். ஒருவரை பற்றி உங்களால் நல்லவிதமாக கூற முடியவில்லையா? தவறாக எதுவும் கூறாமல் இருங்கள்! அது போதும்!!” என்று கூறிய நீதிபதி, “ஆராயாது நீங்கள் செய்த செயலால் அந்த இளைஞனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அவனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது மட்டுமின்றி ஒரு மாதம் சிறைத்தண்டனையும் நீங்கள் அனுபவிக்கவேண்டும்” என்று கூறி தீர்ப்பளித்தார்.

=============================================================

நண்பர்களே, இது சாதாரண கதை போல தோன்றினாலும் இது உணர்த்தும் நீதி வலிமையானது.

அலுவலகத்திலோ, நிஜ வாழ்க்கையிலோ ஒரு தவறை இன்னார் தான் செய்திருப்பார் என்று ஆதாரப்பூர்வமாக உறுதியாக உங்களுக்கு  தெரியாதபோது சந்தேகத்தின் பேரில் குறிப்பிட்ட ஒருவர் மீது பழி சுமத்துவதை அவசியம் தவிர்க்கவும்.

வில்லில் இருந்து விடுபட்ட அம்பும், வாயிலிருந்து விடுபட்ட சொல்லும் திரும்ப வாராது.

நமது வாய்க்கு நாம் அனைவரும் எஜமானர்களாக இருந்தால், அவை பேசும் வார்த்தைகளுக்கு நாம் அடிமையாக இருக்கவேண்டிய அவசியம் இருக்காது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி உங்கள் செயலால் கழுவில் ஏற்றப்படக்கூடாது. பாவத்திலும் கொடும்பாவம் ஒரு நிரபராதி உங்கள் செயலால் தண்டிக்கப்படுவது.

Leave a Reply