​குடும்ப உறவுகளிடம் ரகசியமும், பொய்யும் வேண்டாமே

ஒரு மனிதனுக்கு தன் மகிழ்ச்சியினை, துக்கத்தினை பகிர்ந்து கொள்ள நெஞ்சுக்கு நெருக்கமான ஆள் வேண்டும். அது தான் குடும்பம்.
குடும்பம் என்பது ஒரு மனிதனுள் பின்னிப்பிணைந்தது. குடும்பம் இல்லாத ஒரு மனிதன் முழுமை இல்லாதவன் ஆகின்றான். இங்கு நான் முற்றும் துறந்த மகான்களைப் பற்றி பேசவில்லை. அவர்கள் நம்மால் போற்றப்பட்டும், வணங்கப்பட்டும் வருபவர்கள். நான் கூறுவதெல்லாம் சாதாரண யதார்த்த மனிதனைப் பற்றி மட்டுமே.
ஆக மனிதனுக்கு குடும்பமே முக்கியம். அவனுக்கு பெற்றோர், மனைவி, குழந்தைகள், அண்ணன், அக்கா, சித்தப்பா, அத்தை, மாமா என அவனது உறவுகள் நீண்டு கொண்டே செல்லும். ஒரு குடும்பத்தின் முழு பொறுப்பும் அதில் உள்ள அனைத்து நபர்களையும் சாரும். இதுதான் அந்த குடும்பத்தினை மகிழ்ச்சியாய் வாழ வைக்கும். 
பல குடும்பங்கள் சேர்ந்தது ஒரு சமுதாயம், ஒரு நாடு என்று விரிவடையும். குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த மனிதன் வெளி சமுதாயத்தில் மகிழ்ச்சியாய் இருப்பான். ஒழுங்காய் இருப்பான். ஏனெனில் அவனுக்குப் பின்னே ஒரு குடும்பமே அதாவது பல நபர்கள் அவன் உறவுகளாய், அவன் முதுகெலும்பாய் நிற்கிறார்கள்.இங்கு அவன் என்று நான் குறிப்பிடுவது பொதுவாகத்தான். இங்கு கூறப்படுபவை அனைத்தும் ஆண் பெண் இருபாலருக்குமே.

. ..

குடும்பத்தினால் ஒரு மனிதனுக்கு என்ன நன்மை கிடைக்கின்றது?
* குடும்பம் இரண்டு கை, இரண்டு கால் கொண்ட சமூக மிருகத்தினை மனிதனாக மாற்றுகின்றது.
* ஒரு மனிதனுக்கு தன் மகிழ்ச்சியினை, துக்கத்தினை பகிர்ந்து கொள்ள நெஞ்சுக்கு நெருக்கமான ஆள் வேண்டும். அது தான் குடும்பம்.
* தனியாக வாழும் ஒரு மனிதனை விட குடும்பத்தோடு வாழும் மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதினை அன்றாட வாழ்வில் நாம் காணலாம்.
* கூட்டு குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சமுதாயத்தினை வெகுவாய் மதிப்பார்கள்.
* அன்பு, பாசம், நேர்மை, தன்னம்பிக்கை இவை போன்ற உண்மைகள், பண்புகள் குடும்பத்தோடு வளர்பவரிடம் இருக்கும்.
* குடும்பத்தோடு வாழும் குழந்தைகள் புத்திசாலியாய், திறமையாய் வளரும். காரணம் அங்குள்ள பெரியோர்களின் வழிகாட்டுதலே.

* இக்காலத்தில் கணவன், மனைவி ஒரு குழந்தை வீட்டில் வேலைக்கு அதிக உதவி ஆட்கள் என பெருகி வரும் இக்காலத்தில் அதிக திருட்டு, கொலை, குழந்தைகளுக்கு வன்முறை போன்றவையும் பெருகி வருகின்றன.
* குடும்பத்தில் மூத்தவர்களும் சேர்ந்து இருந்த நேரத்தில் குடும்ப செலவு, வீட்டு வேலை என எதுவுமே யாருக்குமே பெரிய சுமையாக இருந்ததில்லை.
* ஒரு குழந்தைக்கு அளவிட முடியாத அன்பு குடும்பத்தில் உள்ள பலரிடம் இருந்தும் கிடைத்துக் கொண்டே இருந்தது.
* திருட்டு, கொலை, வன்முறைகள், மிகக் குறைவாய் இருந்தது.
* செலவுகள் கட்டுக்குள் இருந்தன.
* குடும்ப கட்டுப்பாடு காரணமாக தீய பழக்கங்கள் குறைவாக இருந்தன.
* கல்யாணம், விழா இவை அனைத்தும் அனைவரின் தோள்களிலும் சுமக்கப்படுகின்றது.
* வாழ்வினை வாழக் கற்றுக் கொள்ள இளைய சமுதாயத்தினால் எளிதாய் முடிந்தது.
* ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழத் தெரிந்தது.
* எங்க தாத்தா, பாட்டி, சித்தப்பா என்ற ஒற்றுமை இருந்தது.
* இந்த அருமையான சொர்க்கம் இன்று காணப்படுவது குறைந்து வருகின்றது. அல்லது பல குறைகளோடு வாழ்கின்றனர். இந்த நிலை தொடருமானால் திரும்பவும் மனிதன் சமூதாய மிருகம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவானோ என்ற கவலை தோன்றுகின்றது. 
இதன் காரணம் என்ன?
* ஏனோ சில தீய குணங்களும் பழக்கங்களும் குடும்ப நபர்களின் மனதில் புகுந்து விட்டன.
* ஒருவர் உழைப்பதும் பலர் அதனை உழைப்பில்லாமல் உண்பதும் ஒருவரின் நல்ல குணத்தினை பலர் அட்டை போல் உறிஞ்சுவதும் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தி விட்டன.
* வீட்டுக்கு ஒரு சகுனி இருந்தால் போதும் பலதலைமுறைக்கு அக்குடும்பம் பாதிக்கப்பட்டு விடுகின்றது.
* உயர் சம்பளம் பெறுபவர் குறைந்த சம்பளம் வாங்குபவரை மட்டப்படுத்துவது கலாசாரமாகி விட்டது. 
* வீட்டின் பெரியவர் தலைவர் என்பது போய் தலைக்குத் தலை பெரிய ஆள் என்று பேசுவது விரிசலான குடும்பங்களை நன்கு உடைக்கின்றது. 
* மொத்தத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மகாபாரத யுத்தம் நிகழ்கின்றது. 
* ‘நான்’, ‘நான் மட்டுமே’ என்ற நினைப்பே இன்று அநேகரை ஆட் கொள்கின்றது.
இந்த போக்கு ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கவே செய்கின்றது.

Leave a Reply