வைர வரிகள்

நம்மில் நிறைய பேர் ஒரு புது நட்பை தேர்ந்தெடுப்பது எதை அடிப்படையாக வைத்து என்று பார்த்தோமானால் அது பெரும்பாலும் புகழ்ச்சியை அடிப்படையாக வைத்து தான் இருக்கும். ஆனால் அது சரியான முறையா? “இந்திரனே, சந்திரனே, இவரைப் போல யாரும் இல்லை… உன்னைப் போல அந்த வேலையை செய்து முடிக்க யாருமில்லை!” என்று புகழ்ந்து கூறினால் போதும் சிலருக்கு உச்சி குளிர்ந்துவிடுகிறது. அதற்கு பிறகு அவர்களுக்கு வைக்கப்படும் ஆப்பு கண்களுக்கு தெரிவதில்லை.

ஒரு மனிதனுக்குப் பாராட்டு, புகழ்ச்சி, ஊக்கம் தேவைதான். ஆனால் அது ஒரு அளவு வரை கிடைத்தால் போதுமானது. அளவுக்கு மீறுகிற போதும், தகுதியற்ற பாராட்டை நாம் எதிர்பார்க்கிற போதும் நமக்கே அது வினையாகி விடுகிறது.

பலியாடு தனக்கு பூசப்படும் மஞ்சள் குங்குமம் மாலை மரியாதையை பார்த்து “ஆகா! நமக்குத்தான் இவர்கள் எவ்வளவு மரியாதை செய்கிறார்கள்” என்று அது நினைத்தால் அது எத்தனை அறிவீனமோ அத்தகைய அறிவீனம் தான் பாராட்டைக் கேட்டு நாம் குளிர்ந்துப் போவதும்!

நம்மைப் புகழ்கிறவர்கள் பெரும்பாலானவர்கள் சுயநலவாதிகளே. எனவே கவனம் தேவை.

மனித மனம் புகழ்ச்சிக்கு ஏங்கும் ஒரு மிகப் பெரிய பலவீனம். ஒருவர் நம்மை புகழ்ந்து நாலு வார்த்தை பேசிவிட்டால் போதும் நமக்கு தலை கால் புரிவதில்லே. நெருங்கிய நட்போ அல்லது வாழ்க்கைத் துணையோ அவர்களிடம் கூட ஷேர் பண்ணாத விஷயங்களை எல்லாம் நம்மை புகழ்கிறவர்களிடம் ஷேர் செய்ய ஆரம்பித்துவிடுவோம். அங்கே தான் நமக்கு அழிவே ஆரம்பமாகிறது. “நாம் யாரை நம்பி நமது கண்ணீருக்கான காரணங்களை சொல்கிறோமோ அவர்களே அதை உபயோகப்படுத்தி நம்மை அழவைத்துவிடுகிறார்கள்!”. கொஞ்சம் யோசிச்சு பாருங்கள்… வாழ்க்கையில் நீங்க கண்ணீர் சிந்திய பல தருணங்கள் இது போல உங்களை ஒரு காலத்தில் “ஆஹா ஓஹோ” என்று புகழ்ந்தவர்களால் தான் இருக்கும்.

நம்மை புகழ்கிறவர்களுடைய கருத்துக்களுக்கு நாம் ஒத்துப்போகும் வரை தான் நம் நட்பு அவர்களுக்கு இனிக்கச் செய்யும். ஆனால் ஒரு சிறு விஷயத்தில் கருத்து வேறுபாடு வந்துவிட்டால் போதும் அதற்கு பிறகு அவர்கள் நம் எதிரிகளாக மாறிவிடுவார்கள். ஒரு சிலர் அப்படி மாறிய பின்பு விலகி போய்விடுவார்கள். அவர்களால் நமக்கு ஆபத்தில்லை. கவலையுமில்லை. ஆனால், சிலர் மனதுக்குள் வஞ்சம் வைத்து ஏதேனும் ஒரு வகையில் பழி தீர்க்க காத்துக்கொண்டிருப்பார்கள்.

என்னைப் பொருத்தவரை என்னை மிக அதிகமாக புகழ்ந்தவர்களே என் மிகப் பெரிய எதிரிகளாக கடந்த காலங்களில் மாறியிருக்கிறார்கள். எனவே எப்போதும் என்னை புகழ்கிறவர்களிடம் நான் சற்று எச்சரிக்கையாகவே இருப்பேன். நீங்களும் அப்படித் தான் இருக்கவேண்டும்.

புகழ்ச்சி எப்படி ஆபத்தாக மாறுகிறது தெரியுமா? ஒருவர் நம்மை அளவுக்குட்பட்டோ அல்லது அளவுக்கு மீறியோ புகழும்போது, அவருக்கு நம்மிடம் ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. நம் கவனம், நேரம், உதவி, ஆலோசனை இப்படி ஏதேனும் ஒன்றை நம்மிடம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதை நாம் நிறைவேற்றமுடியாமல் போகும்போது அந்த எதிர்பார்ப்பு நம் மீது அதிருப்தியை ஏற்படுத்திவிடுகிறது. அதிருப்தி நாளடைவில் கோபமாக மாறுகிறது. கோபம் வஞ்சமாக மாறி நமக்கு குழிபறிக்கிறது.

எனவே புகழ் போதையை எடுத்த எடுப்பிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும்.

புகழ் பெற்றவர்கள் மேலும் புகழ் பெறுகிறார்கள் என்பது தவறு. புகழை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளுபவர்களைத் தேடி புகழ் மீண்டும் வருகிறது என்பதுதான் உண்மை. திறமைக்கு சரியான மதிப்பை எதிர்பார்ப்பவர்கள் புகழ்ச்சியான வார்த்தைகளில் மயங்கிவிடக் கூடாது.

1960 களின் இடையில் அறிஞர் அண்ணா ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற போது, தென்மாவட்ட தலைநகர் ஒன்றில் கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதாம். அதுவரை அப்படி ஒரு கூட்டத்தை திராவிட தலைவர்கள் கண்டதேயில்லையாம். தி.மு.க.வினர் பயங்கர உற்சாகத்தில் மூழ்கிவிட்டனர். அப்போது, அண்ணாவிடம் ஒரு இரண்டாம் மட்ட தலைவர் ஒருவர், “அண்ணே, உங்களுக்கு கூடும் கூட்டத்தை பார்த்தால் நிச்சயம் அடுத்து நமது ஆட்சி தான் போலிருக்கிறது…!!” என்றாராம்.

அதற்கு அண்ணா, “அடே முட்டாள்… இதே கூட்டத்திடம் நாளை இதே இடத்தில் என்னை நிற்கவைத்து சவுக்கால் அடிக்கபோவதாக சொல். இதை விட இரண்டு மடங்கு கூட்டம் அதைப் பார்க்க வரும்!” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம். எத்தனை உண்மை… அண்ணாவின் வார்த்தைகள்….!

சில நிறுவனங்களில் புதுப் புது ஊழியர்கள் நல்ல சம்பளத்துடன் பதவி உயர்வு பெற்றுக்கொண்டு எங்கேயோ போய்கொண்டிருப்பார்க்கள். ஆனால் அதே நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் ஒரு மூத்த ஊழியர் அதே சம்பளத்துடன் நீண்ட நாட்களுக்கு வேலை பார்த்துவருவார். சொல்லப்போனால் புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு பல விஷயங்களை கற்றுத் தருவது இவராகத் தான் இருக்கும். எல்லோரையும் விட அதிக விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கும் அந்த மூத்த ஊழியர் ஏன் முன்னேறிச்செல்ல முடியவில்லை? காரணம் என்னவென்றால், முதலாளிகளிடமிருந்து அவ்வப்போது வரும் புகழ் மாலைகளை அணிந்து கொண்டு தன்னிடமுள்ள திறமையின் மதிப்பையும், அதன் தேவையையும் உணராது என்றாவது ஒரு நாள் தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தில் தனக்கு பண ரீதியான மரியாதை நிச்சயம் கிடைக்கும் என்று தான். இவரை வார்த்தைகளால் புகழ்ந்து பேசிப்பேசி அதே நிலையில் வைத்திருப்பார்கள்.

இப்படி புகழ் வார்த்தைகளுக்கு அடிமையாகும் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையின் மதிப்பை உணராமல் தங்களின் திறமைக்குக் கிடைக்க வேண்டிய அல்லது கிடைத்திருக்க வேண்டிய பலனை மட்டுமே நினைத்து, நினைத்து காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் தன்னுடைய திறமையின் மதிப்பு என்னவென்று தெரிந்துதான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் அதீத புகழ்ச்சியானது அந்த மதிப்பை மறக்கச் செய்துவிடுகிறது. மற்றவர்களின் புகழ் வார்த்தைகளில் மயங்கி, தான் இருக்குமிடம்தான் உலகம் என்று எண்ணி தங்களுடைய திறமையின் மதிப்பை தாங்களும் உணராமல் மற்றவர்களுக்கும் உணர்த்தாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருந்துவிட்டு மறைந்து போகிறார்கள்.

உன்னைப் புகழும்போது செவிடனாக இரு!
உன்னை இகழும்பொது ஊமையாக இரு!!

முன்னேற துடிப்பவர் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் இவை.

Leave a Reply