வைரம்

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த மிகப் பெரிய தொழிலதிபர் ரஸ்ஸல் ஹெர்மன் கான்வெல். இவர் 1843-ல் பிறந்து, 1925 ஆம் ஆண்டு வரை 80 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்தவர். 15 ஆண்டுகள் வக்கீல் தொழில் ப்ராக்டீஸ் செய்த பின் சர்ச் ஒன்றில் பாதிரியார் ஆனார்.

ஒரு நாள் ஒரு ஏழை மாணவன் ஒருவன் அவரிடம் வந்து தான் மேற்படிப்பு படிக்க விரும்புவதாகவும் ஆனால் அதற்குரிய பணவசதி இல்லைஎன்றும் கூறினான். அந்தக் கணமே கான்வெலுக்குத் தன் வாழ்க்கையின் லட்சியம் என்னவென்று தெரிந்தது. தகுதியும் திறமையும் உடைய ஏழை மாணவர்கள் படிப்பதற்கு என்று ஒரு பல்கலைக்கழகம் நிறுவ முடிவு செய்தார்.

அது மிகப் பெரியதொரு சவால்; அதற்கு பல லட்சம் டாலர்கள் தேவை என்பதும் அவருக்குத் தெரியும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று அறிந்திருந்த அவருக்கு ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த ஓர் உண்மை சம்பவம் மிகவும் உத்வேகம் கொடுத்தது.

diamond

ஆப்பிரிக்காவில் ஹபீஸ் என்ற ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் மனநிறைவுடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்தான். மகிழ்ச்சியாக இருந்ததால் மனநிறைவுடன் இருந்தான். ஒரு நாள் அவனை சந்திக்க ஒரு வழிப்போக்கன் ஒருவன் வந்தான். வழிப்போக்கன் அவனிடம் வைரத்தின் பெருமைகளை எடுத்துக் கூறி, “உன் கட்டை விரல் அளவு வைரம் இருந்தால் போதும். இந்த ஊரையே நீ விலைக்கு வாங்கிவிடலாம். உன் உள்ளங்கையளவு வைரம் இருந்தால் இந்த நாட்டையே விலைக்கு வாங்கிவிடலாம்.” என்றான்.

எப்போதும் மகிழ்ச்சியாக உறங்கும் ஹபீஸால் அன்றிரவு உறங்க முடியவில்லை. நம்மிடம் ஒரு கட்டை விரல் அளவோ அல்லது கையாளவோ வைரம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தான். இதனால் அவன் நிம்மதி இழந்தான். அவனிடம் இருந்த மனநிறைவு  மறைந்தது. மனநிறைவு மறைந்ததால் மகிழ்ச்சியும் தொலைந்தது.

அடுத்த நாள் காலை தனது பண்ணையையும் நிலத்தையும் விற்க ஏற்பாடு செய்தான். குடும்பத்தை கவனித்துக்கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்துவிட்டு, வைரத்தை தேடி கிளம்பினான்.

ஆப்பிரிக்கா முழுதும் தேடினான். வைரம் எங்கும் கிடைக்கவில்லை. பிறகு ஐரோப்பா சென்றான். ஐரோப்பா முழுதும் தேடினான். அங்கும் கிடைக்கவில்லை. ஸ்பெயினுக்கு செல்லும்போது அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். வயதும் ஏறிவிட்டது. கையில் வைத்திருந்த பணம் முழுதும் கரைந்து போயிருந்தது. ஒரு பெரிய செல்வந்தனாக ஊருக்கு திரும்ப நினைத்த ஹபீஸ் இறுதியில் பார்சிலோனா நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டான்.

இங்கே அவன் பண்ணை வீட்டை வாங்கியவர் அந்த பண்ணை நிலத்தின் வழியே செல்லும் ஒரு ஓடையில், தனது ஒட்டகங்களுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அந்த காலை நேரத்தில் சூரியனின் கிரணங்கள் ஒரு கல்லின் மீது பட்டு பளப்பளவென மின்னியது. அதை எடுத்துக்கொண்டு போய் தனது வீட்டில் உள்ள மேஜையில் உள்ள பூ ஜாடியின் மேலே வைத்தார்.
“இல்லை… ஏன் கேட்கிறாய்?”முன்னர் பார்த்த வழிபோக்கன் திரும்ப வந்தான். மேஜையின் மீது மின்னிக்கொண்டிருந்த வைரத்தை பார்த்து, “என்ன ஹபீஸ் திரும்ப வந்துவிட்டானா?” என்று கேட்டான்.

“இது ஒரு விலைமதிப்பற்ற வைரம். என்னால் வைரத்தை பார்த்துவுடனே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.”

“அப்படியா இதை பண்ணையில் உள்ள ஓடைக்கு அருகில் கண்டுபிடித்தேன்.”

இருவரும் சென்று அந்த இடத்தை பார்க்கிறார்கள். மண்ணை தோண்டியதில் அந்த இடத்தில் ஒரு பெரும் வைரச் சுரங்கமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பண்ணை தான் உலகப் புகழ் பெற்ற கிம்பர்லி வைரப் பண்ணை. (KIMBERLEY DIAMOND MINES).

KIMBERLEY DIAMOND MINES

வைரத்தை தேடி எங்கெங்கோ அலைந்து திரிந்து கிடைக்காமல் இறுதியில் தற்கொலை செய்துகொண்டவர் உண்மையில் ஒரு வைரச் சுரங்கத்தில் தான் வாழ்ந்திருக்கிறார்.

ஃபிலடெல்பியாவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தின் இன்றைய தோற்றம்
temple university

பல்கலைக் கழகத்திற்கு நிதி திரட்டும் கூட்டங்களில் டாக்டர் கான்வெல் இந்த விவசாயியின் கதையை எடுத்துரைத்தார். நாம் எல்லோரும் நம்முடைய நமக்கே சொந்தமான வயல்களின் மத்தியில்தான் இருக்கிறோம். வேறு சூழ்நிலைகளைத் தேடி ஓடாமல் நாம் இருக்கும் இடத்தை சற்று ஆராய்ந்து பார்த்தால், பண்படுத்தி, பயன்படுத்தினால் புவியில் வாழ்வாங்கு வாழலாமே! கிடைப்பதற்கரிய புதையல்களைக் கண்டெடுக்கலாமே!

கான்வெல் ACRES OF DIAMOND என்ற தலைப்பில் இந்த சம்பவத்தை பலமுறை சொன்னபோது, அதைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தனர். கிட்டத்தட்ட 6000 முறை இந்த சம்பவத்தை பற்றி அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் உரையாற்றியிருக்கிறார். அவர் இதன் மூலமே கல்லூரி தொடங்குவதற்குத் தேவையான பணத்தைச் சேகரித்தார். 60 லட்சம் டாலர்கள் கிடைத்தது! அதைக் கொண்டு அவர் நிறுவிய பல்கலைக்கழகம் தான் டெம்பிள் யூனிவர்சிடி. அமெரிக்காவின் ஃபிலடெல்பியா மாகாணத்தில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்.

Russell

மேற்கூறிய ஆப்பிரிக்க விவசாயியின் சம்பவமும் அதை தொடர்ந்து அதன் மூலம் கான்வெல் உத்தேவேகம் பெற்று ஒரு பல்கலைக்கழகத்தையே நிறுவியதும் கற்பனையல்ல. உண்மை சம்பவம். (ஆதாரம் : https://www.temple.edu/about/history-and-traditions/acres-diamonds )

உங்களுக்கு தேவையானவற்றை – பணம், வாய்ப்பு, அங்கீகாரம், உதவி இப்படி பலப் பல – பிறரிடம் கேட்டு கேட்டு சலித்துவிட்டீர்கள் அல்லவா… அது சரி அவற்றை உங்களிடம் கேட்டுப் பார்த்தீர்களா? உங்களுக்கு நீங்கள் தான் உதவ முடியுமே தவிர, மற்றவர்கள் ஒருபோதும் உதவ முடியாது. உங்களுக்கு தேவையான வலிமையையும் சக்தியும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

Swami-Vivekananda

 

  • உறங்கியது போதும்.

  • மயங்கிக் கிடந்தது போதும்.

  • அடுத்தவரிடம் கேட்டு கேட்டு காத்திருந்து சலித்தது போதும்.

  • எழுங்கள். உறக்கத்திலிருந்து எழுங்கள்.

  • உங்களுக்கு தேவையானதை உங்களிடமே கேளுங்கள்.

  • உங்களுக்கு மறுக்காமல் உதவத் தயாராய் இருப்பவர் நீங்கள் மட்டுமே!

வாய்ப்புக்கள் எங்கிருந்தோ வருவன அல்ல; அவை முதலிலிருந்தே நம்மிடம் இருக்கின்றன. குனிந்து பாருங்கள் உங்கள் காலடியை! உங்களுக்கு அங்கு வைரக்கற்கள் தென்படாவிட்டாலும், ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி உங்களை இட்டுச்செல்லும் இரண்டு உறுதியான கால்களை நீங்கள் கட்டாயம் காண்பீர்கள்!

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே!!

Leave a Reply