வெற்றுப்படகு

லரை டீல் செய்யவேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், வணிகத்தில் ஈடுபடுகிறவர்கள், நான்கு பேரோடு பழக நேர்பவர்கள் முக்கியமான கைவிட வேண்டிய ஒரு குணம் ‘கோபம்’. அர்த்தமற்ற கோபம் ஒருவரை அழித்துவிடும். பகைவர்களை உற்பத்தி செய்யும். சற்று யோசித்துப் பார்த்தால் நமக்கு வரும் கோபங்களில் பெரும்பாலானவை அர்த்தமற்றவையே. இந்த கதையில் வரும் துறவியை போல.

தியானம் செய்யும்போது ஏதாவது ஒரு இடையூறு ஏற்படுகிறது என்பதால் வெறுப்படைந்த அந்த துறவி மடத்திற்கு வெளியே தொலைதூரத்தில் உள்ள ஒரு ஏரிக்கு சென்று அங்கு ஒரு படகை எடுத்துக்கொண்டு ஏரியின் நடுப்பகுதிக்கு சென்று தியானம் செய்ய முடிவெடுத்தார். அப்படியே செய்தார்.

எந்த வித இடையூறும் இல்லாமல் ஒரு சில மணிநேரங்கள் தியானத்தில் கழிந்த பின், வேறு ஏதோ ஒரு படகு ஒரு வந்து இவர் அமர்ந்திருந்த படகின் மீது மோத, இவருக்கு “இங்கேயுமா…?” என்று கோபம் மெல்ல தலைக்கேறுகிறது. கோபத்தை அடக்க முடியாமல் கண்களை திறந்து தன் படகின் மீது மோதியவர் யார் என்று பார்த்து கூச்சலிட தீர்மானித்த நேரத்தில் பார்த்தால் அது ஒரு ஆளில்லா படகும். யாரோ படகை கயிற்றில் கட்டாமல் விட்டுவிட, அது அப்படியே காற்றின் போக்கில் நகர்ந்து ஏரியின் நடுப்பகுதிக்கு வந்து இவர் படகின் மீது மோதியிருக்கிறது. அவ்வளவு தான்.

இந்த ஆளில்லா படகின் மீதா நமது கோபத்தை காட்ட தீர்மானித்தோம்???’ என்று தன்னை அவர் நொந்துகொண்ட தருணத்தில் அவருக்கு தன்னிலை உணர்வு ஏற்பட்டது. ‘கோபம் என்னும் அழிவு சக்தி வெளியே இல்லை நமக்குள் தான் இருக்கிறது. வெளிப்புறத்திலிருந்து ஏதோ ஒன்று அதை தூண்டிவிட்டால் போதும். நாம் அதற்கு இரையாகிவிடுகிறோம்’ என்று உணர்ந்தார்.

அது முதல் அவரை யார் எரிச்சலூட்ட முயன்றாலும் சரி தூண்டிவிட்டாலும் சரி…. “எதிரே இருப்பது ஜஸ்ட் ஒரு வெற்றுப்படகு. கோபம் எனக்குள் தான் இருக்கிறது” என்று நினைத்துக்கொள்வார்.

இனி வெற்றுப்படகுகளை கண்டு நாம் கோபம் கொள்ளலாமா நமது நிம்மதியை கெடுத்துக்கொள்ளலாமா என்று நீங்களே முடிவு செய்த்துக்கொள்ளுங்கள்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும். (குறள் 306)

குறள் விளக்கம் : சினம் என்பது யாரிடம் இருக்கிறதோ அவர்களை அழித்து விடுவதோடு அவருக்கு வாழ்வில் பேருதவியாக இருக்கும் அருநட்பையும் கெடுத்து விடும்.

Leave a Reply