வெறுப்புணர்வு

ரு மன்னன் தனது அமைச்சரை அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். ஒரு வீட்டுத் திண்ணையில் அந்த நாட்டு பிரஜை ஒருவன் ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தான்.

அரசன் அவனை பார்த்துக்கொண்டே சென்றான். மறுநாள் அதே நேரம் அதே இடம். அந்த மனிதன் முதல் நாளைப் போலவே சிந்தனையிலிருப்பதை பார்க்கிறான்.

“அமைச்சரே, அந்த மனிதனை நேற்றும் பார்த்தேன். இன்றும் பார்க்கிறேன். ஏனோ தெரியவில்லை அவனை பார்த்ததும் அவனுக்கு ஏதேனும் தண்டனை தரவேண்டும் என்று தோன்றுகிறது. அவனை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏன் ஏற்படுகிறது?”

சற்று யோசித்த அமைச்சர்… “அரசே எனக்கு சில நாட்கள் அவகாசம் கொடுங்கள்… கண்டுபிடித்து சொல்கிறேன்” என்றார்.

அமைச்சர் அரண்மனை திரும்பியதும் ஒற்றர்கள் மூலம் அந்த ஆளைப் பற்றி தகவல்களை சேகரித்தார். அவன் ஒரு சந்தன வியாபாரி. சந்தனைக்கட்டைகளை விற்பவன். அனைத்து விபரங்களையும் சேகரித்த பின்னர் அரசனிடம் வந்தார் அமைச்சர்.

“அரசே…. இன்னும் சில மாதங்களில் இந்திர விழா வருகிறது. பல தேசங்களில் இருந்து மன்னர்கள் வருவார்கள். அவர் வந்தால் தங்குவதற்கு ஒரு சிறிய அரண்மனையை நாம் கட்டவேண்டும். அதில் கட்டில் முதல் கதவுகள் வரை அனைத்தும் சந்தன மரத்தைகொண்டே செய்யவேண்டும்!” என்றார்.

“ஆஹா… நல்ல யோசனை. நீங்கள்  எதைச் செய்தாலும் அதில் ஆழ்ந்த பொருள் இருக்கும் என எனக்கு தெரியும். உடனே ஏற்பாடுகளை துவக்குங்கள்!” என்று மன்னன் அனுமதி தந்தான்.

அமைச்சரின் மேற்பார்வையில் முழுக்க முழுக்க சந்தன மரங்களை கொண்டு ஒரு சிறிய அரண்மனை கட்டி முடிக்கப்பட்டது. மன்னர் புதிய அரண்மனையை பார்த்து வியந்தார்.

அதற்கு அடுத்த வாரம் அவர்கள் வழக்கம் போல மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர்.

இப்போது அதே மனிதனை பார்த்தார் மன்னர். “அமைச்சரே நினைவிருக்கிறதா…. இதே மனிதனை நாம் முன்பு நகர்வலம் வரும்போதும் பார்த்தோம்…”

“ஆம் மன்னா நன்றாக நினைவிருக்கிறது!”

“முன்பு அவனை பார்த்தபோது அவனை தண்டிக்க வேண்டும் என்கிற குரூர எண்ணம் தோன்றும். ஆனால் இன்று பார்க்கும்போது…”

“இன்று பார்க்கும்போது???”

“அப்படி ஒரு என்னமோ வெறுப்போ அவன் மீது தோன்றவில்லையே… ஏன்? இது ஆச்சரியமாக இருக்கிறது!”

“அரண்மனைக்கு சென்றதும் இதை விளக்குகிறேன் மன்னா” என்று கூறிய அமைச்சர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சந்தன மாளிகைக்கு அழைத்துச் செல்கிறார்.

“மன்னா.. அந்த மனிதன் ஒரு சந்தன வியாபாரி. பல மாதங்களாக விற்பனை சரியாக இன்றி அவன் வியாபாரத்தில் பெரும் நஷ்டம். எனவே அவன் மனதில் ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. அரசர் இறந்துபோனால் நிறைய சந்தக்கட்டைகள் தேவைப்படுமே… அரசன் சீக்கிரம் இறந்துபோகமாட்டானா என்று நினைத்துக்கொண்டிருந்தான். அவன் மனதில் அப்படி ஒரு குரூர எண்ணம் இருந்ததால் அவனை பார்த்தவுடன் உங்களுக்கு வெறுப்பு தோன்றியிருக்கிறது.”

“இப்போது ஏன் ஏற்படவில்லை?”

“தங்களின் அனுமதியின் பேரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சந்தன மாளிகைக்கு ஏராளமான சந்த மரங்களை அவனிடம் கொள்முதல் செய்தோம். அவன் கனவிலும் எதிர்பார்க்காத அளவு அவனுக்கு நல்ல வியாபாரம். வருவாய். எனவே தனக்கு நல்ல வியாபாரத்தை அள்ளித் தரும் அரசன் நன்றாக இருக்கவேண்டும் அவன் உளமாற விரும்புகிறான். உங்கள் மீதிருந்த அந்த தவறான எண்ணம் மறைந்து மனதில் நல்ல எண்ணம் தோன்றியிருப்பதால் அவனை பார்க்கும்போது உங்களுக்கு இப்போது வெறுப்பு ஏற்படவில்லை.”

“சபாஷ் அமைச்சரே….!” என்று அமைச்சரின் மதிநுட்பத்தை பாராட்டிய மன்னன் அவருக்கு பொன்னும் பொருளும் பரிசளித்து மகிழ்ந்தான்.

ஒருவரைப் பற்றி தவறான எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் எதிராளிக்கும் நம்மிடம் வெறுப்புணர்வே தோன்றும். அதே போல ஒருவரைப் பற்றி நேர்மறையான நல்லவிதமான எண்ணத்தை நம் மனதில் ஏற்படுத்திக்கொண்டால் அவருக்கு நம்மிடம் பிரியம் அன்பு ஏற்படும். ஆக… எல்லாரும் நல்லதையே நினைக்க மனத்தை பழக்கப்படுத்தவேண்டும். தீய எண்ணங்களை வெறுப்புணர்வை ஒரு போதும் மனதில் வளர்க்கக்கூடாது. 

Leave a Reply