வெகுநேரம் அமர்ந்து பணி புரிந்தால்

ஒரு நாளில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் இடுப்புவலி, முதுகுவலி வருவதோடு மட்டுமல்லாமல் வாழ்நாளைக் குறைக்கும் என்ற ஆராய்ச்சி முடிவு சில  மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தின்  நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களால் வெளியானது. அது அப்போது சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவ, அலுவலகத்தில் பல மணிநேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் மனதில் பயம் பரவியது. ஆனால் தற்போது எஸ்சிடர் பல்கலைக்கழகமும், லண்டன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் ஓர் உண்மை வெளியாகியுள்ளது. உலகில் நீண்டகாலம் (16 வருடங்கள்)  நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று. இதற்காக 5000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ‘NHS- இன் முடிவுகள் தவறானது. நெடுநேரம் உக்கார்ந்திருப்பதால் உடலில் கொழுப்பு சேர்ந்து சர்க்கரை நோய் வர சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் ஆயுள் குறையாது’ என தெரிவித்துள்ளனர். எபிடெர்மியாலஜி சர்வதேச மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் மெல்வின் ஹில்சிடன் கூறுகையில், ‘நெடுநேரம் அசையாமல் ஒரே நிலையில் இருப்பது உடற்பருமன் , டைப் 2 சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், திடீர் மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல உடல் உபாதைகளைத் தரக்கூடியது என கூறுகிறார். அமர்ந்திருப்பது மட்டுமல்லாமல் நிற்பதோ, படுப்பதோ எதுவாக இருந்தாலும் பலமணிநேரம் ஒரே நிலையில் இருக்கக் கூடாது. நிலையை குறைந்தது அரை மணி நேரத்துக்கொருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மனிதனின் சராசரி ஆயுள் குறைவதற்கும், அதிகரிப்பதற்கும், ஒரே நிலையில் அமர்ந்திருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என இந்த ஆராய்ச்சி மூலம் நிரூபணமாகிறது. சாப்பிட்டு விட்டு நெடுநேரம் நிற்கும்போது 30 சதவிகித உடல் கொழுப்பை இழக்க வாய்ப்புள்ளது. அதுவே அமர்ந்திருக்கும்போது கொழுப்பு கரைய தாமதமாகிறது.

பொதுவாக அலுவலகத்தில் குறைந்தது 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவ்வப்போது எழுந்து நிற்கவோ, நடக்கவோ செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் தொடர்ந்து பலமணிநேரம் உட்கார்ந்துவிட்டு , தினமும் காலையில் மட்டும் கடுமையான உடற்பயிற்சி செய்வதால் எந்தவித பயனும் இல்லை,

சர்க்கரை அளவு மதியம் சாப்பிட்டு விட்டு பலமணிநேரம் அமர்ந்து வேலை செய்வதால் அதிகரிக்கும் என்கிறார், பேராசிரியர் ரிச்சர்ட் பல்ஸ்போர்ட்.  10 மணிநேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வதால் 50 வயதுக்கு மேற்பட்ட பருமனான ஆண்களுக்கு இதயக்குழாய் அடைப்பு ஏற்படலாம். மேலும் முதுகு தண்டுவடத்திற்கு இடையே உள்ள டிஸ்க் அழுத்தப்பட்டு தேய்மானம் அல்லது வீக்கம் உண்டாகலாம். மெனோபாஸ் முடிந்த 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஸ்பாண்டிலைடிஸ் என்னும் எலும்பு வலு இழக்கும் தன்மை உண்டாகலாம்.

4 முதல் 5 மணி நேரம் வரை நின்று வேலை செய்பவர்கள் (லிஃப்ட் ஆபரேட்டர்கள், வாட்ச்மேன்)  அவ்வப்போது நடக்கவோ, உட்காரவோ வேண்டும். சிலர் படுத்தவுடன் களைப்பு மேலிட ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்று விடுவார். இதனால் மல்லாந்த நிலையிலேயே பலமணிநேரம் தூங்குவார். இதனால் பின்மண்டை, முதுகு, தொடை அழுத்தப்பட்டு உடற்பாகங்களில் ரத்த ஓட்டம் நின்று மரத்துப் போகலாம். ஆகவே அவ்வப்போது படுத்திருக்கும் நிலையை மாற்றப் பழக வேண்டும். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும் போகப் போக பழகிவிடும்.

Leave a Reply