வீழ்வதற்கு தயாராக இருங்கள்! 

1800 களின் துவக்கம். அமெரிக்காவில் ஒரு ஏரியின் கரையோரம் உள்ள பெஞ்சில் தன் தாயுடன் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான்.

கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதை ஆர்வமுடன் பார்க்கிறான்.

பறவைகள் மட்டும் பறக்கின்றனவே எப்படி அம்மா?”

“ஆண்டவன் அவற்றுக்கு சிறகுகளை தந்திருக்கிறான். அதன் மூலம் அவை பறக்கின்றன”

“அம்மா நமக்கும் சிறகுகள் இருந்தால் நாமும் அந்த பறவையைப் போல பறக்கலாம் அல்லவா?”

“பறப்பது என்பது பறவைகளாலும் தேவதைகளாலும் மட்டுமே முடியும். மனிதனால் ஒரு போதும் பறக்கமுடியாது மகனே!”

அந்த தாய் மட்டுமல்ல… மனிதன் பறப்பது குறித்த ஒட்டுமொத்த மக்களின் அபிப்ராயம் அது தான்.

சாமுவேலை போல ஒரு சிலரை தவிர.

நினைவு தெரிந்த நாள் முதல் சிறுவன் சாமுவேலுக்கு மனிதர்களை சுமந்து செல்லும் பறக்கும் எந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் பிறந்த காலகட்டத்தில் (1834) சைக்கிள் கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. இதில் எங்கே பறப்பது?

இருந்தாலும், பறக்கும் எந்திரத்தில் ஏறி பறந்தே தீரவேண்டும் என்று லட்சியம் உள்ளுக்குள் கொழுந்திவிட்டெறிந்தபடியால் அது தொடர்பான புத்தகங்களை எல்லாம் ஒன்று விடாமல் படித்தான். தனது அறிவை வளர்த்துக்கொண்டான்.

சிறுவன் பெரியவனாகி தற்போது பேராசிரியர் சாமுவேலாகிவிட்டார். சாமுவேல் லாங்லே. அவரது கனவுகளை நனவாக்க பலர் பொருளுதவி செய்ய முன்வந்தனர்.

1898 – சாமுவேலின் பரிசோதனை முயற்சிகளுக்கு பலர் போட்டி போட்டு நிதி அளித்தனர். சுமார் $ 50,000/- நிதி அவருக்கு திரட்டி கொடுக்கப்பட்டது. ஐம்பாதியரம் டாலர் என்பது அந்தக் காலத்தில் பல நூறு கோடிகளுக்கு சமம்.

பல மாத உழைப்பு பரிசோதனை முடிவில் அவரது பறக்கும் இயந்திரம் தயாரானது.

அதை பார்க்க ஊரே ஏரிக்கரையில் திரண்டது.

‘GREAT AERODROME’ என்னும் அந்த இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் பறக்கப்போகிறது. மனிதன் எந்தக் காலத்திலும் பறவையை போல பறக்க முடியாது என்கிற கூற்று பொய்யாக்கப்படவிருக்கிறது.

கூட்டத்தினர் ஆர்பரிக்க, ‘GREAT AERODROME’ இயக்கப்பட்டது. ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டு அது சில அடிகள் கூட பறக்காமல் ஏரிக்குள் விழுந்தது.

ஆர்பரித்த கூட்டத்தினர் சாமுவேலை கடுமையாக விமர்சித்தபடி முனகிக்கொண்டே சென்றனர்.

மிஷினரிகளோ இது இறைவனுக்கு எதிரான முயற்சி எனவே தான் சாமுவேல் வெற்றி பெறவில்லை என அறிவித்தனர்.

சாமுவேலின் தோல்வி நாளிதழ்களில் தலைப்பு செய்தியானது.

“உண்மையில் ஒரு பறக்கும் இயந்திரத்தை பார்க்க வேண்டும் என்றால் மனித சமுதாயம் இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். சமூகத்துக்கு இப்போது அதைவிட பல முக்கிய வேலைகள் இருக்கிறது….” என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

அவமானத்தால் கூனிக் குறுகிப் போன சாமுவேல் பறக்கும் எந்திரம் கண்டுபிடிக்கும் தனது முயற்சிகளை கைவிட்டார்.

கனவுகள் தகர்ந்த நிலையில் இறந்தும்போனார்.

*******************************

யர்கல்வி படிப்பை பாதியில் விட்ட இரண்டு சகோதரர்களுக்கும் அதே கனவு இருந்தது. ஒரு பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்கவேண்டும்.

அதற்கான பல பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.

ஆனால், இவர்களது சோதனைகளுக்கு யாரும் நிதி உதவி செய்யவில்லை.

சொத்தை விற்று, உடமைகளை விற்று உபகரணங்கள் வாங்கி தங்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இவர்களுக்கும் தோல்வியே கிடைத்தது. இவர்கள் தயார் செய்த இயந்திரமும் விழுந்து நொறுங்கியது.

ஒரு முறை ஒரு முறை இரு முறை அல்ல. பல முறை.

ஆனால் ஒவ்வொருமுறையும் இவர்கள் ‘தோல்வி’ என்கிற குருவிடம் பாடம் கற்றுகொண்டார்கள். 1903 ஆண்டு ஒரு பனிபொழியும் மாதம் வரை.

ஆம்… வடகரோலினா மாகாணத்தில் கிட்டிஹா என்ற இடத்தில் 1903ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் தாங்கள் தங்கள் கைக்காசை கொண்டு தங்கள் வீட்டு மைதானத்தில் வடிவமைத்த சிறிய கிளைடர் விமானத்தில் பறந்து காட்டினார்கள். நம்பிக்கை ஜெயித்தது. முடியாது என்ற சொல் வெட்கித் தலைகுனிந்தது.

சாமுவேல் விழுந்தார்.

ரைட் சகோதரர்களும் விழுந்தனர்.

ஆனால், ரைட் சகோதர்கள் தான் எழுந்தனர்.

பறக்கவேண்டுமா?

வீழ்வதற்கு தயாராக இருங்கள்! எத்தனை முறை வேண்டுமானாலும்!!

Leave a Reply