வாழ்க்கையில் இனிமை

கோபம் ஒதுக்கி உறவை வளர்ப்போம்!
**********************************************
ஒரு சமயம், புத்தரின் பிரதம சீடனான ஆனந்தன் அவரிடம், “”குருவே! நான் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எப்படி?” என்று கேட்டான்.
அப்போது புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அவர், “”இந்த மரத்தில் ஏறி தழை பறித்து வா!” என்றார்.
ஆனந்தன் அந்த மரத்தின் மீதேறி, தனது கைகொள்ளும் அளவிற்கு தழைகளைப் பறித்து, புத்தரின் முன்னே வந்து நின்றான்.
“”ஆனந்தா! இப்போது உன் கையில் என்ன உள்ளது?” என்று கேட்டார் புத்தர்.
“”தழைகள் குருவே!”
“”மரத்தில்?”
“”நிறைய தழைகள் குருவே!”
“”ஆனந்தா! இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே! அது இதுதான். நான் உனக்கு போதித்தது, உன் கையில் உள்ள தழைகளின் அளவுதான். நான் உனக்கு போதிக்காதது, மரத்தில் உள்ள தழைகளின் அளவு. அவ்வளவையும் என்னால் போதிக்க இயலாது. ஆகவே, நீயேதான் உன் அனுபவத்தால் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்!” என்றார் புத்தர்.
சாதாரண இலை தழைகளைக் கொண்டும் போதிக்கக்கூடிய திறமை தன் குருவுக்கு மட்டுமே உண்டு என்பதை நினைத்து மிகப் பெருமிதம் அடைந்தான் ஆனந்தன்.
“கோபம்”
எப்படிக் கோபத்தை கையாளுகிறோம்….
புத்தர் ஒரு சிற்றூர் வழியாக சென்று கொண்டிருந்தார். அவரை வேலையற்ற சிலர் கேலி செய்தனர். அதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சென்றார்.
எந்தச் சலனமும் இல்லாத புத்தரைப் பார்த்துக் கேட்டார்கள். இவ்வளவு கேலி கிண்டல் செய்தும் உங்களுக்குக் கோபம் வரவில்லையா? என்று.
புத்தர் சொன்னார்,
‘பக்கத்து கிராமத்தில் மக்கள் பிரியமாக இனிப்புகளைக் கொடுத்தும் போற்றினார்கள். ஆனால் நானோ இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி இரண்டாண்டு ஆகிவிட்டது.
அதனால் அந்த இனிப்புகளை ஏற்கவில்லை. அப்படியானால் அவை யாருக்குச் சொந்தம்?
ஊர் மக்கள் ‘அந்த இனிப்புகள் அனைத்தும் கொடுக்க முன்வந்தவர்களுக்கே சொந்தம்’ என்றனர்.
‘இப்போது நீங்கள் கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தியதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
இப்பொழுது அவை யாருக்குச் சொந்தம்’ என்றார் புத்தர்.
‘எங்களுக்கே’ என்றனர் மக்கள்…
ஆம், நண்பர்களே.,
யார் கோபமூட்டினாலும் அதை மனதளவில் ஏற்றுக்கொண்டால் தான் கோபம் ஏற்படும். இல்லையெனில் கோபத்திற்கே இடமில்லை.
கோபம் ஓர் அடிப்படையான உணர்ச்சி.
கோபம் வருவது இயற்கை. அதைக் கையாளுகிறவிதத்தைப் பொறுத்தே வாழ்க்கையில் வளர்ச்சியா; வீழ்ச்சியா என்பது அடங்கிக் கிடக்கிறது.
சில நேரங்களில் சினம் காட்டாமல் இருந்தாலே நமக்கே சிரமங்கள் வந்து சேரும்.
சில நேரங்களில் சில மனிதர்களிடம் சிக்கனமாக சினப்படுவது சூழலைச் சீர்படுத்தும்.
அதற்காக எல்லா நேரங்களிலும் எல்லாரிடமும் எரிந்து விழுகிறவனுக்கு எப்போதும் நிம்மதி இல்லை.
எல்லா பக்கமும் அவர்களுக்கு எதிரிகளே நிறைந்திருப்பர்.
முன் கோபமே முதல் எதிரி.
நாம் எப்படிக் கோபத்தை கையாளுகிறோம் என்பதில் தான் வாழ்க்கையில் இனிமை இருக்கிறது.

Leave a Reply