வானம் வசமாகும்

சிறு வயது முதலே அந்த சிறுவனுக்கு பியானோ வாசிப்பதில் ஆர்வம் உண்டு. அவனுக்கு தெரிந்த ஒரே பியானோ ஆசிரியர் அவன் அம்மா தான். ஒரு நாள் அம்மாவிடம் கேட்டான், “அம்மா நாமெல்லாம் ஏழைகளா?”
“ஆமாம்… ஏழைகள் தான்!!!”

“ஒரு நாள் நிச்சயம் நான் உலகப் புகழ் பெறுவேன். அன்று என் பெயர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்” என்றான்.

தன் அப்பா செல்லும் சர்ச்சில் ரெகுலராக பியானோ வாசித்து வந்தான். கிட்டத்தட்ட 11 வயதில், ஒரு கைதேர்ந்த பியானோ இசைக்கலைஞனாகி விட்டான்.

வாலிப பருவத்தை அடைந்ததும், நிகழ்சிகளுக்கு சென்று வாசித்து பொருளீட்ட ஆரம்பித்தான். பார்களில் பியானோ வாசிக்க வந்த வாய்ப்பை கூட விடவில்லை. தனது நகரத்தில் உள்ள விடுதி (பார்) ஒன்றில் ஒருநாள் இவன் தந்து குழுவினருடன் பியானோ வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு வாடிக்கையாளர் வந்து, “எத்தனை நாள் தான் உன் பியானோ மியூசிக்கை கேட்டுகிட்டுருக்கிறது… காதே புளிச்சு போச்சு…… இன்னைக்கு நீ பாடனும்”

இளைஞன் திடுக்கிடுகிறான். என்னடா இது நம்ம பொழைப்புல மண்ணள்ளி போட்டுடுவான் .போலருக்கே… என்று நினைத்தபடி.. “சார்… எனக்கு பாடத் தெரியாது. பியானோ தான் வாசிக்கத் தெரியும். நீங்க சொல்ற பாட்டை பியானோவுல வேணும்னா வாசிச்சு காட்டுறேன்”

“அதெல்லாம் முடியாது.. நீ பாடித் தான் ஆகணும்…” என்று கஸ்டமர் முரண்டு பிடிக்க, இவர் முடியாது என்று கூற, விஷயம் விடுதி உரியமையாளர் வரை சென்றது.

அவர் மிகவும் வசதியான, அந்த விடுதிக்கு அடிக்கடி வரும் கஸ்டமர்.

“தம்பி, எனக்கு கஸ்டமர்ஸ் தான் முக்கியம். சார் கேட்கிற மாதிரி நீங்க பாடித் தான் ஆகணும். இல்லேன்னா நாளைல இருந்து நீங்க வேற இடம் பார்த்துக்கோ…” என்று கூறிவிட, அவமானத்தால் கூனி குறுகுகிறார் இவர். வரும் கொஞ்ச நஞ்ச வருமானத்திலும் மண் விழுந்துவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையுடன் இவர் வேறு வழியின்றி பாடுகிறார். அதுவரை அவர் நான்கு பேர் இருக்கும் சபையில் பாடியதில்லை. தனது கேரியரையே புரட்டிப் போடப்போகும் ஒரு பாடலை தான் பாடிக்கொண்டிருக்கிறோம் என்பது அவருக்கு தெரியாது. அஞ்சுக்கும் பத்துக்கும் இன்று பப்புகளில் பாடும் இவர், பின்னாளில் உலகப் புகழ் பெற்று கோடிகளில் புரளப்போகிறார் என்பது அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கும் தெரியாது.

பாடலை இவர் பாட ஆரம்பித்தது தான் தாமதம்… பாரில் நடைபெற்றுகொண்டிருந்த சின்னச் சின்ன உரையாடல்கல்கள் கூட நின்றுபோயின. தனது அபாரமான குரலில் அவர் பாடிய பாடலை மெய்மறந்து அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். பாடலை பாடிமுடித்ததும், அந்த பாரே கைதட்டல்களால் அதிர்ந்தது. ஆளாளுக்கு தங்கள் இருக்கையைவிட்டு எழுந்து வந்து கைகுலுக்கினர்.

இவரது புகழ் திக்கெட்டும் பரவ, வெகு சீக்கிரம் நாடே போற்றும் ஒரு பாடகராக உயர்ந்துவிட்டார். அவர் தான் பிரபல பாடகர் நேட் கிங் கோல்.

தனக்கு மிகச் சிறப்பான ஒரு குரல் வளம் இருந்தும், நன்றாக பாடும் திறமை இருந்தும் அதை பற்றி அறியாமல் அதை வெளிப்படுத்தாமல் அதுவரை இருந்துள்ளார் நேட் கிங்.

ஒரே மாதிரி மொக்கை போடாதே…. நீ இன்னைக்கு பாடியே ஆகணும்’ என்று சட்டையை பிடித்த அந்த கஸ்டமரும், ‘பாடுறதா இருந்தா இங்கே இரு. இல்லேன்னா உனக்கு இனிமே இங்கே வேலை இல்லை’ என்று கழுத்தை பிடித்த அந்த முதலாளியும் இல்லையென்றால் நேட் கிங் என்கிற பாடகர் உலகிற்கு கிடைத்திருக்கமாட்டார். அவர்கள் அச்சுறுத்தியதாலேயே அவர் வேறு வழியின்றி பாடினார். பின்னாளில் அமெரிக்காவின் மிகப் பிரபலமான பாடகராக உயர்ந்தார். இல்லையெனில், தனது எஞ்சிய காலம் முழுக்க ஏதேனும் பப்புகளிலும் பார்களிலும் பியானோ வாசித்தே காலத்தை கழித்திருப்பார்.

நேட் கிங் மட்டுமல்ல, தங்கள் திறமை தங்களுக்கே தெரியாமல், இப்படி ஏதோ ஓர் சந்தர்ப்பத்தால் பலர் முன்னிலையில் அவமானபடுத்தப்பட்டு அதன் மூலம் வெடித்துக் கிளம்பிய பல சாதனையாளர்கள் சரித்திரத்தில் உண்டு.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

விதைக்குள் அடைப்பட்ட ஆலமரம் போல, நம் அனைவருக்குள்ளும் மிகச் சிறந்த திறமையும் ஆற்றலும் மறைந்துள்ளது. அதை உணரும் வரை நாம் குண்டு சட்டி குதிரை தான். அதை வெளியேகொண்டு வர, இது போன்ற கசப்பான சந்தர்ப்பங்கள், அவமானங்கள், வலிகள் உதவுகின்றன. சுடர்விளக்கானாலும் தூண்டுகோல் தேவையல்லவா? ஒரு வகையில் இவை BLESSING IN DISGUISE. இத்தகு அனுபவங்கள் எவருக்கேனும் ஏற்பட்டால் நிலைகுலையாது இருகரம் நீட்டி வரவேற்போம்.

உங்கள் திறமை மிகச் சிறந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் நினைப்பதைவிட அது நிச்சயம் நன்றாக இருக்கலாம் அல்லவா? நம்மிடமுள்ள பல திறமைகள் நாம் மனது வைத்தால் விடாமுயற்சியுடன் மேற்கொண்டு வளர்த்துக் கொள்ள கூடியவைகளே.

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா? துக்கமில்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

Leave a Reply