ரொட்டி

​தனது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள விலைமதிப்பற்ற வைரங்கள் மீதும் வைடூரியங்கள் மீதும் அந்த வணிகனுக்கு எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அவன் தனது குருவாக கொண்டாடும் ஒரு ஞானி அவனைக் காண அவன் இல்லத்திற்கு ஒரு முறை வந்தார்.

அவரிடம் “என்ன சேர்த்து வைத்துள்ளாய் இது வரை?” என்று கேட்க, “யாராலும் விலை மதிக்க முடியாதவைகளை நான் சேர்த்துவைத்துள்ளேன்” என்றான்.

“என்ன அது?”

“என்னுடன் வாருங்கள்” என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்று அங்கு பாதுகாப்பு பெட்டகத்தில் அவன் சேர்த்து வைத்திருந்த வைர, வைடூரியங்களை காண்பித்தான்.

“இவை வெறும் கற்கள் தானே?” என்றார் குரு.

கற்கள் தான். ஆனால் இவற்றுக்கு கிடைக்கும் மதிப்பு வேறு எதற்கும் கிடைக்காது” என்றான்.

“சரி… இதிலிருந்து நீ என்ன லாபம் சம்பாதிக்கிறாய்?”

“லாபமா? நீங்க வேற குருஜி. இதை பார்த்துக்க தான் நிறைய முயற்சி எடுக்கவேண்டியிருக்கிறது. நான் வெளியூர் போகும் சமயங்களில் இவற்றை உள்ளூர் வங்கியில் பாதுகாப்பது பெட்டகத்தில் வைத்துவிட்டு போகிறேன். இங்கே கூட இவற்றை பாதுகாக்க ஆட்களை நியமித்திருக்கிறேன்”

“இவற்றை விட மதிப்பு மிக்க கல்லை நான் உனக்கு காட்டிவிட்டால்? அதுவும் இதே ஊரில்?”

அவனுக்கு அந்த ஊரில் யாரும் இது போல கற்களை வைத்திருக்கவில்லை என்பது தெரியும். “என்னது இவற்றை விட மதிப்பு கல்லா? அதுவும் இதே ஊரிலா? வாய்ப்பேயில்லை” என்றான்.

என்னுடன் வா காட்டுகிறேன்” என்று கூறி அவனை அதே ஊரில் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். தனது குருவுடன் கூடுதல் நேரம் செலவழிக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி அவன் சந்தோஷப்பட்டான். இருவரும் கொஞ்ச தூரம் நடந்து சென்றார்கள்.

ஊருக்கு எல்லையில், உள்ள ஏழை மூதாட்டியின் குடிசை முன் நின்றனர் இருவரும்.

அங்கு அந்த மூதாட்டி ஒரு யந்திரக் கல்லை வைத்து தானியங்களை அரைத்து மாவாக்கி கொண்டிருந்தாள். அவளிடம் ரொட்டி வாங்கி உண்ண பரம ஏழைகள் நான்கைந்து பேர் வாசலில் காத்திருந்தார்கள்.

“இதோ பார் இந்த கல் பல ஏழைகளுக்கு ரொட்டி மாவை அரைக்க பயன்படுகிறது. இவளுக்கும் அது உணவிடுகிறது. நீ வைத்திருக்கும் கற்களை விட இது தானே மதிப்பு மிக்கது? உனது கற்களால் யாருக்கு என்ன பயன்?”

There is a big difference between being expensive & being useful.

“நீ மதிப்புமிக்கதாக கருதும் அனைத்தும் விலை அதிகம் என்று நீ நம்புபவைகளை தான். அந்த கற்களுக்கு வேறு மதிப்பு எதுவும் இல்லை. இந்த யந்திரக் கல் மக்களின் பசியை தீர்க்கிறது. உனது வைரக் கற்களோ உனக்கு தேவையற்ற செலவுகளை தான் ஏற்படுத்துகிறது. இப்போது சொல் எது மதிப்பு மிக்கது?”

செல்வந்தன் வெட்கி தலைகுனிந்தான்.

உண்மை தான். விலை அதிகம் உள்ளவை எல்லாம் மதிப்பு மிக்கவை அல்ல. மற்றவர்களுக்கு எது பயன்படுகிறதோ அதுவே மதிப்பு மிக்கது. எந்த ஒரு விஷயத்தின் மதிப்பையும் அதன் பயன்பாட்டைக் கொண்டு தான் மதிப்பிடவேண்டுமே தவிர அதன் விலையை மனதில் கொண்டு அல்ல.

இறைவன் உங்கள் மதிப்பை தீர்மானிப்பதும் இப்படித்தான். உங்கள் அந்தஸ்தை வைத்தோ பணத்தை வைத்தோ அல்ல.

சிலர், சிலர் அல்ல பலர், குடும்பத்திற்காக சம்பாதித்து வீடு / ஃபிளாட் வாங்கி செட்டிலாவது தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது வாழ்க்கையே அல்ல.

உங்களால் இந்த சமூகத்திற்கு என்ன பயன்? நாலு பேருக்கு உங்களால் உங்கள் வாழ்க்கையால் நன்மை விளைகிறதா? உங்கள் நேரத்தை ஏதேனும் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தி இருக்கிறீர்களா? ஒரு ஏழையின் பசியையாவது தீர்க்கிறீர்களா? ஒரு ஏழை குழந்தைக்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாடாவது சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? துன்பத்தில் இருக்கும் யார் கண்ணீரையேனும் துடைத்திருக்கிறீர்களா?

இதுவரை இல்லையென்றாலும் இனியாவது அதை செய்யுங்கள். அடுத்த நொடி உங்கள் வாழ்க்கை மதிப்புமிக்கதாக மாறிவிடும். உங்களையும் சேர்த்து.

Leave a Reply