மூச்சுக் காற்று

ந்த ஊரில் உள்ள மைதானத்தில் நாய் கண்காட்சி மிகவும் பிரபலம். மிகப் பெரிய செல்வந்தர்கள் அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் அந்த நாய் கண்காட்சிக்கு தாங்கள் வளர்க்கும் பல உயர் ரக நாய்களை அழைத்து வருவார்கள்.

அந்த நாய்களை பார்க்கவே பலர் வருவார்கள். ஒவ்வொன்றும் அப்படி இருக்கும்.

இந்த முறையும் கண்காட்சி தடபுடலாக தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவரவர் தாங்கள் கொண்டு வந்த நாயை வைத்தே தங்கள் அந்தஸ்த்தை சொல்லாமல் சொல்லினர். உள்ளூர் மக்களும் திரண்டு இந்த கண்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்.

நம் இனம் எல்லாம் ஒன்றாக கூடியிருக்கிறதே என்ன என்று பார்ப்போம் என்று அந்த பக்கம் சென்ற தெருநாய் ஒன்று கண்காட்சி அரங்கிற்கு வெளியே வேலிக்கு அருகே நின்று பார்த்தபடி இருந்தது.

ஒவ்வொரு நாயையையுயம் பார்த்து பெருமூச்சு விட்டது. கண்காட்சி இடைவேளையில் நாய்களுக்கு எலும்பு மட்டனுடன் கூடிய அசைவ உணவு வழங்கப்பட்டது. சில நாய்களுக்கு உயர் ரக வெளிநாட்டு பிஸ்கெட்டுகள் தரப்பட்டன. சில நாய்களுக்கு பால்

தெருநாய் பெருமூச்சு விட்டது.

“நான் சாப்பிட்டே பல நாள் ஆகுது. இங்கே எல்லாருக்கு விருந்தே நடக்குது… ஹூம்… நம்ம தலையெழுத்து….”

பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது.

அப்போது கண்காட்சிக்கு வந்த நாய் ஒன்று அந்த மைதானத்தை மோப்பம் பிடித்தடி சுற்றி வந்துகொண்டிருந்தது.

அட நம்ம இனம் போலருக்கே…” என்று சொறி பிடித்த தனது முதுகை இடது கால்களை தூக்கி தேய்த்தபடி சிந்தித்தது.

“ஹலோ பிரதர் நல்ல கவனிப்பு போலருக்கே….”

“ஆமாம்… எனக்கு பிடிச்சது எல்லாம் கிடைக்கும். எது வேணும்னாலும் கொடுப்பாங்க. நான் தும்மினா கூட டாக்டர் கிட்டே செக்அப் கூட்டிகிட்டு போவாங்க”

“ஹூம்…பரவாயில்லையே… இங்கே நான் சாப்பிட்டே பல நாள் ஆகுது…”

“உன்னை பார்த்தாலே தெரியுது… எலும்பும் தோலுமா உயிரை கைல வெச்சிருக்கே”

“அது சரி நீ எப்படி இங்கே இவங்க கிட்டே வந்தே?”

“குட்டியா இருக்கும்போது நானும் உன்னை மாதிரி இந்த கண்காட்சியை வேடிக்கை பார்க்க வந்தேன். இங்கே வந்த ஒரு பணக்கார வீட்டுக் குழந்தைக்கு என்னை பிடிச்சிப்போனதால் என்னை பட்டணம் கூட்டிகிட்டு போய் அவங்க வீட்டில வளர்த்தாங்க. நீயும் வேணும்னா வர்றியா? எனக்கு கிடைக்குற அத்தனையும் உனக்கும் கிடைக்கும்”

நாய் பொழைப்பு என்று கூறுவதைப் போல ஒரு எலும்புத் துண்டுக்கு ஓராயிரம் நாய்களோடு ஒவ்வொரு நாளும் போராட்டம். பேசாமல் இந்த நாயோடு போய்விடலாமா…. யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்டையை பார்த்தது.

“அது என்ன உன் கழுத்தில் ஏதோ லெதர்ல கட்டியிருக்குது?”

“ஓ… அதுவா அது கழுத்துப் பட்டை. நான் வேறு எங்கேயாவது போய்விடக்கூடாது என்பதற்காக நான் அங்கு சென்றவுடன் ஒரு சங்கிலியை இதில் கட்டி என்னை சுவற்றோடு பிணைத்துவிடுவார்கள். எனக்கு தேவையானது எல்லாம் நான் இருக்கும் இடத்திற்க்கே எல்லாம் வந்துவிடும்”

தெருநாய்க்கு அப்போது தான் புரிந்தது பட்டணத்து நாய் தனது சொகுசுக்கு கொடுத்த விலை என்ன என்று.

“இல்லை நண்பா நான் உன்னுடன் வரமுடியாது. பட்டினி கிடந்தாலும் நான் எதற்கும் அச்சப்படாமல் கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்கிறேன். என் விருப்பப்படி நான் எங்கு வேண்டுமானாலும் வரமுடியும் போக முடியும். சுதந்திரத்தின் அருமை உன்னைப் போன்றவர்களுக்கு புரியாது….” என்று கூறிவிட்டு நடையை கட்டியது வேடிக்கை பார்க்க வந்த நாய்.

மைதானத்தின் வேலிக்கு உள்ளே இருந்த நாய் சுதந்திரத்தின் பொருள் தெரியாமல் விழித்தது.

நீதி : எலிப் பொறிக்குள் இருக்கும் வடைக்கு ஆசைப்பட்டு தான் எலி உள்ளே சென்று மாட்டிக்கொள்கிறது. ஆனால் மாட்டிக்கொண்ட பின்னர் எந்த வடைக்கு ஆசைப்பட்டு உள்ளே சென்று மாட்டிக்கொண்டதே அதை ஏறெடுத்தும் பார்க்காது. சுதந்திரமே மூச்சுக் காற்று. சுதந்திரமே ஈடு இணையற்ற செல்வம்.

Leave a Reply