முஸலகிஸலயம்

​அவர் ஒரு மாபெரும் பண்டிதர். வேத சாஸ்திரங்களை நன்கு கற்றுணர்ந்தவர். அவரிடம் பல மாணவர்கள் பயின்று வந்தனர். பண்டிதரின் வீட்டில் ஒரு சமையற்காரர் இருந்தார். நளபாகத்தில் வல்லவர். ஆனால் படிப்பு வாசனை அறியாதவர். சமையலறை வாசம் ஒன்றே அவர் அறிந்தது.

ஒரு நாள் பண்டிதரின் மாணவர்கள் ஏதோ ஒரு நூலை படித்துக் கொண்டு அது பற்றி மிக சுவாரஸ்யமான விவாதம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அந்த பக்கம் போன சமையற்காரருக்கு அப்படி என்ன நூலை அவர்கள் படிக்கிறார்கள் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.


“நீங்கள் என்ன நூலை படிக்கிறீர்கள் அது எதைப் பற்றியது? இத்தனை ஆர்வத்தோடு விவாதிக்கிறீர்களே?” என்று கேட்டார்.

சமையற்கரரான இவர் நாம் விவாதிக்கும் நூலைப் பற்றி தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறார் என்று நினைத்து, “அது ஒன்றுமில்லை, ‘முஸலகிஸலயம்’ என்னும் நூல்!” என்றனர் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

மாணவர்கள் தம்மை கேலி செய்கின்றனர் என்பதை உணராத இவர், “ஓ… அப்படியா? நல்லது நல்லது” என்று கூறிக்கொண்டே தன் பணிகளை கவனிக்க போய்விட்டார். அவர் அந்த இடத்தைவிட்டு அகன்ற பிறகு மாணவர்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.

‘முஸலகிஸலயம்’ என்றால் உலக்கை கொழுந்து என்று பெயர். படிப்பறிவில்லாத ஜடம், ஒன்றுக்கும் லாயக்கற்றவன் என்றும் பொருள் கொள்ளலாம். அந்தக் காலத்தில் மந்தமான மாணவர்களை திட்ட சில வாத்தியார்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதுண்டு. உலகை எங்காவது துளிர்க்குமா? அதுபோல இவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் பயனில்லை என்று பொருள்.

அன்று மதியம் பண்டிதர் உணவருந்த வந்தார். சமையற்காரர் ஏதோ சொல்ல நினைத்து சொல்லாமல் இருப்பதை பண்டிதர் புரிந்துகொள்கிறார்.

“என்னப்பா… ஏதோ சொல்ல வருகிறாய்… ஆனால் தயங்குகிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சமையற்காரர், “ஒண்ணுமில்லை சுவாமி… இன்று நம் மாணவர்கள் ஏதோ ஒரு நூலைப் பற்றி சுவாரஸ்யமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அது என்ன நூல் என்று கேட்டேன். ஏதோ ”முஸலகிஸலயம்’ என்று சொன்னார்கள். அது என்ன நூல்? யார் எழுதியது?” என்று அப்பாவித்தனமாக கேட்டார்.

பண்டிதர் நடந்த அனைத்தையும் உணர்ந்துகொள்கிறார். தன் மாணவர்கள் சமையற்காரரை அவரே அறியாமல் சாமர்த்தியமாக கேலி செய்திருப்பதை எண்ணி மிகவும் வருந்தினார்.

அவரிடம் “என் மாணவர்கள் உன் அறியாமையை ஏளனம் செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறிய ‘முஸலகிஸலயம்’ என்றால் உலக்கை துளிர்க்குமா? இதை நீ தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று அர்த்தம்.

சமையற்காரர் கலங்கி நின்றார்.

‘உருவு கண்டு எள்ளாமை’ வேண்டும் என்பதை தன் மாணவர்களுக்கு உணர்த்த பண்டிதர் விரும்பினார்.

சமையற்காரரை நோக்கி, “நான் சொல்வதை மறுப்பின்றி கேட்பாயா? அவர்களுக்கு நீ சரியான பாடம் புகட்டலாம்!” என்றார்.

“சுவாமி.. என்ன இது இப்படி ஒரு கேள்வி. தங்கள் உத்தரவு எதுவாக இருந்தாலும் நிறைவேற்ற வேண்டியது இந்த அடிமையின் பொறுப்பு. கூறுங்கள் சுவாமி…” என்றார் சமையற்காரர் அடக்கத்துடன்.

“இன்று முதல் நீ என்னிடம் பாடம் கற்க வேண்டும். உன் பணிகளை எல்லாம் முடித்த பிறகு தினமும் உறங்கச் செல்வதற்கு முன்னர், அரை மணிநேரம் என்னிடம் பாடம் கற்கவேண்டும். இது யாருக்கும் தெரியவேண்டாம்!” என்றார்.

சந்தோஷம் சுவாமி… ஆனால் எனக்கு ஒரு வார்த்தை கூட எழுதப் படிக்க தெரியாதே….”

“அதனால் என்ன? உனக்கு சிறு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது போல ஆரம்பத்திலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார்.

அது முதல் சமையற்காரர் தினமும் தனது குருவிடம் பாடம் படிக்க தொடங்கினார். குருவும் தினமும் பாடம் நடத்திவிட்டு, வீட்டுப்பாடம் கொடுப்பார். சமையற்கார சீடரும் அதை செவ்வனே செய்து வருவார். ஆண்டுகள் உருண்டோடின. குருவிடம் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் செம்மையாக கற்றார் மாணவர்.

களிமண்ணைக் கூட பிசைந்து தங்கமாக மாற்றும் சக்தி மெய்ஞானிகளுக்கு உண்டல்லவா? சமையற்காரர் காலப்போக்கில் சிறந்த பண்டிதரானார். தனது 32 ஆம் வயதில் பல பாடல்களை இயற்றும் புலமையும் பெற்றார்.

ஒரு நாள் தனது புதிய (சமையற்கார) சீடரை அழைத்து, “நீ ஒரு காவியம் இயற்றவேண்டும். ஆனால் பெயரை மட்டும் நான் தான் சூட்டுவேன்!” என்றார் பண்டிதர்.

“என் பாக்கியம் சுவாமி!”

“பெயர் என்ன தெரியுமா? ‘முஸலகிஸலயம்’!” என்றார் பண்டிதர்.

குரு கூறியதன் பொருளை சீடர் உணர்ந்துகொண்டார்.

அடுத்து சில நாட்களில் காவியம் எழுதிமுடிக்கப்பட்டது. மிகச் சிறந்த பொருட்செறிவிலும், வார்த்தை நயத்திலும் எழுதப்பட்ட அந்த புதிய நூலை பண்டிதர் பார்வையிட்டு தனது மாணவர்கள் முன்னிலையில் அதை அந்த சமையற்காரரை கொண்டு அரங்கேற்றவும் செய்தார். பின்னர் அந்த நூலை அவர்களுக்கு பரிசளிக்கவும் செய்தார். மாணவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். தமது அவமதிப்பை குருநாதர் உணர்ந்துகொண்டு, ஒரு சமையற்காரரை இந்தளவு ஒரு பெரிய மேதையாக்கியிருக்கிறார் என்பதை அறிந்து இருவர் கால்களிலும் வீழ்ந்து தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டனர்.

இது ஏதோ கற்பனை கதையல்ல. உண்மையில் நடந்தது. அந்த குரு யார் தெரியுமா? நாலாயிர திவ்விய பிரபந்தத்துக்கு மிகச் சிறந்த உரையை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை. ‘வியாக்யான சக்கரவர்த்தி’ என்று இவருக்கு ஒரு அடைமொழி கூட உண்டு. தஞ்சையில் உள்ள திருவெள்ளியங்குடி தான் இவரது ஊர். ஸ்ரீரங்கத்தில் இவர் (13 ஆம் நூற்றாண்டு மத்தியில்) வசித்தபோது தான் மேற்படி சம்பவம் நடைபெற்றது. 1262 ஆம் ஆண்டு பெரியவாச்சான் பிள்ளை பரமபதம் அடைந்தார்.

இவரிடம் கல்வி கற்று மேதையான அந்த சமையற்காரர் தான் ‘வாதிகேசரி’ என்று அழைக்கப்பட்ட அழகிய மணவாள ஜீயர். நம்மாழ்வாரின் திருவாய்மொழி உள்ளிட்ட பல நூல்களுக்கு இவர் உரை எழுதினார்.

ஆக… உலகின் முதல் திறந்தவெளிப் பலக்கலைக்கழக மாணவர் நம் வாதிகேசரி தான்.

ஆச்சாரியனின் அருள் இருந்தால் பட்ட மரம் துளிர்ப்பது மட்டுமல்ல… அது கவியும் பாடும் என்பது இதன் மூலம் புலனாகிறதல்லவா?

நம்மைவிட தாழ்ந்தவர்கள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் “இதை தெரிஞ்சிகிட்டு நீயென்ன செய்யப்போறே?” என்று எந்த சூழ்நிலையிலும் கேலி செய்யக்கூடாது. அவர்களுக்கு வினயத்துடன் பதிலளிக்கவேண்டும்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (குறள் 667)

வேலைக்காரர்களை விடுங்கள், சிலர் தங்களுக்கு கல்வியறிவு புகட்டிய பெற்றோர்களிடமே இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது தான் வெட்கப்படவேண்டிய விஷயம்.

Leave a Reply