முட்டாளின் அடையாளம்

தென்கச்சி கோ.சாமிநாதன் அவர்களை அனைவருக்கும் தெரிந்திருக்கும். “இன்று ஒரு தகவல்” என்று வானொலியில் தினந்தோறும் அற்புதமான கருத்துக்களை கதைகளை எளிமையாக பாமரருக்கும் புரியும் வண்ணம் சொல்லி வந்தவர்.

சுயமுன்னேற்றம் மற்றும் ஆளுமை குறித்து அவர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார். தினமணியில் அவர் அப்படி எழுதிய நம்மைக் கவர்ந்த கட்டுரை ஒன்றை இங்கே தருகிறோம்.

“சார் இந்த உலகத்திலே அறிவாளிகளைவிட முட்டாள்கள்கிட்டதான் அதிக எச்சரிக்கையா நடந்துக்க வேண்டியிருக்கு” என்றார் அனுபவப்பட்ட ஒருத்தர்.

“அப்படிங்களா?” என்றேன்.

“ஆமாம்” என்றார்.

அவர் சொன்னார்:

“ஓர் அறிவாளி கிழிச்ச துணியை ஒரு முட்டாள் கூட சேர்த்து தச்சிடமுடியும். ஆனா, ஒரு முட்டாள் கிழிச்ச துணியை முப்பது அறிவாளிகள் சேர்ந்தாக்கூடத் தைக்க முடியாது.”

உண்மைதானே… இவன் கன்னா பின்னாவென்று கிழித்து விடுவான் அல்லவா!

எல்லாம் சரி… ஒரு முட்டாளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?

 

முட்டாளே நம் முன் வந்து நின்று, நான் ஒரு முட்டாள் என்று சொல்லிக்கொண்டிருக்க மாட்டான். நாமாகத்தான் அவன் எப்படிப்பட்டவன் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்கு அவனுடைய சில நடவடிக்கைகள் நமக்கு உதவியாக அமையும்.

ஆறு வகையான அறிகுறிகளை வைத்து ஒரு முட்டாளை நாம் அடையாளம் காண முடியும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அது என்ன ஆறு அடையாளம்?

1. காரணமில்லாத கோபம்

2. பயனில்லாத பேச்சு

3. முன்னேற்றமில்லாத மாறுதல்

4. பொருத்தமில்லாததைப் பற்றி ஆராய்தல்

5. அன்னியனை நம்புதல்

6. பகைவரை நண்பராகக் கருதுதல்.

இவைதானாம் அவர்களுக்கு அடையாளம்.

காரணமில்லாத கோபம் – இவர்களை முதலில் பார்ப்போம்…

தொலைபேசி சரியில்லை என்றால் அதைத் தூக்கி எரிகிறவர்கள் அல்லது பொத்தென வைக்கின்றவர்கள்…

பேனாவில் மை தீர்ந்து போனால் அதை வேகமாக மேஜைமீது குத்துகிறவர்கள்…

யார் மீதோ இருக்கிற எரிச்சலில் வீட்டுக் கதவைப் படாரென்று சாத்துகிறவர்கள்…

இவர்களெல்லாம் அர்த்தமில்லாமல் கோபப்படுகிறவர்கள்… முதல் வகையை சேர்த்தவர்கள்.

செருப்பு நம்மை கடித்தது என்பதற்காக பதிலுக்கு அதைப் போய் திருப்பிக் கடித்துக் கொண்டிருக்கலாமா? முதல் வகையினர் சிந்திக்க வேண்டும்.

சரி… இதை விடுங்கள். இன்னொரு வகை ஆசாமிகள் எப்படித் தெரியுமா?

பயனில்லாத பேச்சுப் பேசுகிறவர்கள்.

“ஒற்றுமையாக வாழவேண்டும் என்கிற தலைப்பில் ஒரு பேச்சாளர் ஒரு மணி நேரம் பேசினார் சார்!” என்றார் ஒருத்தர்.

“அப்படியா” என்று ஆச்சர்யப்பட்டேன்.

“சரி… அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா?” என்றார்.

“என்ன ஆச்சு?” என்றேன்.

“கடைசியில கூட்டம் கலாட்டாவுல முடிஞ்சுது” என்றார்.

அப்படியானால் அவர் பேசிய பேச்சுக்கு என்ன பயன்?

சில பேர் எப்படித் தெரியுமா?

நேரம் காலம் தெரியாமல் நம் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள். பயனில்லாத பேச்சு!

மூன்றாவது வகை எப்படியென்றால்… முன்னேற்றமில்லாத மாறுதல்.

“நம்ம ஆளு ஒருத்தன் திருடிவிட்டு ஜெயில்ல இருந்தான் அல்லவா… அவன் இப்போ மாறிட்டான் சார்” என்றார் ஒருத்தர்.

“திருந்திட்டானா?” என்று கேட்டேன்.

“இல்லை சார். முன்னே அவன் கோயம்புத்தூர் ஜெயில்ல இருந்தான். இப்ப அவன் வேலூர் ஜெயிலுக்கு மாறிட்டான்” என்று அதற்கு விளக்கம் கொடுத்தார்.

ஒரு மனிதன் மாறிவிட்டான் என்று சொன்னால் அவன் முன்பு இருந்த நிலையிலிருந்து மாறி ஒரு படியாவது முன்னேறியிருக்கிறான் என்று இருக்க வேண்டும். அதுதான் பெருமை.

நாலாவது வகை.

பொருத்தமில்லத்தைப் பற்றி ஆராய்தல்.

“என்னடா தரையில் உத்து பாத்துக்கிட்டுருக்கே?” என்று கேட்டால்…”ஒண்ணுமில்லே இந்த எறும்பு எங்கே போயிட்டுஇருக்குன்னு பார்த்துக்கிட்டிருக்கேன்” என்பான். இது பொருத்தமில்லாத ஆராய்ச்சி.

ஐந்தாவது அடையாளம்.

அன்னியனை நம்புதல்.

இது மாதிரி ஆசாமிகளை தொடர்வண்டியில் பார்க்கலாம்.

“சார் இந்தப் பெட்டியில பத்தாயிரம் ருபாய் வச்சிருக்கேன். கொஞ்ச நேரம் இதைப் பத்திரமா பாத்துக்குங்க. நான் போய் டிக்கெட் வாங்கிகிட்டு வந்திடறேன்” என்பான். போய்விட்டு வந்து பார்த்தல் அவன் அந்த இடத்தில இருக்க மாட்டான். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை நம்புவது முட்டாள்தனம்.

ஆறாவது…

பகைவரை நண்பராக கருதுவது.

விரோதிகளிடம் விசுவாசமாக இருப்பது என்றைக்கும் ஆபத்துதான்.

ஆக… முட்டாள்களை இந்த ஆறு வகையான செயல்பாடுகள் இருக்கக் கூடாது. இருந்தால் அவற்றை உடனடியாக விலக்கிவிட வேண்டும்.

நம் ஆள் ஒருத்தன்.

கையிலே பயணப் பெட்டி.

அதற்குள்ளே பணம். பயணம் செய்துக் கொண்டிருந்தான். தூங்கி எழுந்து பார்த்தால் பெட்டியைக் காணவில்லை. யாரோ தூக்கிக் கொண்டுபோய்விட்டார்கள்.

இவன் பறிகொடுத்தவன்…பதற வேண்டுமல்லவா?

பதறவில்லை. நிதானமாக இருந்தான்.

“பணப்பெட்டி போய்விட்டதே என்கிற கவலை இல்லாயா உங்களுக்கு?” என்று கேட்டார் பக்கத்தில் இருந்தவர்.

இவன் சொன்னான்…….

“பெட்டி போனா என்ன சார்… அதைப் பத்திரமா பூட்டித்தான் வச்சிருக்கேன்… இதோ சாவி என்கிட்டதான் இருக்கு !”

  • தென்கச்சி கோ.சாமிநாதன்

Leave a Reply