மார்கெட்டிங் ட்ரெயினிங்

 ஒரு பிரபல ஏற்றுமதி நிறுவனம். அதன் மார்கெட்டிங் பிரிவுக்கு தலைமை அதிகாரியாக ஒரு தகுந்த நபரை தேர்வு செய்யவேண்டியிருந்தது. எந்த ஒரு நிறுவனத்திற்கும் மார்கெட்டிங் பிரிவு என்பது முதுகெலும்பு போல. வருவாய் ஆதாரங்களை கொண்டு வருவது அதன் பணி என்பதால் தகுந்த ஒருவரை எவ்வளவு சம்பளம் கொடுத்தேனும் அந்த பிரிவில் பணியில் அமர்த்த அதன் நிறுவனர் முடிவு செய்தார்.

நல்ல நிறுவனம், நல்ல சம்பளம் என்பதால் பலர் பணிக்கு விண்ணப்பித்தனர். தகுந்த ஒருவரை  தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் ஆர்டர் எடுக்கவே மிகவும் சவாலாக விளங்கும் சில கிளையண்ட்டுகளின் விபரத்தை விண்ணப்பித்தவர்களிடம் கொடுத்து “இவர்கள் அனைவரிடமும் ஒரு மாத காலத்திற்குள் ஆர்டர் எடுக்கவேண்டும். உங்களால் முடியுமா?” என்று கேட்க, பலர் பின் வாங்கிவிட்டனர்.

ஒரே ஒரு இளைஞன் மட்டும் “என்னால் முடியும் சார்!” என்றான் உறுதியுடன்.

“இவர்கள் அனைவரிடமும் ஒரு மாத காலத்திற்குள் ஆர்டர் எடுக்க உன்னால் முடியுமா?” நிறுவனர் சந்தேகத்துடன் கேட்டார்.

“முடியும்!” என்றான் அதே உறுதியுடன்.

அவனுக்கு ஆஃபர் லெட்டர் தரப்பட்டது.

பணிக்கு சேர்ந்த அவன், சேர்ந்த ஒரு மாதத்திற்குள் நிறுவனர் சொன்ன அனைத்து கிளையண்ட்டுகளிடமும்  ஆர்டர் எடுத்துவிட்டான். ஒரே  ஒருவரைத் தவிர.

அடுத்த மாதம் அவன் எந்த ஆர்டரும் எடுக்கவில்லை. காரணம் புதிதாக எந்த கஸ்டமரையும் சந்திக்க அவன் ஃபீல்டுக்கு செல்லவில்லை. வழிக்கு வர மறுக்கும் அந்த ஒரு வாடிக்கையாளரையே தினமும் சென்று சந்தித்து வந்தான்.

தினமும் காலை அந்த வாடிக்கையாளர் தனது அலுவலகத்தை திறந்தவுடன் அவரை சந்திக்க சென்றுவிடுவான். அவரும் கீறல் விழுந்த ரெக்கார்ட் போல ஒரே பதிலைத் தான் சொல்லி வந்தார். “இல்லை. என்னால் ஆர்டர் தர முடியாது!” என்பதே அது.

அந்த வணிகருக்கு தெரியும் தான் எந்த காலத்திலும் இவனுக்கு ஆர்டர் தரப்போவதில்லை என்று. ஆனால் இந்த இளைஞன் அதை புரிந்துகொண்டது போலவே தெரியவில்லை. அவர் மறுத்துப் பேசும்போதெல்லாம் அதை காதில்வாங்கிக்கொள்ளாதது போல இவன் இருப்பான்.

அந்த மாதம் முழுக்க இப்படியே  சென்றது. கடைசி நாள் வந்தது.

நிறுவனத்தின் தலைவரிடம் அந்த மாத பணிக்கான ரிப்போர்ட்டை சப்மிட் செய்ய சென்றான்.

இந்த மாதம் முழுதும் அவன் புதிதாக யாரையும் சந்திக்காமல், ஒரே ஒரு வழிக்கு வராத வாடிக்கையாளரையே சந்திக்க நேரத்தை செலவழித்திருப்பதை பார்க்கிறார்.

“என்னப்பா…. உன்னை என்னவோ புத்திசாலின்னு நினைச்சேன். இப்படி ஒரு மாசத்தை வேஸ்ட் பண்ணியிருக்கியே?”

இளைஞன்… மெலிதாக புன்னகைத்தவாறு சொன்னான்…. “என்னது டயம் வேஸ்ட் பண்ணியிருக்கேனா? கிடையவே கிடையாது. இந்த ஒரு மாசமும் நான் தினசரி அவர் கிட்டே ட்ரெயினிங் போனேன். அவரு தினமும் எனக்கு ஃப்ரீயா பாடம் சொல்லிக் கொடுத்தாரு.”

“என்னது ட்ரெயினிங்கா?” நிறுவனர் புரியாதது போல பார்த்தார்.

இளைஞன் தொடர்ந்தான்… “அவரை தினசரி சந்திச்சது மூலம் ஆர்டர் கொடுக்க விருப்பம் இல்லாத ஒரு கிளையண்ட் நம்மகிட்டே என்னென்ன சாக்கு சொல்வாங்கன்னு இந்த ஒரு மாசமும் நான் கத்துகிட்டேன். அது இனி நான் போற இடத்துக்கு யூஸ்புல்லா இருக்கும்!” என்றான்.

இவன் சாதுரியமான பதிலால் வியந்த நிறுவனர், “இப்போதே உன்னை நம் நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்கிறேன். முதலில் ஒப்புக்கொண்டதைவிட கூடுதல் சம்பளத்துடன்!!” என்றார்.

என்ன நண்பர்களே…. மேற்கூறிய அனுபவங்கள், மார்கெட்டிங் துறையில் உள்ள பலருக்கு நிகழ்வது தான். ஆனால் அதை அந்த இளைஞன், எதிர்கொண்ட விதமும், தனது முதலாளியிடம் அவன் சாதுரியமாக கூறிய பதிலும் பார்த்தீர்களா?

அணுகுமுறையில தாங்க இருக்கு எல்லாமே. எந்த ஒரு சூழ்நிலையையும் நேர்மறையாக எதிர்கொள்ளும் பக்குவம் உள்ளவர்களுக்கு இந்த உலகம் தன் கதவுகள் அனைத்தையும் திறந்து வைத்து காத்திருக்கிறது. எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் கண்ணெதிரே பொக்கிஷத்தை கண்டால் கூட  குருடராய்த் தான் இருப்பார்கள்!

நீங்கள் எப்படி?

இந்த உலகம் நேர்மறையான, ஆற்றல்மிக்க மனிதர்களுக்கே சொந்தம்!” – ஜான் பிரேசியர்

Leave a Reply