மாரத்தானில் கலக்கும் 87 வயது இளைஞர்!

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி பல நாள்களாகியும் பதக்கப் பட்டியலில் இந்திய வீரர்களின் பெயரையே பார்க்க முடியாமல் தவித்தவர்கள் ஏராளம். இறுதியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 67-வது இடத்தைப் பிடித்தாலும், பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கம் வென்றாலும், அந்த நேரத்தில் விளையாட்டைப் பற்றி கொஞ்சம் ஆர்வமாகப் பேசிவிட்டு, அதற்குப் பிறகு விளையாட்டை மறந்துவிடுவதுதான் நமது பழக்கம்.

“பதக்கத்துக்காகவும், பரிசுக்காகவும் விளையாடாமல் உடல் ஆரோக்கியத்துக்காக விளையாடுங்கள்” என்கிறார் கோவையைச் சேர்ந்த 87 வயது இளைஞர் ஏ.தேவராஜ்.

தினந்தோறும் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கோவை நேரு விளையாட்டு மைதானத்துக்கு வந்து 10 கிலோ மீட்டர் தொலைவை ஓடிக் கடக்கிறார் இவர். அதன் பிறகு அங்கு வரும் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கமும் ஆலோசனையும் வழங்குகிறார்.

பள்ளிப் பருவம்தொட்டே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் இவர், தடகளம், கால்பந்து, ஹாக்கி விளையாட்டுகளில் சிறந்த வீரராக இருந்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக அளவில் சிறந்த ஓட்டப்பந்தய வீரராகத் தேர்வான தேவரா ஜுக்கு இன்றளவிலும் ஓட்டம் கால் வந்த கலையாகிப் போனது. வாழ்நாளின் இதுவரையிலும் நூற்றுக்கணக்கான முழு மாரத்தான், அரை மாரத்தானில் கலந்து கொண்டு ஓடி, ஏராளமான பரிசுகளையும் பதக்கங்களையும் குவித்துள்ளார்.

முதியோருக்காக அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன், நியூயார்க், பாஸ்டன் நகரங்களில் நடைபெற்ற மாரத்தான்களில் ஓடியுள்ள இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தியின் தென் ஆப்பிரிக்க நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாரத்தானிலும் ஓடியுள்ளார்.
தவிர, தில்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், சென்னை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மாரத்தான்களில் தவறாது பங்கேற்று ஓடி வருகிறார்.

ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு காலணி, உடைகள், விளையாட்டுக் கருவிகள் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள இவரை தமிழ்நாட்டின் வயது மூத்த மாரத்தான் வீரர் என்று மட்டுமே பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், காமராஜர் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் என்பதும், சிறந்த காந்தியவாதி, தேசியவாதி, பொது நலத் தொண்டர் என்பதும் பலரும் அறிந்திராதது.

தேவராஜுக்குச் சொந்த ஊர் கோவை நரசிம்மநாயக்கன்பாளையம். விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் ஆர்வமுடையவர். வரலாறு, சமூகப் பணி, காந்திய சிந்தனை, இதழியல் உள்ளிட்ட 8 பாடங்களில் முதுகலை பட்டங்கள் பெற்றவர், சமூகப் பணி, வணிக மேலாண்மை போன்றவற்றில் பட்டயப் படிப்பு படித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இளநிலை சட்டம், வரலாற்றில் ஆய்வியல் நிறைஞர், காந்திய சிந்தனையில் முனைவர் பட்டம் என ஏராளமான படிப்புகளை முடித்து பட்டங்களைப் பெற்றுள்ளார்.

கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் சமூகப் பணித் துறை பேராசிரியராக கடந்த 1960 முதல் 71 வரை பணியாற்றினார். காமராஜரின் வேண்டுகோளை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்து கோவை கிழக்கு தொகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3,512 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

காமராஜரின் மறைவுக்குப் பிறகு அரசியலை விட்டு விலகினார். பின்னர் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட மலைக் கிராம மக்களின் நலனுக்கான கல்வி விழிப்புணர்வு, சுகாதாரம் தொடர்பான பொது சேவைகளில் முழு நேரமாக ஈடுபடத் தொடங்கினார்.

பாரதி ஊரக, மலைவாழ் மக்கள் முன்னேற்ற நிறுவனத்தின் இயக்குநராகவும், கோவை சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் தலைவராகவும், காந்தியடிகள் தொடங்கிய ஹரிஜன் சேவா சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், திருச்செங்கோடு காந்தி ஆசிரம அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கிறார்.

இவரது மனைவி மாரியம்மாள் பி.எஸ்.ஜி. நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காமராஜரின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தேவராஜ், தனது மகனுக்கும் மகளுக்கும் அவ்வாறே திருமணம் செய்துள்ளார்.

இத்தனை வயதிலும் தான் ஓடுவது சாதனைக்காக அல்ல. இன்றைய இளைஞர்கள் என்னைப் பார்த்து உடற்பயிற்சியின் மீது ஆர்வம் கொள்ள வேண்டும், உடல் நலனைப் பேண வேண்டும் என்பதற்காக மட்டுமே” என்கிறார் தன்னடக்கத்துடன்.

சந்திப்பு: க.தங்கராஜா
படம் : வீ.பேச்சிக்குமார்

Leave a Reply