பிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்

தெரிந்த மாணவன் ஒருவன் (19 வயது) கல்லூரிக்கு காலையில் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வருவார். “ஏன்பா நீ பஸ்ஸில் வருவதில்லையா? எனக்கேட்டால் ஒரு நடைப்பயிற்சியாகவும் இருக்கும் பணத்தையும் சேமிக்கலாமே என்றார். இந்த காலத்திலும் இப்படியொருவனா? என்று ஆச்சரியமடைந்தேன்.

மேலும் நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் ஆச்சரியத்தைக் கூட்டிக் கொண்டே சென்றன.
வீட்டின் வரவு செலவு கணக்கை எல்லாம் இவர்தான் பார்த்துக் கொள்கிறார்.
அப்பா,அம்மா கல்வியறிவற்றவர்கள். “மேம் 7 ஆம் வகுப்பிலிருந்தே வீட்டு செலவுக்கு கணக்கை பார்க்க ஆரம்பித்தேன்”. இன்றுவரை நிலத்தில் விதைக்கும் கணக்கிலிருந்து அறுப்பு கூலி வரை நான்தான் கவனித்துக் கொள்கிறேன்.
சீட்டுக் கட்டி சேமித்து இரண்டு அக்காக்கள் திருமணம் என எல்லாம் பெற்றோருடன் இணைந்து நானே நடத்தி வைத்தேன் என்றார்.

காலை மாலை வயலில் பணிப்புரிந்து விட்டே கல்லூரிக்கு வருகிறார். அன்று கீரை 150 கட்டு சந்தையில் இறக்கி விட்டே கல்லூரிக்கு வந்திருந்தார். வீட்டிற்கு தேவையானதை தோட்டத்தில் இருந்தே பெற்றுக் கொள்வோம். மேலும் வீட்டில் பசுக்கள் பராமரிப்பிலும் உதவி என வீட்டு வேலைகளின் பட்டியல் நீளம். (ஏழை மாணவரும் அல்ல. இவருக்கு சொந்தமான ஒரு இடம் 3 கோடி பெறும் )

இதனுடன் அவர்கள் கிராமத்து அலுவலருக்கு முதியோர் பென்ஷன் முதல் பல பணிகளின் கணக்கினைப் மாதத்தில் இரண்டு மூன்று முறை ஒரு இரவிற்கு பார்த்துக் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். அதை தனியாக சேமித்து ஐம்பதாயிரம் சேர்த்துளேன் என்றார்.

பனிரெண்டாம் வகுப்பில் தனி வகுப்புகளுக்கும் சென்று படிக்கவில்லை. வகுப்பில் படிப்பதுதான் மேம் என்றார்.அவ்வாறு படித்தே 900 மேல் மதிப்பெண் பெற்று மருத்துவ துறை சார்ந்த ஒரு படிப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

அதே வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவரின் தாய் (மருத்துவமனையில் பணிப்புரிபவர்) அவரின் மகனுக்கு காலையில் அவருக்கு பிடிக்காத உணவினை சமைத்து விட்டதால் கேன்டீனில் இருந்து வாங்கி பார்சல் செய்து கொண்டிருந்தார். அவர் தன் அம்மாவிடம் சீக்கிரம் தன் மொபைல் டேட்டா ரீசார்ஜ் செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்தார். பாதிநேரம் இணையத்திலும் வாட்ஸப்பிலும் வீடியோ கேம்ஸிலும் மூழ்கிக் கொண்டிருப்பவர் அவர்.

ஒத்த வயதுடைய இருவரில் ஒருவர் பொறுப்பில்லாமல் நடந்துக்க கொள்ள காரணம் சிறு வயதிலிருந்தே பொறுப்பை பிள்ளைகளுக்கு கொடுக்காத பெற்றோரே !. சிறிது வலித்தாலும் நாம் இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். அளவிற்கு அதிகமான பேம்பரிங்.

பிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தையும் தாய்மார்களும் எனலாம். எங்களுக்கு இருப்பது ஒரே மகன் அல்லது ஒரே மகள் என்று காட்டும் அதீதப் பிரியம் நிச்சயம் அவர்களை வலிமையானவர்களாக மாற்றாது.
மேலை நாட்டினரின் பிள்ளைகள் தங்களின் கல்லூரி கல்வி தொகையை அவர்களின் பகுதி நேர வருமானத்தில் இருந்தேதான் செலுத்துகின்றனர்.

இங்கு 30 வயது வரை பெற்றோர்களின் முதுகில் சவாரி செய்துக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் பிள்ளைகள் இருப்பதற்கு அவர்களை எந்தவொரு செயலிலும் தனித்து விடாமல் இருக்கும் பெற்றோர்களே முழு காரணம்.

பிரச்சனைகளையும், சவால்களையும் அவர்கள் இளமையிலிருந்தே எதிர்கொள்ளும் சதவிகிதத்தைப் பொறுத்தே அவர்களின் வளர்ச்சியின் உயரம் அமையும் 🙂 !

FB copy

Leave a Reply