பாஸ்வேர்ட்

​ஒரு பாஸ்வேர்ட் எப்படி வாழ்க்கையை மாற்றியது? 

ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு உண்மை சம்பவம்.

எப்போதும் போல அந்த திங்கட்கிழமை காலை எனக்கு அருமையாகவே இருந்தது. அந்த செய்தியை என் கணினித் திரையில் பார்க்கும் வரை. “உங்கள் பாஸ்வேர்ட் காலாவதியாகிவிட்டது” – இப்படி ஒரு சர்வர் மெசேஜ் என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் மின்னியது. பாஸ்வேர்டை நாமே உருவாக்குவது என்பது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் அல்ல. ஆனால் எங்கள் நிறுவனத்தில் அது ஒரு மகா டார்ச்சர்.

ஒவ்வொரு மாதமும் பாஸ்வேர்டை மாற்றச் சொல்லும் ஒரே நிறுவனம் எங்கள் நிறுவனமாகத்தான் இருக்கும். அதுவும் அதில் ஒரு கேப்பிடல் லெட்டர் இருக்கவேண்டும். ஒரு ஸ்மால் லெட்டர் இருக்கவேண்டும். ஒரு சிம்பல் இருக்கவேண்டும். ஒரு நம்பரும் இருக்கவேண்டும். அதுமட்டுமில்லை… பாஸ்வேர்ட் குறைந்தது எட்டு கேரக்டர்கள் இருக்கவேண்டும். அதுவும் அதை மாதாமாதம் மாற்றவேண்டும். முன்பு உபயோகித்த பாஸ்வேர்டை திரும்பவும் உபயோகிக்க முடியாது. அடபோங்கப்பா… சட்டை கசங்காம தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னே ரங்கநாதன் தெருவுக்குள்ளே கூட போயிட்டு வெளியே வந்துடலாம். ஆனா, இது மட்டும் பயங்கர கடுப்பான விஷயம். இது மாதிரி பாஸ்வேர்ட் சித்ரவதை அனுபவிக்கிறவங்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். புரியும்.

திரையை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பயங்கர கோபம். ஏற்கனவே என் சமீபத்திய விவாகரத்து எனக்கு ஏகப்பட்ட மன அழுத்தத்தை தந்துவிட்டிருந்தது. எனக்கு அவள் செய்த துரோகம் வேறு என் மனதில் அடிக்கடி தோன்றி என்னை வாட்டிக்கொண்டிருந்தது.

ஆனால் பாஸ்வேர்ட் கேட்டுக்கொண்டு மின்னிகொண்டிருந்த கம்ப்யூட்டருக்கு இதெல்லாம் தெரியுமா? அடுத்த 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் நான் ஒரு புது கடவுச் சொல்லை உருவாக்கி லாக் இன் செய்யவேண்டும்.

அப்போது தான் என் முன்னாள் பாஸ் ஒருவர் எனக்கு கொடுத்த டிப்ஸ்கள் நினைவுக்கு வந்தது. “என் வாழ்க்கையையே மாற்றக் கூடிய ஒரு பாஸ்வேர்டை நான் உபயோகிக்கப் போகிறேன்!” – இது தான் அவர் சொன்னது. அது என் நினைவுக்கு வந்தது.

நான் இப்போது இருக்கும் மூடில் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நிச்சயம் நான் வாழ்க்கையை எனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை. ஆனால், என் பாஸ்வேர்ட் அதை சாதித்தது. எனது சமீபத்திய திருமண முறிவு பிரச்னையில் நான் பலிகடாவாகிவிடக்கூடாது. என் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடவில்லை. என்னால் இனி நிச்சயம் சாதிக்கமுடியும். இதை எனது பாஸ்வேர்ட் உணர்த்தியது.

நான் செட் செய்த பாஸ்வேர்ட் என்ன தெரியுமா?

4give@her.

மேற்கூறிய இந்த பாஸ்வேர்டை நான் என் கம்ப்யூட்டர் லாக் ஆகும்போதெல்லாம் ஒரு நாளைக்கு பல முறை டைப் செய்யவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் நான் மதிய உணவு முடித்துவிட்டு வரும்போது ‘4give@her – அவளை மன்னித்துவிடு’ என்று டைப் செய்யவேண்டியிருந்தது.

இந்த ஒரு சின்ன செயல், என் முன்னாள் மனைவியை நான் பார்க்கும் விதத்தை மாற்றியமைத்தது. மேலும் தொடர்ந்து செய்து வந்த இந்த இணக்கமான செயல், நடந்ததை ஏற்றுகொள்ள மனதை பழக்கப்படுத்தியது மாத்திரமல்லாது, என் மன அழுத்தத்திலிருந்து நான் மீண்டு வர எனக்கு பெரிதும் உதவியது.

அடுத்த மாதம் நான் செட் செய்த பாஸ்வேர்ட் அடுத்து நான் செய்யவேண்டிய மிகப் பெரிய பணியை அடிக்கடி நினைவூட்டும் விதமாக அமைத்துக்கொண்டேன்.

Quit@smoking4ever’

ஒரு நாளைக்கு பல முறை மேற்படி பாஸ்வேர்டை உபயோகிக்க நேர்ந்ததால், புகைப்பிடிப்பதை நிறுத்தவேண்டும் என்கிற எனது லட்சியத்துக்கு உறுதுணையாக இருந்து நான் நிரந்தரமாக புகைப்பிடிப்பதை நிறுத்த வழி செய்தது.

அடுத்த மாதம் என் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா?

Save4trip@europe’

பாஸ்வேர்ட் கூறிய படி மூன்று மாதத்தில் என்னால் ஐரோப்பா செல்ல முடிந்தது.

என்னுடைய வாழ்க்கையை நான் உபயோகிக்கும் ஒரு சாதாரண ‘கடவுச்சொல்’ (பாஸ்வேர்ட்) எப்படி மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா?

சிலநேரங்களில் நமது லட்சியங்களை நாம் அடைய கடுமையாக போராடவேண்டிய சூழ்நிலை வந்தால், இது போன்ற ஒரு எளிய அணுகுமுறை மிகப் பெரிய பலனை – கற்பனைக்கும் எட்டாத பலனை கொடுக்கும்.

சில மாதங்கள் கழித்து நான் தேர்வு செய்த பாஸ்வேர்ட் என்ன தெரியுமா?

‘lifeis#beauTiful’

நிச்சயம் மறுபடியும் என் வாழ்க்கை ஒரு நல்ல மாற்றத்தை சந்திக்கும் என்பதை நான் சொல்லவேண்டுமா என்ன?

Leave a Reply