பழையக் காதலை கணவரிடம் சொல்லலாமா 

🌿🌿🌿🌿🌿🌿🌿

ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்து போவதும் சகஜம். சிலர் திருமணத்தில் இணைவர், பலர் வேறு ஒருவருடன் திருமணத்தில் இணைவர். இதில் ஒரு பெண்ணை காதலித்து வேறு பெண்ணை மணக்கும் ஆணுக்கு அவ்வளவாக பிரச்சனை இருக்காது. ஆனால் ஒருவரை காதலித்து மற்றொருவரை மணக்கும் பெண் ஆரம்பம் முதலே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறாள். காதலனை எப்படி மறக்க  என்பது ஒரு பக்கம் என்றாலும் அக்காதலை கணவனிடம் சொல்லவா  மறைக்கவா என்ற கேள்வி ஒரு பக்கம் !!

ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தேன் என்று எல்லா ஆண்களும் தன் மனைவியரிடம் சொல்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு ஆணின் கடந்த காலத்தை பெண் பெருந்தன்மையுடன்  கடந்துவிடுகிறாள்.(விதிவிலக்கின் சதவீதம் குறைவு)

🌿🌿

அதை போல ஒரு பெண் தனது கடந்தகால காதலை கணவனிடம் சொல்ல முடியுமா? சொன்னால் நிலைமை என்ன? சொல்லாமல் மறைத்தாலும் என்றாவது ஒரு நாள் யாரோ ஒருவரின் மூலமாக கணவனின்  காதுக்கு விஷயம் தெரியவரலாம். யார் மூலமோ தெரிந்து பிரச்சனையாவதை விட நாமே சொல்லிவிடுவது பெட்டர் என்று சில பெண்கள் சொல்லிவிடுகிறார்கள் …அவ்வாறு சொன்ன ஒரு பெண்ணின் நிலை இன்று மிக பரிதாபம். சந்தேகம் கொண்டு தேளாய் கொட்டுகிறான் கணவன், உறவினர்களிடம் போனில் பேசினாலும்  ‘அவன்கிட்ட தானே பேசுற, உருகி உருகி காதலிச்சிட்டு எப்படி மறக்க முடியும்?’ ‘அவன விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிகிட்ட அப்போ அவனுக்கு உண்மையா இல்ல, இப்போ எனக்கு மட்டும் எப்படி உண்மையா இருக்க முடியும்?’ ‘காதல் எதுவரை கை வரையா இல்ல அதுக்கு மேலயா?’ என்று வித விதமான கொடிய வார்த்தைகளால் தினமும் அர்ச்சனை. துன்புறுத்தல் தொடர இப்போது விவாகரத்துதான் ஒரே முடிவு என்ற நிலை.
பருவ வயதில் காதல் வந்தது தவறா ? தன் காதலை ஏற்காமல் வற்புறுத்தி இவரை திருமணம் செய்வித்த பெற்றோரின் தவறா ?  கணவனிடம் எதையும் மறைக்காமல் உண்மையாக வாழ எண்ணிய தனது தவறா ? இப்படி பல கேள்விகளுக்குள் தன்னை புதைத்துக்கொண்டிருக்கிறாள்…
இன்றைய சூழலில் பல குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இச்சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்பது ஆண் பெண்ணின் பரஸ்பர புரிதலை பொறுத்து அமைகிறது.  இந்த விசயத்தில் எப்படி  கவுன்சிலிங்  கொடுத்தேன்?! என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை கணவரிடம் சொல்லாமல் இருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சியுடன் உள்ள பெண்கள் அல்லது கடந்த காலத்தை பற்றிய குழப்பத்துடன் திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அவர்களுக்கு  இங்கே சொல்லப் போகிறவைகள் உபயோகப்படலாம். தொடர்ந்து வாசியுங்கள்… 
ஆண்களின் கடந்த காலம் எப்படி இருந்தாலும்  அட்ஜெஸ்ட் செய்து வாழ பெண்கள் பழகிக் கொள்வார்கள். இந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே !
நம் திரைப் படங்களில் ஏற்கனவே ஒருவரால் காதலித்து கைவிடப்பட்ட கதாநாயகியை திருமணம் செய்யும் கதாநாயகன் தியாகச்சீலனை போல காட்டப்படுவான். அப்புறம் மறுமணத்திற்கு தயாராகும் கதாநாயகிக்கு குழந்தை இருக்காது, அதாவது முதல் கணவன் முதலிரவுக்கு முன்னரே இறந்துவிடுவான் அல்லது குடும்ப வாழ்விற்கு தகுதி இல்லாதவனாக இருப்பான். திரைப்படங்கள் என்றில்லை நம் சமூகமே இப்படித்தான் பெண்ணை சித்தரித்து வைத்திருக்கிறது.
நம் சமூகத்தில் ஆண்கள் பலருடன்  நட்பாக இருக்கலாம், காதலிக்கலாம், சில பல திருமணங்கள் கூட செய்து கொள்ளலாம். அவர்களின் மதிப்பு எவ்விதத்திலும் குறைவதில்லை. நான் ஆம்பளை என்பதில் அடங்கிவிடுகிறது அத்தனையும்…! ஆனால் பெண்கள் தாங்கள் காதலித்ததையே மறைத்தாக வேண்டும் !! காதல் வயப்பட்டவள் என்றால் அவள் இங்கே மதிப்பிழந்தவளாக  கருதப்படுகிறாள். பெண் என்பவள் ஒருவனுக்காகவே பிறந்து அவனுக்காகவே வாழ்ந்து அவனுடனே இறந்து விடவேண்டும் என்ற ஆழ்மன புதைகுழியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை இந்த சமூகம். (அதனால்தானோ என்னவோ பல முறைதவறிய பொருந்தா காதல்கள்,  கல்யாணங்கள் !)

🌿🌿

காதல் 
காதல் என்பது அழகான ஒரு உணர்வு. பலரின் மனதிலும் முதல் காதல் ஒன்று என்றும் இருக்கும். அந்த காதல் உங்களை அழகாய் பார்த்துக் கொள்ளும் சோர்வுறும் நேரம் தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தும். தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தும். நிகழ்கால குடும்பச் சுமைகளை உங்களிடம் இருந்து பகிர்ந்து எதிர்காலத்தை பற்றிய ஆவலை ஏற்படுத்தி வாழவைக்கும்.  கணவரிடம் கடந்த காலத்தை வெளிப்படுத்தும் போது அதன் அழகு , இயல்பு ஒருவேளை குறைந்துபோகக் கூடும். காதலில் உண்மையான வடிவம் சிதைந்து போகக் கூடும். கணவனுக்கு உண்மையாக இருப்பதாக எண்ணிக் கொண்டு கடந்த காலத்தை சொல்வது புத்திசாலித்தனம் அல்ல. உண்மையாக இருப்பது என்பது வேறு உண்மையைப் போட்டு உடைப்பது என்பது வேறு. உண்மையை சொல்லி அதுவரை தெளிவாக இருக்கும் கணவனின் மனதில் குழப்பத்தை குடி வைத்து விடகூடாது. அதன்பின் ஆயிரம் சத்தியங்கள் செய்தாலும் குழப்பத்தை வெளியேற்றுவது மிக கடினம்.
தீக்குளிக்கச்  சொல்லும் ராமன்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்காக நாம் சீதையாகிவிட முடியாது. கடந்தகாலத்தை கூறி… நிகழ்காலத்தை நரகமாக்கி… எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் !!

பொய் சொல்லக் கூடாதே தவிர உண்மையை மறைப்பதில் தவறில்லை. 

பொய் சொல்லக்கூடாது என்றால் காதல் அனுபவம் உண்டா என்று கணவன் கேட்கும் போது என்ன செய்வது என யோசிக்கிறீர்களா ? இந்த கேள்வி வந்தவுடனே உஷாராகி விட வேண்டியதுதான். பரந்த உள்ளம் கொண்ட ஒரு ஆண் தன் மனைவியின் கடந்த காலத்தை ஆராய விரும்ப மாட்டான், அவளாக சொல்லாதவரை !  மீறி கேட்கிறான் என்றால் இவனை போன்றவர்களிடம் பொய் சொல்வதை தவிர வேறு வழியில்லை. பின் வேறு யாரோ மூலமாக தெரியவந்தாலும் ‘ஆமா அதை நானே மறந்துவிட்டேன், மறந்த ஒன்றை பற்றி இப்போது  ஏன் பேசணும் …இப்போது என் சிந்தனை எல்லாம் நீங்க, குழந்தைகள் பற்றி மட்டும்தான்’ என்று கூறி அத்துடன்  முற்றுபுள்ளி வைத்துவிடுங்கள்.

🌿🌿

பெண்களே
திருமணத்திற்கு முன் பல நம்மை கடந்து சென்றிருக்கும். பெற்றோரின் கருத்து வேறுபாடுகள், யாரோ ஒருவரின் தவறான தொடுதல், ஏமாற்றம், தோல்வி இப்படி ஏதாவது இருக்கலாம் இதை எல்லாம் அப்படியே சொல்லிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிகழ்கால நிம்மதியான வாழ்க்கைக்கு ஆண், பெண் யாருடைய கடந்த (கசந்த)காலமும் தேவையில்லை. இது உங்கள் இருவருக்கும் மட்டுமேயான ஒரு புதிய வாழ்க்கை. இதில் தேவையற்றபழையன கழிதல் வேண்டும். இந்த வாழ்க்கையில் குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இவர்களுடன் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை பற்றிய பேச்சுக்கள் மட்டும்தான் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டும். 
கண்ணைவிட்டு மறைந்த கடந்த காலம் பற்றிய கவலை இன்றி

கண்ணுக்கே தெரியாத எதிர்காலம் பற்றிய அதிக எதிர்பார்ப்பும் இன்றி

கண்முன் தெரியும் நிகழ்காலத்தில் எவ்வாறு சந்தோசமாக வாழ்வது என்பதை  பற்றி மட்டுமே நினையுங்கள்…பேசுங்கள்… வாழ்வு வளமாகும்… தாம்பத்தியம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடட்டும்………..
இது ஆண்களுக்காக…

பெண் நம்மை போன்ற உயிரும் உணர்வும் உள்ளவள், பருவ வயதில் உண்டாகும் ஈர்ப்புக்கு ஆளாவது சகஜம் தான்’ என்று ஒத்துக் கொள்ளும் உயர்ந்த உள்ளம் உங்களுக்கு வேண்டும்.  தன் மனைவியானவள் தன் கடந்தகால காதலை தெரிவித்தால் ‘பரவாயில்லை போனது போகட்டும், உன் தவறு ஏதுமில்லை…கடந்த காலத்தை காதலனுடன் சேர்த்து தூக்கிப் போட்டுவிடு… இனி உனக்கு நான்தான் எனக்கு நீ தான்’ என்று பெண்ணின் மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியை முதலில் போக்குங்கள். ஆண்கள் இந்த விசயத்தில் கட்டாயம் மாறித்தான் ஆகவேண்டும். உண்மையை வெளிப்படையாக சொன்ன மனைவியின் வெள்ளை மனதை புரிந்து அகமகிழ்ந்து அணைத்துக் கொள்ளும் அளவு மனம் பக்குவப்பட்டாக வேண்டும். அப்போதுதான் மனைவியும் கணவனிடம் தான் எதையும் மறைக்கவில்லை என்ற ஒரு மனநிம்மதியுடன் தன்னை புரிந்துக் கொண்ட கணவனை போற்றுவாள், மனதார முழுமையாக காதலிக்கத் தொடங்குவாள் அந்த நொடியில் இருந்து …!  இனிவரும் நாட்கள் நிச்சயமாக நலமுடன் அமையும்.

Leave a Reply