பத்தரை டாலர்

விவேகானந்தர் சிகாகோ சென்றிருந்தபோது, சுவாமிஜியும் ஹாலிஸ்டர் என்ற சிறுவனும், ஒரு புல்வெளி வழியாக நடந்து சென்றனர். அங்கே கோல்ப் மைதானம் ஒன்று இருந்தது. சுவாமிஜி கோல்ப் பற்றி அறியாதவர். மைதானத்தில் ஒரு கொடி பறந்ததும் அதை கண்டு ஹாலிஸ்டரிடம் அது பற்றி கேட்டார்.

அவன் அந்த விளையாட்டை பற்றி கூறிவிட்டு “ஆரம்பத்தில் விளையாடுபவர்கள் குழியில் பந்தை போடுவதற்கு 4, 7 அல்லது 9 முறை அவகாசங்கள் தரப்படும்” என்றான்.

அதற்கு சுவாமிஜி, “அதற்கு ஏன் இத்தனை அவகாசங்கள்..? நான் ஒரே ஒரு முறையில் குழியில் பந்தை போடுகிறேன்.”

“அது உங்களால் முடியாது சுவாமிஜி… தேர்ந்த விளையட்டுக்கார்களுக்கு கூட அது சாத்தியமற்ற ஒன்று”

“நான் ஒரே தடவையில் குழியில் பந்தை போடுகிறேன். வேண்டுமானால் பந்தயம் கட்டிக்கொள்ளலாமா?” என்றார் விவேகானந்தர் தீர்க்கமான குரலில்.

சுவாமிஜியால், அது சாத்தியமேயில்லை என்று கருதினான் ஹாலிஸ்டர். எனவே அவரிடம், “பந்தயத்திற்கு நான் தயார். நீங்கள் ஒரே அடியில் பந்தை குழிக்குள் போட்டால் நான் உங்களுக்கு ஐம்பது சென்ட் தருகிறேன்” என்றான்.

“போடாவிட்டால் நான் ஒரு டாலர் தருகிறேன்” என்றார் சுவாமிஜி.

அப்போது அந்த வழியே வந்த லெக்கட் என்கிற சீமானும் அந்த பந்தயத்தில் கலந்துகொண்டார்.

சுவாமிஜி, ஒரே அடியில் பந்தைப் போட்டுவிட்டால், நான் 10 டாலர் தருகிறேன்” என்றார் அவர்.

சுவாமிஜி கோல்ப் மட்டையை கையில் எடுத்தார். சிறிது நேரம் கூர்மையான பார்வையை செலுத்தி கொடியை பார்த்தார். பிறகு வேகமாக பந்தைத் தட்டினார். பந்து சரியாக குழியில் விழுந்தது.

எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். திகைப்பு. உடனே கரகோஷம் எழுப்பி சுவாமிஜியை பாராட்டினர்.

ஆமாம்… சுவாமிஜி… நீங்கள் இப்படி ஒரே அடியில் பந்தை குழியில் போட்டது உங்கள் யோகசக்தியினாலா?” ஆச்சர்யத்தில் உறைந்துபோன லெக்கட் கேட்டான்.

அதற்கு சுவாமிஜி, “இது போன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் நான் யோக ஆற்றலை பயன்படுத்துவதில்லை.” என்றார்.

“பிறகு எப்படித் தான் இந்த அதிசயம் சாத்தியப்பட்டது?”

சுவாமிஜி விளக்கினார்… “நான் என்ன செய்தேன் என்பதை இரண்டே வாக்கியங்களில் விளக்குகிறேன். முதலில் தூரத்தை கண்களால் அளந்துகொண்டேன். என் கை வலிமை எனக்கு தெரியும். இரண்டாவதாக இந்த பந்தயத்தில் ஜெயித்தால் எனக்கு பத்தரை டாலர் கிடைக்கும் என்பதை என் மனதிற்கு கூறினேன். பிறகு பந்தை அடித்தேன்.”

சுவாமிஜியை பொறுத்தவரை, “வேலைப் பற்றிய அறிவு + சுய வலிமை பற்றிய தெளிவு + மனம் ஒன்றிய ஈடுபாடு = வெற்றி!”

Leave a Reply