பக்குவம்

ந்த தம்பதிகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து ஒரு அழகான குழந்தை பிறந்தது. கண்ணின் மணியை போல அந்த குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்து வந்தார்கள். இருவரும் குழந்தை மீது தங்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

ஒரு நாள் கணவன் அலுவலகம் செல்லும்போது, கீழே ஒரு மருந்து பாட்டில் திறந்தபடி இருப்பதை பார்க்கிறான்.

அலுவலகம் செல்லும் அவசரத்தில் இவன் இருந்தபடியால்…”அந்த மருந்து பாட்டிலை எடுத்து கொஞ்சம் ஜாக்கிரதையான இடத்துல வெச்சிடும்மா செல்லம்….” என்று கூறி விட்டு சென்றுவிடுகிறான்.

சமையற்கட்டில் வேலையாக இருந்த மனைவி, அந்த பரபரப்பில் பின்னர் அதை மறந்துவிடுகிறாள்.

அந்த பாட்டிலின் கவர்ச்சிகரமான நிறத்தால் கவரப்படும் குழந்தை தவழ்ந்து வந்து அதை எடுத்து குடித்துவிடுகிறது. பெரியவர்கள் மட்டுமே சிறிய அளவில் குடிக்ககூடிய சக்தி மிக்க ஹை-டோஸ் மருந்து அது. அதை எடுத்து குழந்தை குடித்தபடியால் மயங்கிவிடுகிறது.

சமையற்கட்டிலிருந்து சற்று நேரம் கழித்து வரும் மனைவி குழந்தை மயங்கி கிடைப்பதையும் அருகே மருந்து பாட்டில் கிடப்பதையும் பார்த்து நடந்ததை புரிந்துகொள்கிறாள்.

அலறியடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.

ஆனால்… பரிதாபம்…. குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டது என்கிறார்.

இவளுக்கு ஒரே அதிர்ச்சி.. துக்கம்… கதறி அழுகிறாள். குழந்தை இறந்த துக்கம் ஒருபுறம்.. கணவனின் முகத்தை எப்படி பார்ப்பது என்கிற பதபதைப்பு ஒருபுறம். விஷயத்தை கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு ஓடிவருகிறான் கணவன். இறந்த குழந்தையை பார்க்கிறான். உடைந்து போய் அழுதபடி காணப்படும் மனைவியை பார்க்கிறான்.

சில வார்த்தைகள் சொல்கிறான்.

அவன் சொன்ன அந்த சில வார்த்தைகள் என்ன? இந்த கதையிலிருந்து நீங்கள் அறிந்துகொள்ளும் நீதி என்ன?

கணவன் சொன்ன அந்த நான்கு வார்த்தைகள் : “கவலைப்படாதே டியர்… நான் இருக்கிறேன் உனக்காக!”

அவன் அந்த வார்த்தைகள் சொன்னதும் ஓடிவந்து அவனை அவனை அணைத்துக்கொள்கிறாள். அழுதபடி அவனுக்கு முத்தங்கள் தருகிறாள்.

கணவனின் இந்த அணுகுமுறைக்கு பெயர் தான் ‘பக்குவம்’.

குழந்தை இறந்துவிட்டது. இனி அது உயிருடன் வராது. உயிர் நீத்த குழந்தையை மனதில் கொண்டு உயிருள்ள தனது மனைவியை வார்த்தைகளால் சாகடிக்க அவன் விரும்பவில்லை. ஏனெனில் அந்த சூழ்நிலையில் அவன் மனைவியை பார்த்து கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அவளை மிகவும் பாதிக்கும்.

யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. மனைவியை எதிர்பார்க்காமல் அவன் தானே அந்த பாட்டிலை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தால் இந்த துரதிர்ஷ்டம் நேர்ந்திருக்காது.

இவனது துக்கத்திற்கு சற்றும் குறைந்ததல்ல ஒரே குழந்தையை இழந்து தவிக்கும் ஒரு தாயின் துயரம். அந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு தேவை கணவனின் அரவணைப்பும் ஆறுதலான சில வார்த்தைகளும் தான்.

அதைத் தான் அவன் அவளுக்கு அந்த கணம் கொடுத்தான்.

நமது பணியிடத்திலும் சரி குடும்ப உறவுகளிலும் வாழ்க்கையின் பல நேரங்களில் நம்மை  சுற்றி நடக்கும் தவறுகளுக்கு யார் காரணம், யாரை குற்றம் சொல்லலாம் என்று ஆராய்ச்சி செய்வதிலேயே நாம் காலத்தை கழிக்கிறோம். ஆனால் அதனால் பயன் ஒன்றும் இல்லை.

ஆனால் இதனால் நாம் இழப்பது சில நேரங்களில் சிலவற்றை…. பல நேரங்களில் எல்லாவற்றையும்!!

ஓர் தவறு நடந்துமுடிந்துவிட்டபிறகு எவரையும் காயப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட கணவனை போல ஒரு பொறுமையான கனிவான அணுகுமுறையை கையாளுங்கள். நீங்கள் எதிர்பார்க்காத பல மகத்தான விஷயங்களை அந்த அணுகுமுறை உங்களுக்கு தரும்.

எனவே இன்றைய தேவை : ‘பக்குவம்’!

Leave a Reply