நீயும் வறியவனே

​படித்து பட்டம் பெற்று பல நாடுகளுக்கு சென்று பொருளீட்டி, புதிய வியாபாரத்தை துவக்கி வெற்றி மேல் வெற்றி குவித்த இளைஞன் அவன். அவன் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவொரு பெண்ணை ஊரே வியக்கும்படியான ஆடம்பரத்துடன் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தி வந்தான். அவன் சுகபோகத்தை துய்க்க ஒரு பெரிய உறவினர் பட்டாளமே அவன் வீட்டில் இருந்தது.

முன்பு அவன் படித்து பட்டம் பெற்று பிரிவுபச்சாரம் பெற்ற நேரம், அவன் கல்லூரி ஆசிரியர் அனைத்து மாணவர்களிடமும் “உங்களில் யாரேனும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக கருதினால் என்னை அப்போது தொடர்புகொள்ளுங்கள். நான் உங்களை வந்து நேரில் பார்க்கிறேன்!” என்று கூறியிருந்தார்.

இவனுடன் படித்த மாணவர்களில் பலர் வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்தாலும் இவன் அளவுக்கு யாரும் வாழ்க்கையில் உயரவில்லை. அது அவனுக்கும் தெரியும்.

நமது ஆசிரியரை அழைத்து நமது தற்போதைய அந்தஸ்து பற்றி சொல்வோம். அவர் மகிழ்ச்சியடைவார் என்று கருதி அவரை தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தான்.

ஆசிரியரும் புறப்பட்டு வந்தார்.

அவருக்கு தனது பங்களாவை சுற்றிக் காண்பித்தவன், இது போன்று தனக்கு இதே ஊரில் மேலும் இரண்டு வீடுகள் இருப்பதாகவும், தவிர முக்கிய நகரங்களில் பல ஃபிளாட்டுகள் இருப்பதாவும் பெருமை பொங்க சொன்னான்.

ஆசிரியர் எந்த வித பாராட்டுக்களும் கூறவில்லை. அவன் சொன்னதை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து இதுவரை அவன் சென்ற உலக நாடுகளை பட்டியலிட்டவன் ஆசிரியரின் ரீயாக்ஷனை கவனித்தான். இம்முறையும் அவர் எதுவும் சொல்லவில்லை.

தன்னுடைய முன்னேற்றத்தை பார்த்து அவரிடமிருந்து ஏதேனும் பாராட்டுக்கள் வரும் என்று எதிர்பார்த்தவன் அவரிடமிருந்து அப்படி எதுவும் வராதது கண்டு ஏமாற்றமடைந்தான்.

இந்த ஊர்லயே எட்டு கார் வெச்சிருக்கிறது… நான் ஒருத்தன் தான் சார்…” என்றான் அடுத்து சற்று பெருமிதத்துடன்.

அந்த நேரம், அவன் டிரைவர் அவனிடம் வந்து தனக்கு வீட்டுக்கு கிளம்ப நேரமாகிவிட்டது என்றும் தான் போகலாமா என்றும் கேட்டான்.

சரி சாவி கொடுத்துட்டு நீ கிளம்பு. நாளைக்கு காலைல 5.00 மணிக்கெல்லாம் வந்துடு. கோவிலுக்கு போகணும்…” என்றான்.

எனக்கு முதல் பஸ்ஸே 5.30 மணிக்கு தான் சார்… 6.00 மணிக்கு தான் வரமுடியும்

சரி… 6.00 மணிக்கு ஷார்ப்பா வந்துடு” என்று அவனை அனுப்பிவிட்டு தனது ஆசிரியருடன் பேச்சை தொடர்ந்தான்.

“இந்த டிரைவர் எத்தனை நாளா உன்கிட்டே வேலை பார்க்குறார்?”

“ஒரு ரெண்டு வருஷமா இருக்கும்… ஏன்…?”

“அவர் வீடு எங்கேயிருக்கு…?”

“ஒரு பத்து கி.மீ. தள்ளி ஒரு ரெஸிடென்சியல் ஏரியாவுல…”

“தினமும் வேலைக்கு எப்படி வர்றார்?”

“பஸ்லே தான்”

“ம்… எட்டு கார் வெச்சிருக்குற உனக்கு உன் டிரைவர் வந்துட்டு போறதுக்கு ஒரு டூ-வீலராவது வாங்கித் தரணும்னு தோணலியா??”

“அது… வந்து… வந்து….”

“நம்முடைய வெற்றி அடுத்தவர்களிடம் ஆக்கப்பூர்வ பாதிப்பையோ மாற்றத்தையோ ஏற்படுத்தாத வரையில் அது வெற்றியே  அல்ல. எப்போது உன் செல்வம் அடுத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை சிறிதாவது உயர்த்துகிறதோ அல்லது அவர்களின் அன்றாட பிரச்சனைகளை சிறிதளவாவது தீர்க்கிறதோ அப்போது தான் நீ செல்வந்தன். அதுவரையில் நீ வறியவனே” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

தன் ஆசிரியர் கூறியதில் உள்ள நியாயத்தை உணர்ந்து அன்றே தனது டிரைவர், வேலைக்கு வந்து போக ஒரு புதிய டூ-வீலரை தனது அன்பளிப்பாக வாங்கித் தந்தான் அந்த இளைஞன்.

சிலரிடம் இருக்கும் பணமோ அந்தஸ்தோ அவர்களின் டம்பத்தை பறைசாற்றுவதாகத் தான் இருக்குமே தவிர அதனால் யாருக்கும் எந்த பயனும் இருக்காது.

உங்கள் வெற்றி அடுத்தவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாத வரையில் அது வெற்றியே அல்ல.

Leave a Reply