நிற்க அதற்குத் தக

ரு ஊரில் ஒரு பழுத்த வயது முதிர்ந்த ஞானி வசித்து வந்தார். அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை எனுமளவுக்கு அத்தனை விஷயங்களை தெரிந்துவைத்திருந்தார். அவரது கேள்வி ஞானத்தையும் கல்வி ஞானத்தையும் கண்டு அனைவரும் வியந்தனர்.

இந்நிலையில், பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் இவரை விட மிகப் பெரிய ஞானி ஒருவர் வசித்து வருவதாகவும் அவருக்கு இன்னும் அதிக விஷயங்கள் தெரியும் என்றும் ஊருக்குள் பேச்சு எழுந்தது. மேலும் அங்கு படித்துவிட்டு வரும் மாணவர்கள் அனைவருக்கும் நற்பெயர் கிடைப்பதாகவும் பேசிக்கொண்டனர். இது நம் ஞானியின் காதுகளுக்கு எட்டியதும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. தன்னை மிஞ்சிய ஆள் இல்லை என்று எண்ணியவருக்கு தன்னை விட அறிவிலும் ஞானத்திலும் மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் என்று ஊரார் பேசிக்கொள்வது பிடிக்கவில்லை.

அது யார் உண்மையிலேயே தன்னைவிட அதிகம் கற்றவரா விஷய ஞானம் உள்ளவரா என்று தெரிந்துகொள்ள ஆசை இவருக்கு ஆசை அரும்பியது.

உடனே தனது தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல், பல மாதங்கள் பயணம் செய்து காடு, நதிகள், மலை இவற்றையெல்லாம் தாண்டி அந்த மலைக்கிராமத்தை அடைந்தார்.

அங்கிருந்த அந்த ஆஸ்ரமத்தின் குருவை சந்தித்து, தான் வந்த நோக்கத்தை கூறி “அப்படி என்ன நீங்கள் தெரிந்துவைத்திருக்கிறீர்கள், கற்றுத் தருகிறீர்கள்? ஒன்றே ஒன்றை கூறுங்கள் பார்ப்போம்” என்றார்.

அவர் உடனே, “நல்லதை செய்தால் நல்லது வரும். கெட்டதை செய்தால் கெட்டது வரும்! எனவே தீமையை தவிர்க்க, நல்ல செயல்களை செய்துகொண்டே போகவேண்டும். இது தான் நான் இங்கு கற்றுத் தரும் நீதி! பின்பற்றும் நீதி!!” என்றார்.

இவருக்கு வந்ததே கோபம்… “இது குழந்தைகளுக்கு கூட தெரியுமே… இதைக் கேட்கவா நான் அவ்வளவு தூரம் இந்த வயசுல கஷ்டப்பட்டு வந்தேன்… என்னை என்ன கிண்டல் பண்றீங்களா?”

“நிச்சயமா குழந்தைகள் உட்பட ஒருவர் விடாமல் இதை யார் வேண்டுமானாலும் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் எல்லாரும் இதை பின்பற்றுவதில்லையே…?” என்றார் சிரித்துக்கொண்டே.

நம் ஞானி வெட்கித் தலைகுனிந்தார்.

தான் கற்றதை எவன் செயல்படுத்துகிறானோ அவன் தான் ஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி. தெரிந்துவைத்திருப்பது என்பது வேறு. பின்பற்றுவது என்பது வேறு.

நமது அறிவினால் விளையும் பயன் என்பது நாம் தெரிந்துவைத்திருப்பதை – நமது நன்மைக்காகவும் மற்றவர்கள் நன்மைக்காகவும் – எந்தளவு நடைமுறைப்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது.

பணத்தால் புத்தகங்களை வாங்கலாம். ஒருபோதும் அறிவை வாங்கமுடியாது. அதே போல ஸ்மார்ட் ஃபோன் / வாட்ஸ் ஆப் இவற்றால் கதைகளை பகிரலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அக்கதைகள் கூறும் நீதிகளை பின்பற்றினால் தான் அவற்றால் நன்மை விளையும். இல்லெயெனில் கடலில் பெய்த மழை தான்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக (குறள் 391)

Leave a Reply