Oru OLA Driver

நானும் மாறிவிடுவேன்

*ஓலா டிரைவர் கற்றுத்தந்த பாடம்.*

*ஒலா கார் ஒட்டுனர் காரில் இருந்த ஒரு குமிழை திருப்பினார், சங்கீதம் கேட்க ஆரம்பித்தது.*

*ராஜாவின் ராகமாக, “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” நாலு வரி கேட்கையிலே , மீண்டும் தவறாக கணக்குப் போடும் மாணவனின் காதை திருகும் உபாத்தியாரைப் போல அக்குமிழை திருகினார்,*

*”ஜிங்குடி ஜிங்குடி எனக்கு என்னடி உன் மனக்கணக்கு “ இதன் ப்ராப்தம் இரு வரிகள் மட்டுமே, *

*மீண்டும் குமிழின் கழுத்துக்கள் திருகப்பட்டன,*

*இப்பொழுது, “மதுரை மரிக்கொழுந்து வாசம் என் ராஜாவே உன்னோடைய நேசம்” ஆஹா எனக்கு பிடித்த பாடல், அதற்காகவே இத்தனை திருகோ என்று நினைத்து, மனம் பாடலில் ஒன்றிவிட, *

*மனிதன் சில நிமிடத்தில் அதையும் திருகினார்.*

*அந்த பாட்டை மாற்றாதீர்கள் என்று கேட்க ஏனோ தோன்றவில்லை. ஒரு பாட்டுக்காக அவரிடம் கேட்க வேண்டுமா என்ற ஈகோ கூட காரணமாக இருக்கலாம்.*

*அடுத்து “பாடி பறந்த கிளி பாதை மறந்த கிளி’ இதிலே சற்று நேரம் நிலைப்பட்டது பாடல்.*

*நான் இறங்கும் இடமும் வந்துவிட, அவருக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்து இறங்கினேன்.*

*மனம் அசைப்போட்டது. *

*தேடுதலிலேயே மனிதர்கள் எதையும் முழுமையாக கற்றறியாமல் எல்லாவற்றிலும் இந்த பாடலை கேட்டது போலவே , பாதிப் பாதியாக கற்று, முழுமை பெறாமலேயே முற்று பெறுகிறார்கள் என்ற உண்மை உரைத்தது. *

*அந்த மனிதர்களில் நானும் சேர்த்தி என்பதும் புரிந்தது. *

*அவன் குழியை திருப்பும் முன்பு, “ இந்த பாடலை மாற்றலாமா ?” என்று ஏன் என்னை கேட்கவில்லை, அதுவன்றோ ஒரு கஸ்டமருக்கு அவன் செய்யும் சிறந்த சேவையாக இருக்கும் என்று யோசித்த எனக்கு,*

*அதே போல , நான் ஒரு விஷயத்தை செய்யும் பொழுது, என் உறவுகளிடம் அப்படி ஒரு நிலையை நிறுத்தி செய்கிறேனா என்று யோசித்துப் பார்த்தால்!!*

*நம் கையில் அதிகாரம் இருக்கும் பட்சத்தில் நாம் நம் மன நிலைக்குட்பட்டே தானே காரியம் சமைக்கிறோம். அடுத்தவர் மன நிலைகளை பற்றி நாம் கவலையே படுவதில்லையே, *

*இரண்டாவதாக நமக்கு எது தேவை என்பதை சரியாக தீர்மானிக்காத நிலைகளே நம் தேவைகளை துரிதப்படுத்துகின்றன. *

*Plenty of options in front of eyes is the biggest enemy for the human beings. *

*நம் கண் முன்பு இருக்கும் தேர்வு செய்யும் உரிமைகள் தரக்கூடிய சுதந்திரம், அதுவும் நம்மை அலைக்கழிக்க நாம் நமது குறிக்கோளை தொலைக்க ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.*

*ஒரு சிறிய நேரத்தில் பல பாடம் சொல்லித் தந்த அந்த ஓலா டிரைவர், அவனுக்கு நன்றி கூறினேன், *

*நான் மாறுவேனா என்பது தெரியாது. ஆனால் இன்று விதைக்கப்பட்ட இந்த எண்ணம் இனி அடிக்கடி தலையெடுக்கும். *

*அப்படி தலையெடுக்கும் பட்சத்தில் ஒரு நாள் நிச்சயம் என் அறிவு என் மனதை ஜெயித்துவிடும். *

*நானும் மாறிவிடுவேன் என்ற நம்பிக்கையோடு ………

வணக்கம்

Leave a Reply