தோல்வி

​வீரமும் பராக்கிரமும் மிக்க மன்னன் ஒருவன் போரில் தோற்றுவிட்டான். எதிரி நாட்டு மன்னன், தோற்றுவிட்ட மன்னனை சங்கலியால் பிணைத்து தனது அரசவைக்கு இழுத்து வரச் செய்தான்.

“எங்கே உனது கோட்டை? ஹா…ஹா…ஹா…” என்று எகத்தாளமாக சிரித்தான்.

“இங்கே இருக்கிறது எனது கோட்டை!” என்று தனது மார்பின் மீது கைவைத்து கம்பீரத்துடன் சொன்னான் இழுத்து வரப்பட்ட மன்னன்.

அவன் சும்மா சொல்லவில்லை. நிரூபித்து காட்டினான்.

சிறையில் இருந்த‌ப‌டியே த‌ன் எண்ண‌ங்க‌ளை கூர்தீட்டி, தப்பிப்பதற்குரிய திட்டங்களை வகுத்து, க‌டுமையான க‌ட்டுக் காவ‌லையும் மீறி சிறையில் இருந்து எப்படியோ த‌ப்பினான். பிறகு காட்டிலிருந்தபடியே கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தனது ஆதரவாளர்களை தேடி கண்டுபிடித்து ஒரு பெரும் படையை திரட்டினான்.  தகுந்த நேரத்திற்காக காத்திருந்தவன் தன்னை சிறைபிடித்த மன்னன் மீதும் அவன் நாட்டின் மீதும் எதிர்பாராத நேரத்தில் மோதி வெற்றிகொண்டான்.

“கதைல கேக்குறதுக்கு நல்லாத் தான் இருக்கு. ஆனா, நிஜத்துல இதெல்லாம் சாத்தியமா?” என்று தானே கேட்கிறீர்கள்.

அட இது நிஜ கதை தாங்க!

சிறையில் இருந்து தப்பித்து படைகளை திரட்டி போரில் வெற்றி வாகை சூடிய மன்னன் வேறு யாருமல்ல நம் கல்லணை கட்டிய கரிகாலன் தான்.

சோதனைகள் அடுக்கடுக்காக சூழ்ந்தபோது அவற்றை தன்னம்பிக்கையுடன் தகர்த்தெறிந்து வெற்றி கொண்ட கரிகால சோழனை 2000 ஆண்டுகளுக்கு பிறகும் நினைவு கூர்கிறோம். (கரிகாலன் வாழ்ந்த காலம் கி.மு.180. அதாவது 2195 ஆண்டுகளுக்கு முன்பு). தப்பிப்பது கடினம் என்று நினைத்து சிறையிலேயே கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தால் கல்லணை ஏது காவியங்கள் போற்றும் கதாநாயகன் ஏது?

‘தோல்வி’ என்கிற ஒரு வார்த்தையை சரியாக புரிந்துகொண்டு அதன் அர்த்தத்தை தன் அகராதியில் ஒருவர் திருத்தி எழுதவதன் மூலம் மிகப் பெரிய சாதனையாளராக மாறலாம்.

தோல்வி என்றால் என்ன தெரியுமா?

தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று அர்த்தம்.

தோல்வி என்றால் நீங்கள் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் ஏதோ விலைமதிப்பற்ற ஒன்றை கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் நீங்கள் முட்டாளாக இருந்தீர்கள் என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் யாரிடமோ எதனிடமோ ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தீர்கள் என்று அர்த்தம்

தோல்வி என்றால் அது கேவலம் கிடையாது.
நீங்கள் எதையோ முயற்சித்தீர்கள் என்று அர்த்தம். (ஒரு முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு தானே தோல்வியோ வெற்றியோ கிடைக்கும்!)

தோல்வி என்றால் உங்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் வேறு வழிகளில் அதை அடைய முயற்சிக்க வேண்டும் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் நீங்கள் தாழ்ந்தவர் என்ற அர்த்தம் கிடையாது.
நம்மிடம் சரிசெய்துகொள்ளக் கூடிய குறைகள் சில இருக்கிறது என்று அர்த்தம்.

தோல்வி என்றால் வாழ்க்கையை வீணடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம் கிடையாது.
தோல்வி மட்டுமே கொடுக்க கூடிய விலைமதிப்பற்ற பாடங்களை நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் உங்கள் முயற்சியை கைவிட்டுவிடவேண்டும் என்ற அர்த்தம் கிடையாது.
நீங்கள் இன்னும் கடினமாக முயற்சி செய்யவேண்டும் என்று அர்த்தம்.

தோல்வி என்றா நம்மால் எப்போதுமே முடியாது என்ற அர்த்தம் கிடையாது.
கிடைக்கவேண்டிய வெற்றி கொஞ்சம் தாமதமாக சிறப்பாக கிடைக்கும் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் கடவுள் நம்மை கைவிட்டுவிட்டார் என்று அர்த்தம் கிடையாது.
கடவுள் நமக்காக வேறு ஏதோ நல்ல திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

தோல்வி என்றால் நம் கதை முடிந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது.
புதிதாக வித்தியாசமாக முயற்சிக்க நமக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது என்று அர்த்தம்.

தோல்வி என்பது வெற்றியின் நேரெதிர் கிடையாது. தோல்வி என்பது வெற்றியின் ஒரு அங்கம்.
தோல்வி என்னும் படிக்கட்டுக்களை தாண்டாமல் வெற்றி என்னும் சிகரத்தை எவரும் எட்டமுடியாது.

அடுத்த முறை உங்களிடம் ‘தோல்வி’ என்கிற வார்த்தையை எவரேனும் கூறினால், “தோல்வியா? நம்ம அகராதியில அதுக்கு அர்த்தமே வேறப்பா!” என்று இந்த கதையையும் இந்த பதிவையும்  நீங்கள் எடுத்து விடவேண்டும்.  செய்வீர்களா?

Leave a Reply