தோல்வியல்ல

​மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த அந்த செல்வந்தருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பொறுப்புக்கள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு தான் ஓய்வு பெறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 

அவருக்கு ஒரே மகன். மகனை ஒழுக்கமுடன் வளர்த்து வந்தபோதும் ஒரு தைரியமோ ஆண்மையோ இல்லாமல், ஒரு சிறு பிரச்னையை சவாலை கூட எதிர்கொள்ள பக்குவமின்றி அவன் வளர்ந்து வந்தான். மகன் இப்படியிருக்கும்போது அவனிடம் எப்படி வணிகத்தை ஒப்படைக்கமுடியும்?

எனவே அவனை தனக்கு தெரிந்த ஒரு மல்யுத்த பயிற்சியாளரிடம் அழைத்துச் சென்றான்.

பயிற்சியாளர் சொன்னார், “உங்கள் மகனை நான் எனது மல்யுத்த பள்ளியில் சேர்த்துக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் மகனை இரண்டு மாதங்கள் இங்கே விட்டுவிட்டு செல்லவேண்டும். இந்த இரண்டு மாதமும் நீங்கள் அவனை திரும்பி கூட பார்க்கக்கூடாது. 60 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு அவனது முன்னேற்றம் குறித்து திருப்தி ஏற்படும். அதுமட்டுமல்ல அவனை குறித்த பெருமிதமும் ஏற்படும் வண்ணம் அவன் மாறியிருப்பான்” என்றார்.

செல்வந்தனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இவர் தான். எனவே நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு மகனை அங்கே விட்டுவிட்டு சென்றார். அறுபது நாட்களுக்கு மகனைப் பற்றிய எந்த கவலையுமின்றி தனது வணிகத்தில் கவனம் செலுத்தினார்.

சரியாக இரண்டு மாதங்களுக்கு பிறகு பயிற்சியாளர் ஒரு மல்யுத்த போட்டியை ஏற்பாடு செய்து, அதில் செல்வந்தனின் மகனையும் வேறொரு திறமையான மல்யுத்த வீரரையும் பங்கேற்க செய்தார்.

போட்டி துவங்கியபோது, தனது மகனுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் வீரரை பார்த்தவுடன், செல்வந்தருக்கு தூக்கி வாரிப்போட்டது. நல்ல கட்டுமஸ்தான உடலுடன் மிருக பலம் பொருந்தி காணப்படும் இவரை எங்கே தன் மகன் ஜெயிக்கப்போகிறான் என்று கருதி முகம் வாடிப்போனார்.

செல்வந்தர் எதிர்பார்த்தது போலவே, எதிராளி விட்ட முதல் குத்திலேயே இவர் மகன் கீழே சுருண்டு விழுந்தான். ஆனாலும் சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு எழுந்து, தனக்கு தெரிந்த துளியூண்டு வித்தையை காண்பித்தான். அப்படியும் எதிராளியின் குத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டு விழுந்தான். இப்படியே பல முறை நடந்தது.

இதை பார்த்துக்கொண்டிருந்த அவனது தந்தைக்கோ ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது. இருப்பினும் எதையும் சொல்லத் துணியவில்லை.

இறுதியில் செல்வந்தரின் மகன் தோற்றுவிட, எதிராளி ஜெயித்துவிட்டான்.

பயிற்சியாளர் செல்வந்தரிடம் திரும்பி, “உங்கள் மகன் எப்படி பெர்ஃபாமன்ஸ் செய்தான் பார்த்தீர்களா? அதில் அவன் வீரத்தை கவனித்தீர்களா?”

“என்னத்தை சொல்றது…. அவனை நினைச்சா எனக்கு வெட்கமா இருக்கு. ரெண்டு மாசம் பயிற்சி எடுத்தும் கூட பிரயோஜனமில்லையே. அவனுக்கு ஆண்மை, வீரம் இதெல்லாம் இனி வரும்கிற நம்பிக்கை எனக்கு இல்லே…”

பயிற்சியாளர் சொன்னார்…”உங்க அறியாமையை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. வெற்றி, தோல்வி இதையெல்லாம் மேலோட்டமாத் தான் நீங்க பார்க்குறீங்க. ஒவ்வொரு முறையும் உங்க பையன் கீழே விழும்போதும், திரும்பி தானா எழுந்து நிக்கிற தன்னம்பிக்கை அவனுக்கு இருந்ததை கவனிச்சீங்களா? கீழே விழுந்ததைவிட மேலே அதிகம் எழுந்தான். என்னைப் பொருத்தவரைக்கும் அது தான் வெற்றி. ஒரு உண்மையான வீரனிடம் இருக்கவேண்டியது அது தான்! கீழே விழுவது தோல்வியில்லை. விழுந்து கிடப்பது தான் தோல்வி. தோல்வியிலிருந்து பாடம் கற்காமல் போனால் அது தான் உண்மையான தோல்வி. இப்போது சொல்லுங்கள் உங்கள் மகனுக்கு கிடைத்தது வெற்றியா தோல்வியா?”

செல்வந்தனுக்கு கண்கள் திறந்தன. “நீங்கள் சொல்வது உண்மை தான். என் மகனுக்கு சுயமாக எழுந்து நிற்கவேண்டும் என்கிற தன்னம்பிக்கை இருக்கிறது. இது போதும். இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்! மிக்க நன்றி!!” என்று கூறிவிட்டு அவருக்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டு மகனை அழைத்துச் சென்றார்.

நாம் ஏதேனும் ஒரு புதிய செயலை செய்யும்போது உடனடி பலன்களை எதிர்பார்க்கக்கூடாது. அந்த செயலை நாம் செய்யும் போது நமக்கு கிடைக்கும் அனுபவமும், அதை முடிக்க நாம் மேற்கொண்ட முயற்சிகளும் விலை மதிப்பற்றவை. வாழ்க்கையில் எல்லாமே சுலபமாகவே இருந்தால் வெற்றியின்போது அது ருசிக்காது. பல தோல்விகளுக்கும் இடறி விழுதல்களுக்கும் பிறகு கிடைக்கும் வெற்றியே மகத்தான ஒன்று.

தோல்வியின் போதும் கீழே விழும்போதும் நமக்கு கிடைக்கும் பாடங்களையும் அனுபவங்களையும் வைத்துக்கொண்டு வெற்றிக்கான பயணத்தில் தொடர்ந்து முன்னேறவேண்டும். அது தான் உண்மையான வெற்றி!

Leave a Reply